கமல் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ‘சின்ன கல்லு பெத்த துட்டு’ என்ற வசனம் உண்டு. குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம், அந்த வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களால் பயன்படுத்தப்படுவதுண்டு.
அதனைச் சாதிப்பதற்கு அளப்பரிய உழைப்பைக் கொட்ட வேண்டும்; அதற்கு முன் சிறப்பாகத் திட்டமிட வேண்டும்; ஒட்டுமொத்தமாகச் சீரிய கவனத்தைக் குவிக்க வேண்டும்.
திரையுலகில் வெகு சில குழுவினர் அதனைத் திறம்படச் சாதித்துக் காட்டியுள்ளனர். ‘ஹனு மன்’ படத்தின் வெற்றியும் அவ்வரிசையில் இணைந்துள்ளது.
பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள ‘ஹனு மான்’ படத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், வெண்ணிலா கிஷோர், ராஜ் தீபக் ஷெட்டி, கெட்டப் ஸ்ரீனு ஆகியோருடன் சமுத்திரக்கனி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் முதல் ‘சூப்பர்ஹீரோ’ திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இப்படைப்பு தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வெளியாகியுள்ளது.
சரி, படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?
சூரிய ஒளியும் ‘சூப்பர் பவர்’ரும்!
ஒரு சிறுவன் தனது பெற்றோரிடம் தான் சூப்பர் ஹீரோ ஆக வேண்டுமென்று மன்றாடுகிறார்.
சக்திமான், ஸ்பைடர்மேன் படைப்புகளைப் பார்த்துவிட்டு, வீட்டில் அதேபோன்று செய்துகாட்டிக் காயமுறுகிறார்.
அதனால் கோபமுறும் பெற்றோர், அச்சிறுவனைக் கன்னாபின்னாவென்று திட்டி அடிக்கின்றனர்.
ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு பெற்றோர் இல்லையே என்று நண்பன் ஸ்ரீயிடம் கேட்கிறார் அச்சிறுவன்.
அதன்பிறகு, வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அந்த சிறுவனின் பெற்றோர் ஒரு தீ விபத்தில் இறந்து போகின்றனர். சூப்பர் ஹீரோ ஆசைக்குத் தடையாக இருக்கின்றனர் என்று எரியும் வீட்டுக்குள் வைத்து அவர்களைப் பூட்டியது அந்தச் சிறுவன் தான்.
பெரியவனாக வளர வளர, சூப்பார் ஹீரோ ஆகும் ஆசையும் விஸ்வரூபமெடுக்கிறது. அந்த நபரின் பெயர் மைக்கேல் (வினய் ராய்).
அவரது சூப்பர் ஹீரோ கனவுக்கு அறிவியல்பூர்வமாகத் தான் கண்டுபிடிப்பவற்றைக் கொண்டு உதவி வருகிறார் நண்பன் ஸ்ரீ (வெண்ணிலா கிஷோர்).
இந்த முன்கதைக்குப் பிறகு, அஞ்சனாத்ரி எனும் மலைப்பிரதேசக் கிராமத்திற்குக் கதை தாவுகிறது.
அஞ்சம்மா (வரலட்சுமி) எனும் பெண், திருமண வயதைக் கடந்தபிறகும் முதிர்கன்னியாகக் கிராமத்திலேயே வாழ்கிறார். வீடு, தோட்டம், தம்பி ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) மீதான பாசம் என்று வாழ்ந்து வருகிறார்.
ஹனுமந்துவோ உண்டி வில் அடிப்பது, திருடுவது, வேலை வெட்டி செய்யாமல் ஊர் சுற்றுவது என்றிருக்கிறார். ஆனால், சிறு வயதில் இருந்து காதலித்து வரும் மீனாட்சியைப் (அம்ரிதா) பார்க்கும்போதெல்லாம், அவரது மனதில் ரசாயன மாற்றம் நிகழ்கிறது.
ஒருமுறை விடுமுறைக்காக ஊருக்கு வந்த மீனாட்சியின் காதலைப் பெறுவதற்காக, அவர் பின்னாலேயே சுற்றுகிறார் ஹனுமந்து.
அப்போது, ஊர் காவலரான கஜபதியோடு (ராஜ் தீபக்) குஸ்தி சண்டையிட்டு ஒரு நபர் படுகாயமடைகிறார்.
மருத்துவரான மீனாட்சி தைரியமாக முன்வந்து சிகிச்சைகள் அளிப்பதோடு, கஜபதியை எதிர்த்துக் கேள்விகள் கேட்கிறார். கொள்ளையர்கள் குறைந்துபோன பின்னும், ஊருக்குக் காவலர் எதற்கு என்று கேட்கிறார்.
கோபமுறும் கஜபதி தனது ஆட்களை அனுப்பி மீனாட்சியைக் கொல்லச் சொல்கிறார்.
ஒருநாள், பேருந்தில் ஏறும் மீனாட்சியின் பின்னாலேயே செல்கிறார் ஹனுமந்து. கஜபதியின் ஆட்கள் அந்த பேருந்தை மறித்து மீனாட்சியைத் தாக்க முற்பட, தனது குறி பார்த்து தாக்கும் திறமையால் அவரைக் காக்க முனைகிறார்.
அந்த முயற்சியின்போது, கஜபதியின் அடியாட்கள் ஹனுமந்துவை அடித்து மலையில் இருந்து வீசுகின்றனர். கீழே ஓடும் ஆற்று நீரில் விழும் ஹனுமந்து, நீரின் அடியே செல்கிறார்.
அவரது கையில் மீனாட்சியின் தங்கச் சங்கிலி இருக்கிறது. அது நழுவிவிட, அதனைப் பிடிக்க முயல்கிறார்.
அது ஒரு சிப்பியின் மீது கிடப்பதைக் காண்கிறார். அதனை எடுக்க முற்படும்போது, சிப்பியினுள் இருக்கும் சக்தி வாய்ந்த கல் ஒன்றையும் சேர்த்து மேலெடுத்து வருகிறார்.
அந்த கல் ஹனுமந்து கையிலேயே இருக்கிறது. அதன் மீது சூரிய ஒளி பட்டதும், அவரது வாழ்வே தலைகீழாகிறது.
அவரது காயங்கள் தானாக ஆறுகின்றன. யானை பலம் அவருக்குள் ஊறுகிறது.
முதலில், ஹனுமந்துவாலேயே இதனை நம்ப முடிவதில்லை. மெதுமெதுவாக, அவரது சக்தி வெளியுலகுக்குத் தெரிய வருகிறது.
ஒருகட்டத்தில், அந்தக் கல்லின் துணையோடு யாராலும் வெல்ல முடியாத கஜபதியையே அடித்து துவம்சம் செய்கிறார் ஹனுமந்து. அதன் மூலமாக, மீனாட்சியிடம் முதன்முறையாக நன்மதிப்பையும் பெறுகிறா.ர்
ஆனால், அந்தக் கல்லைக் களவாடச் சில சதிகள் அரங்கேறுகின்றன. அதன்பிறகு, ஹனுமந்து வாழ்க்கை என்னவானது? அவரது காதலை மீனாட்சி புரிந்துகொண்டாரா? இந்தக் கதையில் மைக்கேலின் சூப்பர்ஹீரோ ஆசை எத்தகைய பங்கை வகிக்கிறது என்று சொல்கிறது மீதிப்பாதி.
சிறப்பான விஎஃப்எக்ஸ்!
தேஜா சஜ்ஜா இதற்கு முன் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதெல்லாம் வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டவை.
ஆனால், ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை பெறுவதற்கு ஏற்றதொரு கதையாக இதனைத் தேர்ந்தெடுத்த வகையில் அவரது புத்திசாலித்தனம் தெரிகிறது.
முக்கியமாக, ஒரு பிரேமில் கூட ‘அதீத ஹீரோயிசம்’ துருத்தலாகத் தென்படாதபடிக் கவனமாகச் சில காட்சிகளும் வசனங்களும் சேர்க்கப்பட்டிருப்பது தேஜாவின் ‘சாக்லேட் பாய்’ இமேஜை மெல்ல ஒரு படி மேலுயர்த்தியிருக்கிறது.
நாயகி அம்ரிதா தமிழில் லிப்ட், பிகில் உட்படச் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் அவரைப் பல மொழி ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
வரலட்சுமி சரத்குமார் நாளுக்கு நாள் நடிப்பில் மெருகேறி வருகிறார் என்பதற்கு ‘ஹனு மான்’ ஒரு சான்று.
அவருக்கும் ஆக்ஷனில் ஸ்கோர் செய்ய ஒரு காட்சி உண்டு; அந்தக் காட்சிக்குப் பெண்களிடம் இருந்து கைத்தட்டல்கள் பெருக்கெடுக்கின்றன.
வில்லனாக இதில் வினய் ராய் வருகிறார். டாக்டர், எதற்கும் துணிந்தவன், துப்பறிவாளன் போல இதிலும் கோட் சூட் அணிந்துகொண்டு வில்லத்தனம் செய்திருக்கிறார்.
இன்னொரு வில்லனாக வரும் ராஜ் தீபக் ஷெட்டி, கஜினி வில்லன் பிரதீப் ராவத்தை நினைவூட்டுகிறார். அவரைப் போலவே, இவரும் நம்பிக்கையளிக்கும் நடிகராகக் காட்சியளிக்கிறார்.
சமுத்திரக்கனி இதில் நரைத்த தாடி, தலைமுடியுடன் தோன்றியிருக்கிறார். அவரது வேடம் புதிதல்ல என்றாலும் ரசிகர்களை ஈர்க்கும்.
வெண்ணிலா கிஷோர் இருந்தாலும், காமெடியில் சத்யாவும் கெட்டப் ஸ்ரீனுவும் கலக்கியிருக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஸ்டண்ட் கலைஞர் என்று குறைந்தபட்சம் 200 பேராவது திரையில் இடம்பெற்றிருப்பார்கள்.
தெலுங்கில் தயாராகித் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படம் என்பதைத் தாண்டி சிலரது குரல்களால் நம்மை ஈர்க்கிறது இப்படம்.
வரலட்சுமி தாண்டி ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் நண்பன் மற்றும் ஒரு குரங்குக்கு குரல் இரவல் தந்தவர்கள் நம்மைக் கவர்கின்றனர்.
‘ஹனு மன்’ படத்தின் சிறப்பே, மிகத்தேர்ந்த திறமையையும் உழைப்பையும் ஒருசேரக் கொட்டியிருப்பதே. அந்த வகையில் தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு இதமாக உள்ளது.
பெரும்பாலான பிரேம்களில் விஎஃப்எக்ஸ் உள்ளதையும், ஹனுமன் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு திரையில் மஞ்சள், காவி மற்றும் செம்பழுப்பு வண்ணங்களை இறைத்திருப்பது அருமை. கலரிஸ்ட் அஸ்வத்தின் உழைப்பு அதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
தேவையான இடங்களில் மட்டும் சிறப்பான விஎஃப்எக்ஸ் பணியைக் கொட்டி, மிகச்சில இடங்களில் கிராபிக்ஸ் வெளியே தெரியும்படி விட்டிருப்பதும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
சாய் பாபு தலரியின் படத்தொகுப்பில் காட்சிகள் மிக இறுக்கமாக அடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், முன்பாதியில் இருந்த சீர்மையும் நேர்த்தியும் பின்பாதியில் தளர்ந்திருப்பதைக் கவனித்திருக்கலாம்.
அனுதீப் தேவ், கௌராஹரி, கிருஷ்ணா சௌரஃப் மூவரும் இதில் இசையமைத்துள்ளனர்.
ஆலங்காயா ஆஞ்சனேயா, சூப்பர்ஹீரோ ஹனு மான் பாடல்கள் துள்ளலை விதைப்பவை என்றால், ஏற்கனவே இருக்கும் ஸ்ரீ ராமதூதா ஸ்தோத்திரம், ஹனுமான் சாலிசாவை விறுவிறுப்பூட்டும் இசையுடன் பிணைத்து தந்திருப்பது ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
இடைவேளைக்கு முன்பான சண்டைக்காட்சியில் கௌரா ஹரியின் பின்னணி இசை தந்திருக்கும் பிரமிப்பு அளப்பரியது.
ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் தயாரிப்பு வடிவமைப்பு அஞ்சனா த்ரி எனும் கிராமத்தையும் மைக்கேலின் ஆய்வகத்தையும் நம்பும்படியாகக் காட்டியுள்ளது.
ஹனுமன் புராணத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களை டைட்டில் காட்சியிலேயே சொல்லியிருப்பதும், அதன் வழியே படத்தின் கதையிலிருக்கும் முக்கிய திருப்பத்திற்கான ஆரம்பத்தைக் கூறியிருப்பதும் அருமை.
இயக்குனர் பிரசாந்த் வர்மா புதியதொரு சூப்பர் ஹீரோ கதையை யோசித்ததாகச் சொல்ல முடியாது.
ஆனால், தனது மனதிலிருக்கும் கதைக்குப் புதிதாக உருவம் தந்திட முடியும் என்ற நம்பிக்கையே திரையில் பளிச்சிடுகிறது.
ஆகச்சிறந்த ஒருங்கிணைப்பு!
கோழை ஒருவனுக்கு அபார ஆற்றல் கிடைத்து அவன் சாகசங்கள் செய்வான் என்பது ‘அட்வெஞ்சர் ஆக்ஷன்’ கதைகளுக்கான பொதுவிதியாகவே இருந்து வருகிறது.
ஆதலால், ‘ஹனு மான்’ படத்தின் கதை புதியதல்ல; இது போன்றதொரு கதை, இதே பெயரில் தெலுங்கில் ஏற்கனவே வந்திருக்கிறது.
காட்சிகளும் கூட ஏற்கனவே சில படங்களில் நாம் பார்த்துப் பழகியவை தான். ஆனால், அந்த எண்ணம் மனதில் படியாதவாறு மிகச்சுவாரஸ்யமான காட்சியாக்கத்தால் அதனை மறக்கடிக்கிறார்.
இப்போதெல்லாம் ‘ஹீரோயிசம்’ தூக்கலாகத் தெரிய வேண்டுமென்ற பேராசையில், ஹீரோ எந்நேரமும் பத்து அடியாட்களை துவம்சம் செய்வது போலவே காட்சிகள் வடிக்கப்படுகின்றன.
எம்ஜிஆர் படங்களில் முதல் இரண்டு அடிகளை அவர் வாங்கும் வரை பொறுமை காக்கும் ரசிகர்கள் மூன்றாவது தாக்குதலின்போது கூக்குரலிடுவார்கள்.
அந்த பில்டப்பை பெரும்பாலான இயக்குனர்கள் நினைவில் இருத்தாதது ரொம்பவே ரசிகர்களைக் கஷ்டப்படுத்துகிறது.
அந்த தவறை இயக்குனர் பிரசாந்த் வர்மா மறந்தும் செய்யவில்லை. அதனாலேயே, ‘டெம்ப்ளேட்’டான காட்சிகள், கதை என்றபோதும் ‘ஹனு மான்’ நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
இதில் ‘இந்துத்துவம்’ போதிக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன.
ஆனால் ஆதி புருஷ் உள்ளிட்ட சமீபகாலப் படங்களைப் போல அவை நம்மைச் சோதிப்பதில்லை.
மாறாக, சரியான விகிதத்தில் அதுவரை சொல்லப்பட்டு வந்த கதையோடு அவ்விஷயங்கள் பொருந்தியிருக்கின்றன.
கொஞ்சம் ‘ஓவர்டோஸ்’ ஆகியிருந்தாலும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்காது. எவ்விதச் சார்பும் இல்லாத பார்வையாளர் மனதில் இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்தும் ஹனு மான், இந்துத்துவத்தை விரும்பும் ஒருவருக்குக் கூடுதல் ஈர்ப்பைத் தருவதில் வியப்பிருக்காது.
அதனாலேயே, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி வசூலை ஈட்டி வருகிறது ‘ஹனு மான்’.
தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாமல் ஸ்பானிஷ், கொரியன், ஜப்பானிஷ் மொழிகளிலும் ‘டப்’ ஆகி வெளியாகிறது.
இதுவே ‘ஹனு மான்’ வெற்றி மீது படக்குழு கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
எல்லாமே சரியான விகிதத்தில் அமைந்தால் வெற்றி கிட்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
– உதய் பாடகலிங்கம்