பரிசாக கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும்!

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் நடந்தன. இந்தப் போட்டியில் அதிக எண்ணிக்கையில், 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரர் பரிசு பெற்றார்.

இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி கார் பரிசு வழங்கினார். 11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி தமிழரசனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ராய வயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் சின்ன கருப்பு காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த அமர்நாதன் என்பவரின் காளை சிறந்த காளை இரண்டாவது பரிசு பெற்றது.

இந்தக் காளைக்கு அலங்கை பொன்குமார் சார்பில் கன்றுடன் கூடிய நாட்டின பசு மாடு வழங்கப்பட்டது.

இதனிடையே சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு பெற்ற பிரபாகரன்,  தனக்கு “கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்தக் கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறோம். உயிரைப் பனையம் வைத்து விளையாடுகிறோம், இதற்கு கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்.

மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் அரசு வேலை தேடிச் சென்று கொடுக்கப்படுகிறது. அதுபோல் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற அரசு வேலை வழங்க வேண்டும். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like