தாய் தலையங்கம்:
புத்தாண்டுக் கொண்டாடத்திற்குப் பிறகு, சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல செயல்களை மறந்து விட்டார்கள். குறிப்பாக ஒன்றை மட்டும் சுலபமாக மறக்க மாட்டார்கள்.
அது சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு தென் மாவட்டங்களில் அதீத மழைப் பொழிவு உருவாக்கிய பாதிப்பு.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்த வெள்ளப் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வரை தரப்பட்டு இருக்கிறது.
வெள்ள சேதடைந்த கணக்கிட மத்திய நிபுணர்கள் குழு வந்து பார்வையிட்டு தமிழக அரசின் செயல்பாடுகளுக்குப் பாராட்டியும் தெரிவித்து சென்று இருக்கின்றது.
அதே சமயம் தென் தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த அதீத கனமழை ஒரே நாளில் 95 செ.மீ அளவுக்கு பெய்து இருக்கிறது.
அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டு இருக்கிறார்கள். விவசாயம் சீர்குலைந்து இருக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமே உருக்குலைந்து இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரும், சக அமைச்சர்களும் உயரதிகாரிகளும் தூத்துக்குடி எம்.பியான கனிமொழியும் இன்னும் பலக் கட்சித் தலைவர்களும் நேரடியாக அங்கு சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் விஷேச பிரதிநிதியாக வந்து பார்வையிட்டு தன்னால் இயன்ற அளவுக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்.
சேதங்கள் பார்வையிட்டு அவரே இத்தகைய பெரும் சேதத்தைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் சொல்லிவிட்டுச் சென்றிருப்பது, இன்று வரை சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அதேசமயம் மத்திய அரசிடமிருந்து தென் தமிழகப் பெரு வெள்ள சேதத்திற்கு உரிய நிவாரண நிதி மத்திய அரசிடமிருந்து இதுவரை தரப்படாத நிலையும் நீடிககிறது.
பாதிக்கப்பட்ட மக்களைக் கைத்தூக்கி விடுவதில் பாரபட்சம் பார்க்க வேண்டியது இல்லை. எத்தகையை உள் அரசியலும் இருக்க வேண்டியதில்லை. உரிய நேரத்தில் உதவிகள் கிடைப்பது பாதிக்கப்பட்ட மக்களை சற்றேனும் ஆறுதல் படுத்தும்.
வள்ளுவர் மொழியில் சொன்னால், இடுக்கன் வரும் போது உரிய நேரத்தில் உதவ வேண்டும். தேர்தல் அரசியலைப் பார்க்காமல் தமிழக மக்களுக்கு, குறிப்பாக தென் தமிழக மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டிய தருணம் இது.