பொன்முடி தலைக்கு மேல் இன்னும் சில கத்திகள்!

நேற்று வரைக்கும் உயர்க்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.

கடந்த 2006-2011 ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில் அவர் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார்.

அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக் குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக  2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்து 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று முன் தினம் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.

பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிமன்றம், இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் உடனடியாக ஜெயிலுக்குச் செல்ல தேவை இல்லை.

பொதுவாக 2 ஆண்டு சிறை என தீர்ப்பளிக்கப்பட்டால், ஒருவரது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவி பறிபோய்விடும்.

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோய் உள்ளது.

கடந்த தேர்தலில் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்றார்.

இந்தத் தொகுதி காலியாக இருப்பதாக விரைவில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

6 மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைத் தேர்தல் வர இருப்பதால், அந்த தேர்தலுடன் சேர்த்து திருக்கோவிலூருக்கும் தேர்தல் நடைபெறும்.

3 ஆண்டுகள் ஜெயில் தண்டனைப் பெற்றுள்ள பொன்முடி, இன்னும் 9 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

விழுப்புரம் மாவட்ட திமுகவில் பொன்முடி, அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர்.

சிறை செல்வதன் மூலம், அங்கே அவரது ’ஆட்சி’ முடிவுக்கு வருகிறது.

மேலும் சில கத்திகள்:

பொன்முடி மீது மேலும் சில வழக்குகளும் உள்ளன.

கடந்த 1996- 2001ஆம் ஆண்டு கால கட்டத்தில் பொன்முடி போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.

அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இருந்து அவரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால், அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தூசு தட்டி மீண்டும் விசாரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் எடுக்க பொன்முடி மகனும், திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அந்த கால கட்டத்தில் பொன்முடி, அமைச்சராக இருந்தார். இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளில் எப்போது தீர்ப்பு வரப்போகிறது என்பது தெரியவில்லை.

-பி.எம்.எம்.

You might also like