ஆன்ட்ரியா – பன்முகத் திறமை கொண்ட பேரழகி!

சில திரை ஆளுமைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், மிகப்பெரிய இடைவெளிகளில் அவர்களைக் காணும் எண்ணம் ரசிகர்களிடம் மிகுந்திருக்கும்.

அதற்குப் பல்வேறு களங்களில் அவர்கள் ஈடுபாடு காட்டுவதும் ஒரு காரணமாக அமையும். சமீபகாலத்தில் அதற்கேற்ற உதாரணங்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை ஆன்ட்ரியா.

பாடகி, நடிகை, மாடல், நிறுவன உரிமையாளர், சுயாதீன இசையமைப்பாளர் என்று பல்வேறு முகங்கள் அவருக்கு உண்டு.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மேடை நாடகங்கள் சார்ந்தியங்கிய அனுபவமும் உடையவர். அதுவே, சமகாலத் திரை நட்சத்திரங்களிடம் இருந்து அவரை வேறுபடுத்துகிறது.

பியானோ காதல்!

குழந்தைப் பருவத்தைக் கடந்து பதின்ம பருவத்தை எட்டுகையில் சுதந்திரத்தை உணர்வது வெகுசிலருக்கே வாய்க்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களது வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் தாங்களே தீர்மானிப்பவர்களாகத் திகழ்வார்கள்.

சென்னை பெரம்பூரைப் பூர்விகமாகக் கொண்ட ஆண்ட்ரியா, சென்னையை அடுத்துள்ள அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர்.

பாட்டனார் ஜெர்மையாவின் பெயரில் ஒரு தெருவே சென்னை புரசைவாக்கத்தில் உண்டு. அந்த அளவுக்குச் சமூகத்தில் பிரபலமானவர்களாக அவரது குடும்பத்தினர் விளங்கினாலும், பொருளாதார அளவில் நடுத்தர வசதி கொண்டவர்களாகவே இருந்தனர்.

‘பைக்கில் இருந்து கார், வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு என்று படிப்படியாகவே எங்கள் வசதி வாய்ப்புகள் பெருகின’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஆன்ட்ரியா.

அதேநேரத்தில் பெற்றோர் பியானோ கற்பதில் அவரைச் சிறுவயது முதலே ஈடுபடுத்தினர். அதுவே, இசையமைக்கும் திறமையை அவருக்குள் ஊற்றெடுக்கச் செய்திருக்கிறது.

‘பதினெட்டாவது வயதில் எனது தந்தை பியானோ வாங்கித் தந்தார். அதுவரை பியானோ வாசிப்பு தேர்வுகளுக்கு முன்னர் எனது நண்பர்கள் வீட்டில் இருக்கும் பியானோவைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன்’ எனும் ஆண்ட்ரியா, இப்போது தான் பாடல் வரிகள் எழுதுவதற்காகத் தந்தை வாங்கித் தந்த பியானோவை உபயோகித்து வருகிறார்.

முதல் நடிப்பு வாய்ப்பு!

சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் பயிலும்போதே, இசை தவிர்த்து நாடக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ஆண்ட்ரியா.

அதனைக் குறிப்பிடுகையில், ‘பியானோ வந்தபிறகு நான் நடிக்கச் சென்றுவிட்டேன்’ என்கிறார். கிரிஷ் கர்னாட்டின் நாகமண்டலாவில் தொடங்கிய நாடகப் பயணம் மெட்ராஸ் பிளேயர்ஸ், எவம் என்று தொடர்ந்தது.

அந்த நேரத்திலேயே, ஆன்ட்ரியாவைத் தேடிப் பல சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வமில்லை. அதற்குப் பதிலாகப் பின்னணி பாடும் வாய்ப்புகளை ஏற்றார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ தொடங்கிப் பல பாடல்களைப் பாடி வந்தார்.

நாடக நடிப்பின் தொடர்ச்சியாக, ‘கண்டநாள் முதல்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கார்த்திக் குமாரோடு ஒரு ஷாட்டில் கௌரவமாகத் தலைகாட்டியிருந்தார்.

அந்த காலகட்டத்தில், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ‘கற்க கற்க’ பாடலைப் பாடினார்.

அதன் மூலமாகக் கௌதம் மேனனுக்கு அறிமுகமாகி, அப்படத்தில் கமலினி முகர்ஜிக்கு ‘டப்பிங்’ பேசும் வாய்ப்பைப் பெற்றார்.

அதன் தொடர்ச்சியாகவே, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நாயகியாக நடித்தார்.

உண்மையைச் சொன்னால், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடிக்கையில் ஆண்ட்ரியாவின் வயது இருபத்திரண்டு.

காதல் நாயகியாக அறிமுகமாக வேண்டிய வாய்ப்புகளைத் தவிர்த்தவர், அதில் ஆறு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்தார்.

அவரது சினிமா ஆர்வம் எத்தகையது? ஏன் அவர் தொடர்ச்சியாகப் படங்கள் நடிக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு முதல் படத்திலேயே தனது தேர்வின் மூலமாகப் பதிலளித்திருக்கிறார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தன் மூலமாக, அப்போதைய இளைஞர்களிடையே புகழ்பெற்றார். தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம் படங்களின் வழியே ஆக்‌ஷன் பிரியர்களின் ‘குட்புக்’கில் இடம்பிடித்தார்.

தனித்துவமான தேர்வுகள்!

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வழியே இந்தியா முழுக்கத் தேடப்படும் குரலுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஆன்ட்ரியா.

அதேநேரத்தில், பின்னணி பாடுவதிலும் கூட ஒரு மாதிரியான பாடல்களையோ, தன்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளையோ அவர் ஏற்பதில்லை.

போலவே, சினிமா நடிப்பிலும் கூட மிகச்சில படங்களையே தேர்வு செய்கிறார்.

‘பிசாசு 2’, ‘கா’, ‘மாளிகை’ ஆகிய படங்கள் முழுதாகத் தயாராகி வெளியாகாமல் இருக்கின்றன.

அரண்மனை, அரண்மனை 3, வடசென்னை, தரமணி, உத்தம வில்லன் போன்ற தமிழ் படங்கள் தவிர்த்து லோஹம், அன்னயும் ரசூலும் போன்ற மலையாளப் படங்களில் அவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.

தமிழில் அவர் கௌரவ வேடத்தில் நடித்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் திரையில் வரும் நேரம் குறைவென்றபோதும், அந்த பாத்திரம் சிக்கல் நிறைந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த ஆண்டு வெளியான ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணாகத் தோன்றியிருப்பார்; அதிலிருந்து மீண்டு வரும் அனுபவத்தைத் திரையில் கடத்தியிருந்த விதம் பலரது பாராட்டுகளைப் பெற்றது.

ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின் முன்னிறுத்தப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, வெகுசாதாரண பெண்களின் வாழ்வனுபவங்களைத் திரையில் பிரதிபலிக்கிறார் ஆன்ட்ரியா.

அவரது அழகைக் கொண்டாடப் பெரும் கூட்டம் இல்லையென்றபோதும், தொடர்ந்து பேரழகியாகவே அவரது ரசிகர்களுக்குக் காட்சி தந்து வருகிறார்.

வெறுமனே கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற யோசனை இல்லாமல், தொடர்ந்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

சக திரைப்படைப்பாளிகளால் சிலாகித்துப் பேசப்படும் ஒரு மனிதராக விளங்குகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர், சுந்தர்.சியின் பேட்டியொன்றில் ‘நான் சந்தித்த நடிகைகளில் அப்பாவிப் பெண் என்று ஆன்ட்ரியாவைச் சொல்லலாம்’ என்றிருந்தார். தான் சொல்வது உண்மை என்றும் கூறியிருந்தார்.

சில நட்சத்திரங்களின் எளிமையையும் சட்டென்று பழகும் குணத்தையும் புகழ்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது, ஆன்ட்ரியாவின் வெகுளித்தனமான இயல்பையும் பாராட்டத்தான் வேண்டும்.

இவையனைத்தையும் ஒன்றுசேர்த்தால், ஆன்ட்ரியாவின் பிம்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்ணுருவங்கள் தென்படும். அதுவே அவரது சிறப்பு.

வயதைப் பொறுத்தவரை, 39யை பூர்த்தி செய்து நாற்பதை எட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா.

வாழ்வின் ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, ஒரு திரை ஆளுமையாகத் தொடரும் அவரது பயணம் இன்னும் பல உச்சங்களை எட்ட வேண்டும்.

ஆன்ட்ரியாவைத் தீவிரமாக உற்றுநோக்கும் விசிறியாக, நலம்விரும்பியாக, அதைத் தவிர்த்து வேறென்ன சொல்லிவிட முடியும்?

– உதய் பாடகலிங்கம்

You might also like