தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 சொத்து சேர்த்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.
இதையொட்டி பொன்முடியும், அவரது மனைவியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, “சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு பேருக்கும் தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், பொன்முடி, மற்றும் அவரின் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்காக 30 நாள்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
மேல் முறையீட்டுக்குப் பிறகும் தண்டனை உறுதி செய்யப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதைத் தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்தின் படி, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
இதனிடையே தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அமைச்சர் பதவியும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் வகித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்முடி போலவே அடுத்தடுத்து பல அமைச்சர்கள் சிக்குவார்கள் என்றும், அந்த வரிசையில், கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட 7 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கன்வே அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் தண்டனை பெற்று வரும் நிலையில், பொன்முடியின் இந்த நீதிமன்றத் தண்டனை தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.