எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ படத்தில் ‘கடவுள் எனும் முதலாளி’ பாடலின் இடையே ’என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற வரிகள் வரும்.
அதனைக் கேட்கையில், வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகி விட வேண்டும் அல்லது சம்பாதித்துக் கொழிக்க வேண்டுமென்ற விருப்பத்தைக் கொண்டுள்ளோர் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
கிட்டத்தட்ட அப்படியொரு கருத்தைத் தாங்கி வந்திருக்கிறது ஷாரூக்கான், டாப்சி பன்னு, விக்கி கௌஷல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டன்கி’.
முன்னாபாய் எம்பிபிஎஸ், பிகே, 3 இடியட்ஸ் படங்களின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இதனை இயக்கியுள்ளார்.
அவரது முந்தைய படங்களைப் போலவே, இதுவும் சிரிப்பையும் அழுகையையும் நெகிழ்ச்சியையும் நம்மில் ஒருசேர உருவாக்குகிறதா?
‘டன்கி’ என்றால்..?!
பிரிட்டனில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மனு ரந்த்வா (டாப்ஸி பன்னு), அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுவதில் இருந்து ‘டன்கி’ படம் தொடங்குகிறது.
தனது நண்பர்கள் பக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்) மற்றும் பல்லி கக்கட்டை (அனில் குரோவர்) அழைத்துக்கொண்டு, அவசர அவசரமாக அவர் துபாய் செல்கிறார். அங்கு அவர்களைச் சந்திக்கவிருக்கிறார் ஹார்டி எனும் நபர்.
விமானப் பயணத்தின்போது, தாங்கள் எவ்வாறு பஞ்சாப்பில் உள்ள லால்து நகரில் இருந்து பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தோம் என்பதை மனு நினைத்துப் பார்ப்பதுதான் முக்கால்வாசி படத்தை நிறைக்கிறது.
ஹோட்டலொன்றில் வேலை செய்யும் மனுவுக்கு, வட்டிக் கடனில் தனது தந்தை இழந்த பூர்விக வீட்டை மீட்க வேண்டுமென்பதே ஒரேயொரு ஆசை. அதற்குத் தனது உறவினர்கள் சிலர் போலத் தானும் லண்டன் சென்று வேலை செய்து சம்பாதிக்க எண்ணுகிறார்.
அவரைப் போலவே, தங்களது குடும்பத்தின் நிலையை உயர்த்த பக்குவும் பல்லியும் ஆசைப்படுகின்றனர். அதற்காக, ஒரு ஏஜெண்டை பிடித்து பிரிட்டன் செல்வதற்கான விசாவுக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், அந்த நபர் ஏமாற்றிவிடுகிறார்.
அந்த காலகட்டத்தில், அவ்வூருக்கு வருகிறார் ஹார்டி எனும் ஹர்தியால் சிங் தில்லான் (ஷாரூக் கான்).
ராணுவ வீரரான அவரது உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் அவர் அங்கு வந்திருக்கிறார்.
அந்த நபர் மனுவின் சகோதரர். ஆனால், ஒரு விபத்தில் அவர் இறந்தது ஹார்டிக்குத் தெரிய வருகிறது.
அக்குடும்பத்திற்கு எப்படியாவது தனது நன்றியைத் தெரிவிக்க விரும்பும் ஹார்டி, மனுவை லண்டனுக்கு அனுப்ப உதவும் வகையில் அவருக்கு ’குஸ்தி’ சண்டை கற்றுத் தருகிறார்.
பிறகு ஐஇஎல்டிஎஸ் தேர்வு பற்றி அறிந்து, அதற்குத் தயாராகும் வகையில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள மனுவையும் அவரது நண்பர்களையும் அழைத்துச் செல்கிறார்.
அங்கு, லண்டனில் கணவன் பிடியில் சிக்கியிருக்கும் தனது காதலியை அழைத்து வரும் நோக்கில் ஆங்கிலம் கற்க வந்த சுகியை (விக்கி கௌஷல்) அவர்கள் சந்திக்கின்றனர். நட்பு கொள்கின்றனர்.
கொஞ்சமாய் ஆங்கிலம் கற்றுக்கொண்டு, அவர்களனைவரும் பிரிட்டன் தூதரகத்தின் நேர்காணலுக்குச் செல்கின்றனர். அதில் பல்லியைத் தவிர வேறெவருக்கும் விசா கிடைக்கவில்லை. அவர் மட்டுமே பிரிட்டன் செல்கிறார்.
சில நாட்களில் சுகியின் காதலி பற்றி அவர் தகவல் தெரிவிக்கிறார். அதனைக் கேட்டதும், சுகி விபரீத முடிவொன்றை மேற்கொள்கிறார். அது அவர்களது மனதில் கனலை மூட்டுகிறது.
அதையடுத்து, எப்படியாவது லண்டன் செல்வது என்ற நோக்குடன் சட்டவிரோதமாகப் பல நாடுகளைக் கடந்து பிரிட்டன் செல்ல அவர்கள் முடிவெடுக்கின்றனர்.
அந்த பயணத்தில் அவர்கள் வெற்றி பெற்றனரா? அவர்களுடன் சென்ற ஹார்டிக்கு என்னவானது என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘டன்கி’யின் மீதமுள்ள திரைக்கதை.
இக்கதையில் சட்டவிரோதமாக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கான பெயரே ‘டன்கி’. கழுதைகளை அழைத்துச் செல்வதற்கான பாதை என்பதன் சுருக்கமே அது.
அதாகப்பட்டது, உயிருக்கு ஆபத்து அதிகம் என்று தெரிந்தும் மேற்கத்திய நாடுகளில் புகலிடம் தேடுபவர்கள் மட்டுமே அப்பயணத்தை மேற்கொள்வார்கள்.
அப்பயணம் எப்படிப்பட்டது என்பதையும், எது அப்படியொரு முடிவை நோக்கி அம்மனிதர்களைத் தள்ளுகிறது என்பதையும் சொன்ன வகையில் நம்மைக் கண்ணீரில் ஆழ்த்துகிறது இத்திரைப்படம்.
வசீகரிக்கும் நடிப்பு!
‘டன்கி’யில் முக்கியப் பாத்திரங்கள் அனைத்துமே நம் மனதில் நிச்சயம் நிலைக்கும். ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய படங்களில் கூட இந்த மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருக்கும்.
ஹார்டியாக வரும் ஷாரூக்கானுக்கு இதில் ஹீரோயிசம் காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காதல் போர்வையில் அதனை நிகழ்த்த வைத்திருக்கிறார் இயக்குனர்.
கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்கள் மட்டுமல்லாமல், மக்களை உணர்வெழுச்சிக்கு ஆளாக்குவதிலும் தான் ஒரு ‘கிங்’ என்று நிரூபித்திருக்கிறார் ஷாரூக்.
டாப்ஸிக்கு இதில் ரொம்பவே அழுத்தமான வேடம். பல்வேறுபட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் வாய்ப்பு. அதனைத் திறம்படத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ஷாரூக்கானுக்கு நிகரான இடம் இப்படத்தில் அவருக்குத் தரப்பட்டுள்ளது.
கௌரவ வேடத்தில் வரும் விக்கி கௌஷல், தான் வரும் காட்சிகள் அனைத்திலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார். அவரது தந்தை ஷாம் கவுஷல் இப்படத்தில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
விக்ரம் கோச்சார், அனில் குரோவர் இருவருமே ஷாருக் மற்றும் டாப்ஸியுடன் இணைந்து முன்பாதி முழுக்கச் சிரிப்பூட்டுகின்றனர்.
அதேநேரத்தில் பொமன் இரானிக்கு இதில் வாய்ப்பு குறைவு என்பதையும் சொல்லியாக வேண்டும். 3 இடியட்ஸ் படத்தில் வெளிப்பட்ட அவரது கலக்கலான நடிப்பை ஒப்பிட்டால், இப்படம் பத்தில் ஒரு பங்கு வாய்ப்பைக் கூட தரவில்லை.
இவர்கள் தவிர்த்து டாப்ஸி மற்றும் விக்ரம் கோச்சாரின் பெற்றோராக நடித்தவர்கள், தூதரகத்தைச் சார்ந்தவர்கள், சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஏஜெண்டாக வருபவர் என்று பலரும் நம் கவனத்தைக் கவர்கின்றனர்.
சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இதில் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கின்றனர். விஎஃப்எக்ஸின் பங்கை உணர்ந்து காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் அருமை.
குறிப்பாக, முன்பாதியில் ஷாரூக்கின் மெலிந்த கன்னத்தைச் சரிப்படுத்துவதில் விஎஃப்எக்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. பின்பாதியில், அவரது முகத்தில் தாடியைப் படரவிட்டு அதனைச் சரிக்கட்டியிருக்கிறார் இயக்குனர்.
ராஜ்குமார் ஹிரானியின் பெரும்பாலான படங்களில் ‘செட் வடிவமைப்பு’ திரையை ஆக்கிரமிக்கும்.
இதில் லால்து எனும் நகரைக் காட்டுமிடங்களிலும், டன்கி பயணத்தை மேற்கொள்ளும் காட்சிகளிலும் தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் சுப்ரதா சக்ரபர்த்தி, அமித் ரே மற்றும் கலை இயக்குனர் திலீப் ரோகடேவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது.
ப்ரீதம் இசையில் ‘லுட் புட் கயா’ பாடல் உடனடியாக நம் மனதைக் கவ்வுகிறது. இதர பாடல்கள் மெலிதாக நம்மில் ஊடுருவும் ரகம்.
அமன் பந்தின் பின்னணி இசையானது நெகிழ்வையும் வருத்தத்தையும் நம்மிடம் உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறது. அதற்கேற்ப நகைச்சுவைக் காட்சிகள் ஊடே அப்படிப்பட்ட தருணங்களைத் திரைக்கதையில் புகுத்தியிருக்கிறார் இயக்குனர்.
நாடு திரும்பும் டாப்ஸி பாத்திரம் ஒட்டுமொத்த வாழ்வையும் மனதுக்குள் ஓட்டிப் பார்ப்பதை ‘ஃபேட் இன்’, ‘ஃபேட் அவுட்’ துணையோடு காட்சித் துணுக்குகளை அடுக்குவதற்குப் பதிலாக, விஎஃப்எக்ஸ் உதவியோடு அக்காட்சிகளைக் கத்தரித்து அவரது கண் முன்னே மீண்டும் நிகழ்வது போலக் காட்டியிருப்பது அருமை.
ராஜ்குமாரே படத்தொகுப்பாளர் என்பதால், படத்தில் வேண்டாத காட்சிகள் என்று எதுவுமில்லை. ரொம்பவே கூர்மையாக ஷாட்கள் கோர்க்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், அவரது முந்தைய படங்களில் இருந்த திரைக்கதை நேர்த்தி இதில் குறைவு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
திரைக்கதையில் தொய்வு!
அபிஷித் ஜோஷி, கனிகா தில்லான் உடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்.
பிகே, 3 இடியட்ஸ், முன்னாபாய் எம்பிபிஎஸ் படங்களில் நெருக்கமாக அடுக்கப்பட்ட செங்கற்களைப் போலத் திரைக்கதை வடிக்கப்பட்டிருக்கும்.
ஏதேனும் ஒரு காட்சியை நீக்கினால் கூட, மொத்தக்கதையும் கலங்கலாகத் தெரியும். ‘டன்கி’யில் அந்த நேர்த்தி இல்லை.
தொடக்கக் காட்சிகள் முழுமையாக ‘3 இடியட்ஸ்’ படத்தை நினைவூட்டுகின்றன.
அதில் அமீர்கானை தேடி நண்பர்கள் இருவரும் வருவது போல, இதில் ஷாரூக்கானை தேடி மூன்று பேர் பயணம் மேற்கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
டாப்ஸியின் சகோதரர் விபத்தில் பலியானதாகச் சொல்வது, விசா வாங்கித்தராமல் ஏஜெண்ட் ஏமாற்றுவது, ஆங்கிலம் கற்றுத் தேற முடியாமல் கஷ்டப்படுவது போன்றவை ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன.
வெளிநாடு சென்று கஷ்டங்களை அனுபவிப்பதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே சிறப்பாக உழைத்துச் செயலாற்றலாம் என்பதே இப்படத்தின் மையமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்குச் செல்பவர்களின் வாழ்வு எப்படியெல்லாம் திசை மாறுகிறது என்பதையே இப்படம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இரண்டுக்கும் இடையிலான ஒரு புள்ளியில் திரைக்கதையின் சாராம்சம் நின்றுவிடுவது இப்படத்தின் மைனஸ்.
இவை அனைத்தையும் தாண்டி, இந்தப் படம் மிகமெலிதாக நாட்டுப்பற்றை விதைக்கிறது. கூடவே, நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகளால் முழுமையாகப் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான் என்று சொல்கிறது.
சில மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் ஆகலாம் என்று சொல்வதாக, இதில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் இருக்கும் பல நாடுகளை விமர்சிக்கிற வார்த்தைகள் அவை.
ராஜ்குமார் ஹிரானி தவிர வேறொருவரால் இப்படிப்பட்ட விமர்சனங்களை திரைக்கதையில் முன்வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அது போன்ற அம்சங்களே ‘டன்கி’யின் பலம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வழக்கத்திற்கு மாறான கதையமைப்போடு குடும்பத்தோடு சேர்ந்து ரசிக்கும்படியான காட்சிகளைக் கொண்டிருக்கிறது இப்படம்.
ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய படங்களோடு ஒப்பிட முடியாவிட்டாலும், தியேட்டரில் கோலாகலமான கொண்டாட்டத்தை உருவாக்கும் உள்ளடக்கம் இதில் உண்டு.
ஆங்காங்கே சிரித்து மிகச்சில இடங்களில் சிந்திக்க வைத்து நம்மை நெகிழ்வுக்கு உள்ளாக்கிய காரணத்தால் ‘டன்கி’யை தாராளமாகப் பார்க்கலாம்!
– உதய் பாடகலிங்கம்