‘டன்கி’ – என்ன செய்யக் காத்திருக்கிறது?

குமார் ஹிரானி – இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தாராளமாகச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாளி.

குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும், அவை ஒவ்வொன்றும் பார்வையாளர்களிடத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.

அதுவே, அவரது படங்கள் குறித்த எதிர்பார்ப்பினை முன்னதாகவே உருவாக்கும். அந்த வகையில், நடிகர் ஷாரூக்கானுடன் அவர் இணைந்து தந்துள்ள ‘டன்கி’ படம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஃபெவிகால் விளம்பரம் நினைவிருக்கிறதா?

தொண்ணூறுகளில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியை மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்.

அந்த வேளைகளில், சில பலசாலி வீரர்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானையும் ஒரு பொருளினை உடைப்பதற்காக முயன்று தோற்பதாகக் காட்டும் ‘பெவிகால்’ விளம்பரத்தையும் பார்த்திருப்போம்.

‘தம் லஹா ஹை’ என்ற கோஷத்துடன் ‘ஐலேசா’ பாடும் அந்த விளம்பரத்தை எவராலும் மறக்க முடியாது.

அதில் நடிகராகத் தோன்றியிருப்பார் ராஜ்குமார் ஹிரானி. அந்தச் சமயத்தில், அவர் விளம்பரப்பட உலகில் தீவிரமாக இயங்கி வந்தார்.

அதற்கடுத்த சில ஆண்டுகளில் அவர் ஒரு இயக்குனராக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டார். அந்த திரைப்படத்தின் பெயர் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’. தமிழில் இதுவே ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ என்ற பெயரில் கமல்ஹாசனை ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவ’ராகக் கொண்டாடச் செய்தது.

ஒரு விளம்பர நடிகர் எப்படி திரைப்பட இயக்குனர் ஆனார்? இந்தக் கேள்விக்கு விடை தேடிச் சென்றால், சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ராஜ்குமார் ஹிரானிக்கு இருந்த ஆர்வம் மிகப்பெரியது என்பது தெரிய வருகிறது.

‘மகன் மருத்துவராக வேண்டும்’ என்று பெற்றோர் ஆசைப்பட, ராஜ்குமாரோ ‘நான் நடிகன் ஆவேன்’ என்று பதிலளித்திருக்கிறார்.

பி.காம் படித்த அவரது ஆசையை நிறைவேற்ற, புனே திரைப்படக் கல்லூரியில் சேர்க்கச் சென்றிருக்கிறார் அவரது தந்தை சுரேஷ். ஆனால், அங்கு இயக்கம், படத்தொகுப்பு போன்ற துறைகளே கற்பிக்கப்பட்டன.

இயக்கத்திற்கான பிரிவில் போட்டி அதிகம் இருந்த காரணத்தால், படத்தொகுப்பினைத் தேர்ந்தெடுத்தார் ராஜ்குமார்.

அதன்பிறகு, விளம்பரத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது தான் ‘பெவிகால்’ உட்பட இந்தியாவே கொண்டாடிய பல விளம்பரங்களில் பங்கெடுத்தார்.

விது வினோத் சோப்ராவின் நட்பு!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இரண்டு இந்திப் படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய ராஜ்குமார், 2000ஆவது ஆண்டில் ‘மிஷன் காஷ்மீர்’ படம் வழியே விது வினோத் சோப்ரா உடன் இணைந்தார்.

அந்த காலகட்டத்தில், வழக்கத்திற்கு மாறான காட்சியாக்கத்திற்காகக் கொண்டாடப்பட்டார் விது வினோத் சோப்ரா.

‘பிளாக்’, ’தேவதாஸ்’ படங்களைத் தந்த சஞ்சய் லீலா பன்சாலி அவரது சீடர்தான். அப்படிப்பட்டவருடன் இணைந்து பணியாற்றியது, ராஜ்குமாருக்குள் இருந்த கதாசிரியரையும் இயக்குனரையும் விழித்தெழச் செய்தது. அந்த நட்பு அவரது திரையுலக வாழ்வையும் தீர்மானிப்பதாக அமைந்தது.

‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ படத்தில் நாயகனாக நடித்தவர் சஞ்சய் தத். உண்மையைச் சொன்னால், அதில் மாதவன், அனில் கபூர், ஷாரூக்கான் உள்ளிட்ட நாயகர்களே மையப் பாத்திரமான முன்னாவாக நடிப்பதாக இருந்தது.

பல்வேறு காரணங்களால் தடைகள் ஏற்பட்டு, இறுதியாக சஞ்சய் தத் அதனை ஏற்றார். அவரது தந்தையான சுனில் தத், அப்படத்திலும் அவரது தந்தை பாத்திரத்தில் தோன்றினார்.

இருவரும் இணைந்து திரையில் தோன்றிய ஒரே படமும் அதுவே. ஹீரோவாக சில படங்களில் நடித்து கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அர்ஷத் வர்ஸி, இதில் சர்க்யூட் ஆக நடித்துப் பெரும்புகழ் பெற்றார்.

மருத்துவமனைகளில் மருத்துவர்களும் இதரப் பணியாளர்களும் நோயாளிகளை நடத்தும் விதம் குறித்துக் கடுமையாக விமர்சித்தது ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’.

இது போன்ற கதைகள் ’ஆக்‌ஷன் ட்ரீட்மெண்டில்’ சொல்லப்பட்ட காலத்தில், இப்படத்தின் திரைக்கதை போக்கு வேறு திசையில் அமைந்து அனைவரது கவனிப்பையும் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக லஹே ரஹோ முன்னாபாய் எனும் படத்தை எடுத்தார் ராஜ்குமார். அதில் காந்தியக் கொள்கைகள் தற்காலத்தில் எந்தளவுக்குப் பொருந்தும் என்பதைக் காட்டியிருந்தார்.

தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும் கல்லூரிகளில் நிகழும் எதேச்சதிகாரப் போக்கு குறித்தும், வாழ்க்கைக்கு உதவாத அறிவியல் கோட்பாடுகளை மனனம் செய்வது குறித்தும் ‘3 இடியட்ஸ்’ படத்தில் பேசியிருந்தார். இதையே, ‘நண்பன்’ என்ற பெயரில் தமிழில் ஷங்கர் ரீமேக் செய்தார்.

வேற்றுக்கிரகவாசியாக அமீர்கான் நடித்த ‘பிகே’வில் போலிச்சாமியார்களின் முகங்களைத் தோலுரித்தார்.

அதன்மூலமாக, இந்துத்துவத்தின் விரோதியாக முத்திரை குத்தப்பட்டார்.

அந்த காலகட்டத்தில், தான் ‘வாழும் கலை’ ரவிஷங்கரின் சீடர் என்று வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜ்குமார்.

பாலிவுட்டில் சர்ச்சைக்குரியவராகக் கருதப்பட்ட சஞ்சய் தத்தின் வாழ்வனுபவங்களைத் தழுவி ‘சஞ்சு’ படத்தைத் தந்தார். அது ஜனரஞ்சகமான வெற்றியைப் பெற்றதுடன், விமர்சனரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

மேற்சொன்ன அத்தனை படங்களிலும் விது வினோத் சோப்ராவின் பங்களிப்பு சிறியதும் பெரியதுமாக அமைந்தது.

இடைப்பட்ட காலத்தில், அவர் இயக்கிய ‘ஏக்லவ்யா’ படத்திலும், ‘பரினீதா’ படத்திலும் படைப்பூக்கத் தயாரிப்பாளராகவும் ராஜ்குமார் பணியாற்றியிருந்தார்.

விது வினோத் சோப்ராவை விட்டு விலகி, ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தற்போது ‘டன்கி’ படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் ராஜ்குமார்.

வழக்கத்திற்கு மாறான பார்வை!

’நாடு ஓடும்போது நடுவே ஓடணும்’ என்ற பழமொழியை ஏதோ ஒரு மலையாளத் திரைப்படத்தில் கேட்டிருக்கிறேன். ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்று அதனைத் தமிழில் வேறுவிதமாகச் சொல்வார்கள்.

ஆனால், பெரும்பாலானவர்களின் நம்பிக்கைகளுக்கு, அவர்களிடம் வேரூன்றிய பழக்கவழங்களுக்கு மாறான கருத்துகளைத் தனது படங்களில் சொன்னவர் ராஜ்குமார்.

வெறுமனே கவன ஈர்ப்புக்காக மட்டுமல்லாமல், தன் மனதில் பட்ட நியாயங்களைச் சொல்ல முனையும் விருப்பத்தையே அப்படங்களின் உள்ளடக்கம் நிரூபிக்கிறது.

அந்த விருப்பத்தில் இருந்து துளிர்த்த இன்னொரு படைப்பாகத் தென்படுகிறது ‘டன்கி’.

இதில் மேற்கத்திய நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேற முனைபவர்கள் படும் சங்கடங்களைக் காட்டியிருக்கிறார் ராஜ்குமார்.

படத்தின் ட்ரெய்லர் அப்படித்தான் எண்ண வைக்கிறது. அதற்கு மாறான விஷயங்களும் கூட அப்படத்தில் இருக்கலாம்.

அனைத்தையும் தாண்டி, தேசியவாதத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒரு திரைப்படத்தில் இடம்பெறுவதும், அது பொதுவெளியில் கொண்டாடப்படுவதும் குதிரைக்கொம்பாக மாறியுள்ள சூழலில் இப்படியொரு படம் வெளிவருவதே மிகப்பெரிய ஆச்சர்யம் தான்.

அந்த வகையில் ‘டன்கி’யின் வெற்றியோ அல்லது தோல்வியோ இந்தியத் திரையுலகின் போக்கையே திசைமாற்ற வாய்ப்பு அதிகம். என்ன செய்யக் காத்திருக்கிறது ராஜ்குமார் ஹிரானியின் புதிய படைப்பு?!

– உதய் பாடகலிங்கம்

You might also like