– பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், மின்சார கட்டமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
அதோடு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்தியக் குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது பற்றியும், நிவாரண பணிகளுக்காக மத்தியக்குழு பாராட்டியதையும் குறிப்பிட்டார்.
மேலும், மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தற்காலிக நிவாரண தொகையாக ரூ.7 ஆயிரத்து 33 கோடியும் நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12 ஆயிரத்து 659 கோடியையும் விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அதோடு கடந்த 17, 18-ம் தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் விளக்கினார்.
மிக்ஜாம் புயல் மழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத கனமழை, தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
எனவே பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.