மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று காவல்துறைக்குச் சவால்விட்டு, மறைந்து திரிந்தவர்கள் ஒருகாலகட்டத்திற்குப் பிறகு திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள்.
இப்போது அந்த வரிசையில் அண்மைக்காலம் வரை காவல்துறைக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த ‘சந்தனக் கடத்தல்’ வீரப்பனைக் கதையின் நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கிற டெலி சீரியல் தான் – ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’.
செம்மரக் கடத்தலை மையமாக வைத்துப் பல மொழிகளில் அல்லு அர்ஜூன் நடித்துப் பெரும் வணிக வெற்றியடைந்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் கடத்தலை ஒட்டிப் பல சாகசங்கள் இருந்தாலும் – அது முழுக்க முழுக்க ஒரு புனைவு.
ஆனால், இந்தப் படம் பெரும்பாலும் நிஜமும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளும், பலருடைய நேரடி சாட்சியங்களும் கொண்ட யதார்த்தம்.
அதுவுத் அண்மைக் காலத்தில் நமக்கு முன்னால் நடந்த கொடூரமான வன்முறை.
வீரப்பனின் சாகச வாழ்க்கையை முன்வைத்து இதுவரை பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் சாயல் கொண்ட திரைப்படங்களும் வந்துவிட்டன.
அதிலிருந்து விடுபட்டு இந்த சீரியலைக் கவனிக்க வைப்பது உண்மையிலேயே நேரடியாகத் தன்னுடைய வாழ்வைப் பற்றி எகத்தாளமும் ஆவேமுமான மொழியில் வீரப்பன் அளித்த வாக்குமூலம், இது தான் இந்த சீரியலின் பலம். தணிக்கை செய்யப்படாத வீரப்பனின் சொற்களில் மாற்றம் இல்லாமல் இடம் பெற்றிருப்பது கூடுதல் விசேஷம்.
மேட்டூர் அருகில் இருக்கிற கொளத்தூர் சந்தையிலிருந்து துவங்குகிறது இந்த சீரியல். 22 பேர் வெடிவைத்துக் கொல்லப்படும் காட்சியுடன் துவங்கும் சீரியலில் வீரப்பனின் வாக்குமூலம் துவங்குவதில் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறது சீரியல்.
காட்டில் வேட்டையாடப்போகும் உறவினர் ஒருவருடன் காட்டு வாழ்க்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கமாகும் வீரப்பன் இளம் வயதிலேயே துப்பாக்கியுடன் வேட்டையாடக் கிளம்பிவிடுகிறார்.
சிறு விலங்குகளை முதலில் வேட்டையாடுகிறவர் பிறகு யானைகளை வேட்டையாடித் தந்தங்களை மலையின் கீழ் உள்ள வியாபாரிகளுக்கு விற்கிறார். விற்பது எல்லாம் அவரது உறவினர்கள் வழியாகவே நடக்கிறது.
கர்நாடக எல்லையில் உள்ள கோபிந்ததம் கிராமத்தில் பிறந்து தனது தாய் புலித்தாயம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் வீரப்பனுக்கு அவரது தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கிறபோது கூட காவல்துறை கெடுபிடியால் வரமுடியாமல் போகிறது.
அதுவே காவல்துறைக்கும், வனத்துறைக்கும் எதிரான ஆவேசமுமாக மாறுகிறது. வீரப்பனின் சகோதரைக் கொல்கிறார்கள். பதிலுக்கு அதிகாரிகளைக் கொல்கிறார் வீரப்பன்.
பெங்கலூரில் சீனிவாஸ் என்ற வனத்துறை அதிகாரியால் பிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படாமல் காவலில் வைக்கப்படுகிறார்.
அங்கேயே வீரப்பனைக் கொல்லப்போவதாகக் காவல்துறை மூலமே செய்தி கிடைத்ததும் அங்கிருந்து தப்பிக்கிற வீரப்பன், அதன் பிறகு அதிகாரிகளின் தேடுதல் வேட்டையில் சுலபமாக மாட்டவில்லை.
மலைவாழ் மக்களுக்கு உதவுகிறார். அவர்களும் நேசக்கரம் நீட்டுகிறார்கள். காவல்துறையிடமும் மாட்டுகிறார்கள்.
வீரப்பனின் குடும்பத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டைக்கு இரையாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிலரின் தலையை வெட்டித் தனியாக வைப்பது, கண்ணி வெடி வைத்து மொத்தமாகக் கொல்வது என்று வீரப்பனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
தேர்தல் அரசியலில் வீரப்பன் அடையாளம் காட்டுகிற வேட்பாளருக்கு வெற்றி கிடைக்கிறது. சில அரசியல்வாதிகள் வீரப்பனை ஒழித்துக் கட்ட முனைவது தெரிந்ததும் பதிலுக்குக் கடும் தாக்குதல் நடத்துகிறார்.
காவல்நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களை எடுத்துச் செல்கிறார்கள். போலீசுக்குத் துப்புச் சொல்கிறவர்களை சளைக்காமல் போட்டுத்தள்ளுகிறார். துரோகத்தை மட்டும் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்கிறார் கொந்தளிப்புடன்.
பதிலுக்குப் பெரும் வலை விரிக்கின்றன இரு மாநில அரசுகள்.
தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் இணைந்து அதிரடிப்படை அமைத்து வீரப்பனின் நடமாட்டத்தைக் கண்காணிக்கின்றன.
வீரப்பனுக்கு உதவுவதாகச் சந்தேக்கப்படுகிறவர்கள் பலர் அதிரடிப்படையின் ‘ஒர்க் ஷாப்’ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு நடக்கும் சித்திரவதைகள் பிரிட்டிஷ் காலத்தை நினைவுபடுத்துகின்றன.
பெண்கள் பலரும் கூட்டுக் கொடூரப் பாலியல் வன்முறைக்கு இலக்காகிறார்கள்.
ஆடைகளைக் களைந்த நிலையில் அவர்களது அந்தரங்க உறுப்புகளில் மின்சார ஷாக் கொடுக்கிறார்கள். ஆண்களுக்கும் அதே கதி.
சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் பலர் மனநிலையும், உடல் நலமும் பாதிக்கப்பட்டவர்களாகப் பிறகு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
கடுமையான சித்திரவதைக்கு ஆளானவர்கள் தரும் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பார்க்கும்போது பதைபதைக்க வைக்கிறது.
அதிகார மீறல்கள் அத்து மீறிய அளவில் நடந்து, சதாசிவம் ஆணையமும் அமைக்கப்பட்டும் நடந்த வன்முறைகளைப் பதிவு செய்ய மட்டுமே ஆணையத்தால் முடிகிறது.
அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும், பரிசுகளும் கிடைக்கின்றன.
கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினைக்காக தமிழர்களும், அவர்களுடைய சொத்துகளும் பாதிப்புக்குள்ளாகும் போது அதற்கு எதிராகக் காட்டுப்பகுதியில் இருந்து வீரப்பனின் ஆதரவுக்குரல் ஒலிக்கிறது.
கன்னட நடிகரான ராஜ்குமாரைக் காட்டுக்குள் கடத்திப் போகிறார். நக்கீரன் கோபால் உள்ளிட்ட குழுவினர் உள்ளே சென்று மீடக முயற்சிப்பதுடன் முதல் ஆறு எபிஸோடுகள் நிறைவடைந்திருக்கிறது.
இனியும் இதே தொடர் தொடர்ந்து நிறைவடையலாம்.
வீரப்பனின் ஒரிஜினல் வாக்குமூலம் இத்தொடருக்குப் பெரிய பிளஸ் பாயிண்ட். அதோடு நக்கீரன் கோபால் தொடரை இணைத்து வழிநடத்திச் செல்கிறார்.
வீரப்பனின் மகளான வித்யா, அப்பாவைப் பற்றிப் பேசுகிறார். முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான அலெக்ஸாண்டர், பத்திரிகையாளர்கள் ஜீவா தங்கவேல், சுப்பு, வீரப்பனின் கூட்டாளிகள், வழக்கறிஞர் தமயந்தி, சீமான், ரோகிணி உட்படப் பலர் தங்கள் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
சமகாலத்தில் நமக்கு முன்னால் நடந்தேறிய வன்முறை ஆவேசப்படுத்தப்பட்டிருப்பதால், இந்தத் தொடர் கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.
குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது வதை முகாம்களில் சிக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கிய மலைவாழ் மக்களின் அவஸ்தைகள் பார்வையாளர்களைப் பதைபதைக்க வைக்கும்.
வீரப்பனின் வன்மத்தையும், அவரது யானை வேட்டையையும், சர்வ சாதாரணமாகச் செய்த கொடூரக் கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது.
அதே சமயத்தில் இரு மாநில அதிரடிப்படையின் அதிர்ச்சியூட்டும் அத்துமீறல்களையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஆறு எபிஸோடுகள் முதற்கட்டம்மாக வெளியாகி இருக்கிற இத்தொடர் ராஜ்குமார் கடத்தலோடு, நிறைவடையாத நிலையில் வெளியாகி இருக்கிறது.
சரத்ஜோதி இயக்கியிருக்கும் இத்தொடருக்கான ஒளிப்பதிவாளர் ராம்குமார். ராம் பாண்டியன் தொகுத்திருக்கிறார். நக்கீரன் கோபாலின் மகள் பிரபாவதி தொடரை முன்னின்று உருவாக்கியிருக்கிறார்.
திரையிடலின் போது நக்கீரன் கோபால் சொல்லியதைப் போல, வழக்கு வரலாம் என்று பலர் எடுக்கத் தயங்கிய நிலையில், ஜி 5 சேனல் குழுவினர் தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது.
அதிரடியான உண்மை நிகழ்வைப் பார்க்க விரும்புகிறவர்கள் உரிய கவனத்தைப் பெறும் விதத்தில் இருக்கிறது – கூஸ் முனிசாமி வீரப்பன் தொடர்.
– யூகி