காரண காரியமற்ற வன்முறைக் காட்சிகள், அதிபுனைவான சாகசங்கள் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் நாயக பிம்பம் ஆகியவையே விக்ரம், ஜெயிலர், லியோ, ஜிகர்தண்டா-2 போன்ற படங்களின் வெற்றிக்கான சூத்திரம் என்பதாகவே தயாரிப்பாளர்களும், உச்சபட்ச நாயகர்களும், இயக்குநர்களும் புரிந்துகொள்ளக்கூடும்.
இந்த வரலாறு காணாத வன்முறை தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து எப்படி பேயாட்டம் போடத்தொடங்கியது என்பதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள் தேவை.
ஜெயிலர், லியோ, விக்ரம் போன்ற படங்களின் வெற்றி என்பது முதிரா இளைஞர்களின் ரசனையால் வந்த வெற்றி மட்டுமல்ல.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து அமெரிக்காவில் பணிசெய்யும் கற்றறிந்த மேன்மக்களும் இந்தப் படங்களைத்தான் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
இந்தியாவில் கல்விக்கும் கலை ரசனைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை என்ற கசப்பான உண்மை மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
இப்போதெல்லாம் நம் நாயகர்களும் வில்லன்களும் இரும்பு சாமான்களோடுதான் சண்டையில் இறங்குகிறார்கள்.
ஆக உடல்கள் சிதைவது, முகங்கள் கிழிவது, ரத்தப் பெருக்கு எல்லாவற்றையும் எந்த எதிர்வினையும் இல்லாமல் பக்கெட் நிறைய பாப்கார்னை சாப்பிட்டுக்கொண்டே குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள்.
காட்சிரீதியான வன்முறையின் அபாயகரமான விளைவு இதுதான். வன்முறை வெறுக்கத்தக்கது. அச்சத்தையும் அருவருப்பையும் உண்டாக்கும் என்பது போய், வன்முறை ஒரு கேளிக்கையாக மாறியுள்ளது.
இது மனித மனங்களின் சுரணையை மழுங்கச் செய்துவிடுகிறது. அதனால்தான் நடைமுறை வாழ்க்கையில் பிறருக்கு நிகழும் வன்முறைகளும் கூட எந்த பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. நமக்கு நிகழும் வன்முறைகளும் அப்படியே கடந்து செல்லும்.
– இரா. பிரபாகர்
நன்றி: அந்திமழை, டிசம்பர் 2023 இதழ்.