சென்னை சாலைகள் பெருமழையில் மூழ்கிவிட்டன என்று சொல்வதைவிட பல வீடுகளும் பெருமழையால் மூழ்கிவிட்டன என்று சொல்வது சரியாக இருக்கும். மழைநீரும் கழிவுநீரும் கலந்து மக்கள் அவதிப்பட்டனர்.
அத்தியாவசியமான பால் பாக்கெட் கூட கிடைக்காமல் பரிதவிக்கும் மக்கள். பால் மட்டுமல்லாமல் அத்தியாவசியப் பொருட்களுடன் மூழ்கிய தண்ணீரில் பல கால்கள் பயணிக்கின்றன.
அந்த கால்கள் தண்ணீரில் நடந்து நடந்து சேற்றுப்புண்ணிற்குள்ளாகிறது. அந்த கால்களுக்கு சொந்தமானவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தான்.
இவர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்காக உழைத்தார்கள்.
மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவனத்தின் பெயரை சுமந்த டீ-ஷர்ட்டை அணிந்து கொண்டு மார்பளவு தண்ணீரில் நடக்கும் இஸ்லாமியர் சகோதரர்களின் கால்கள் சேற்றுப்புண்ணால் அரிக்கப்பட்டிருந்தன.
ஏன் அண்ணா இப்படி? என்று சக மீட்பாளர் கேட்க அவர், பிறர் நலம் விரும்புவதே இஸ்லாம் என்ற வாசகத்தை காட்டியுள்ளார்.
பள்ளி வாசல்கள் மக்களுக்காக திறந்துவைக்கப்பட்டன.
அனைத்து மத மக்களுக்கும் பள்ளிவாசல் தஞ்சம் அடைவதற்கும் உணவளிக்கும் தாய்வீடாக இருந்தது.
இந்தப் பெருமழை இஸ்லாமியர்கள் மனித நேயத்திற்கு ஆதரவானவர்கள் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது.
தற்சார்பு திட்டங்கள் வடிவமைக்க வேண்டும்:
மதம் கடந்த மனிதத்தை உணர்த்திய மிக்ஜாம் புயல் இன்னும் சிலவற்றை பாடமாக கற்றுக் கொடுத்திருக்கிறது.
நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கத்தினால் விரிவடைந்த சென்னை தற்போது சிங்காரச் சென்னையாக மிளிர்வதாக பெருமை பேசிக் கொண்டவர்களெல்லாம், சென்னை பேரிடரிலிருந்து தன்னை பாதுகாக்கும் தன்மையையும், தன்னுடைய கழிவுகளை கையாளும் தன்மையையும் இழந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இனியும் சென்னையை விரிவுபடுத்தினாலும், தேவையற்ற திட்டங்களை அமல்படுத்தினாலும் சென்னை பேராபத்தை சந்திக்க நேரிடும்.
சென்னை நகரத்துக்கு தேவை தற்சார்புடைய மக்கள் நலன் திட்டங்கள். மிக்ஜாம் புயலால் வீடே தண்ணீரால் மூழ்கியபோதும் குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்காமலிருக்க பேரிடருக்கான சிறப்புத் திட்டங்களை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சுரண்டப்படும் உழைப்பு:
இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த சென்னை மக்களைப் பார்த்து, “வீட்டருகில் தண்ணீர் வந்துவிட்டதால் வீட்டைவிட்டு வெளிவராத உங்களுக்காக எங்கள் வீடுகளை மூழ்கவிட்டுவிட்டு, குடும்பங்களை பிரிந்து சென்னைக்கு வந்து உழைக்கிறோம்” என்ற குரல் தூரத்தில் கேட்கிறது.
ஆனால், அந்த குரலுக்கு அதிகாரிகளும் வெகுமக்கள் ஊடகங்களும் செவி சாய்க்கவில்லை.
அந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் பெரும்பாக்கம் செம்மஞ்சேரியில் வசிக்கக் கூடிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கோவை, திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்.
சென்னையில் கழிவு நீர் தேங்குவதை சரிசெய்ய சீரமைக்கப்பட்ட சாலைகளில் சென்னைவாசிகள் பயணிப்பதற்கு எந்த ஒரு பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல் உயிரை பணயம் வைக்கும் தூய்மைப்பணியாளர்கள் உதவும் தேவதைகள் என்று மனம் பூரித்துவிட்டு கடந்து செல்ல முடியாது.
இவ்வாறு கடந்துசென்று விட்டால் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும். தூய்மைப் பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
தூய்மைப் பணியில் ஈடுபட்டு தன் உயிரை பணயம் வைக்கும் தொழிலாளியை சக மனிதராகக் கூட மதிக்காத சமூகத்தை என்னவென்று சொல்வது?
தூய்மைப் பணியில் ஈடுபடுவதால் ஏற்படும் உடல் நோய்க்கு அரசும் சமூகமும் பொறுப்பேற்காத நிலையில் கைவிடப்பட்டவர்களாக்கப்படும் தூய்மைத் தொழிலாளர்கள் மற்றொரு புயல் வந்தாலும் உழைக்க தயங்க மாட்டார்கள்.
அவர்களின் உழைப்பு தான் அங்கீகரிக்கப்படப் போவதில்லை.
அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பாதுகாப்பையும் இப்பேரிடருக்குப் பிறகாவது அரசு உறுதி செய்ய வேண்டும்.
இருட்டடிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் வலிகள்:
சென்னையே மூழ்கினாலும் உதவி கேட்பதற்கான வாய்ப்பும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் தைரியமும் நடுத்தர மக்களிடம் இருந்தது.
ஆனால், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாதவர்களாக செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், எழும்பூர் திடீர் நகர், வடசென்னையில் உள்ள குடிசைவாழ் மக்கள் ஆகியோர்களின் வலியும் வேதனையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கழிவு நீரும் மழைநீரும் இடுப்பளவு தேங்க, வேலைக்கு செல்ல முடியாமலும் உணவும் இல்லாமலும் உழைக்கும் மக்களை வறுமை சூழ்ந்தது.
இச்சூழலில் ஏழை, எளிய மக்கள் பசிக்கு பழக்கப்படுத்தப்பட்டனர். நிவாரண உதவிகளை கொடுக்க தன்னார்வலர்கள் வந்தால் குவியும் மக்கள் வெள்ளத்தில் தன்னார்வலர்களை மீட்பது கடினமானது.
உணவிற்கும், தண்ணீருக்கும் அடிப்படைத் தேவைக்கும் கையேந்தும் நிலமை. அரசியல், சமூகப் புரிதல் இல்லாத தன்னார்வலர்களும், சில இடங்களில் அரசும் கையேந்தும் மக்களின் தேவையும் வலியும் உணராமல் இருப்பதும், அவர்களின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் போக்கையும் எதிர்கொள்வது கையேந்தும் மக்களை மேலும் நலிவடையச் செய்கிறது.
பட்டினியா இருப்பவர்கள் மத்தியில் ஒரு அண்டா அளவிலான உணவு தென்பட்டால், மக்கள் “எனக்கு வேணும் கொடுங்கள்” என்று கூச்சலிடுவார்கள் தான்.
அதற்காக அவர்களைக் குறை கூறுவதும், வசைபாடுவதும் முறையல்ல.
அவர்களை பரிதவிக்க விட்ட அரசு தான் கூச்சப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் அல்ல என்பதை உதவி செய்யும் தன்னார்வலர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
2 கிலோ அரிசியை கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்து தன்னார்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாங்குவோரின் சுயமரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
அதே நேரத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் மட்டுமே அப்பகுதி மக்களுக்கு உணவு தேவை என்ற எண்ணம் சிலரிடம் காண முடிகிறது.
தண்ணீர் தேங்கவில்லை என்றாலும் மழையினால் வேலையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டாலும் பசி இருக்கும், உணவு தேவைப்படும் என்பதை உணர்வது அவசியம். உதவி செய்வது முக்கியம்.
அதை விட வாங்குவோரின் சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் அளிப்பது இன்றியமையாதது.
இப்பெருவெள்ளத்தில் சென்னை கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து திட்டங்களை உடனே செயல்படுத்துவது அரசின் கடமை.
பேரிடர் காலங்களில் தூய்மைப் பணியாளர்கள், மின் ஊழியர்கள், இஸ்லாமியர்கள், தன்னார்வலர்கள், சமூக இயக்கங்கள் செலுத்தும் உழைப்பும், அன்பும் தான் இன்னும் உலகை அழிய விடாமல் இறுகப்பற்றிக் கொள்கிறது.
– கு.சௌமியா