– தன் சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் மம்முட்டி
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சினிமாவுலகில் நுழைந்த 2005 உடன் 25 வருடங்கள் நிறைவடைவதையொட்டி மலையாள மனோரமா வார இதழில் அவரது அனுபவங்களை எழுதியிருக்கிறார். அதிலிருந்து…
முதல் படம் – முதல் காட்சி :
நான் மகாராஜா கல்லூரியில் சினிமா ஆசையுடன் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ‘அனுபவங்கள் பாழிச்கள்’ என்ற படத்திற்காக புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் பார்த்து என் சொந்த ஊரான செம்பிலிருந்து கோட்டயத்திற்குக் கிளம்பினேன்.
இயக்குனர் சேதுமாதவன் இன்டர்வியூ செய்தார். பிறகு என்னை சேர்த்தலையில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வரச் சொன்னார். சத்யன் கதாநாயகனாக நடிக்கும் படம் அது. எதிரியைக் கொன்று தூக்குக் கயிற்றுக்காகக் காத்திருக்கும் செல்லப்பன் என்ற கதாபாத்திரம் சத்யனுடையது.
செல்லப்பனுக்கு உதவி செய்வதற்காக பகதூர் என்ற கதாபாத்திரத்தின் கடையை முதலாளியினுடைய ஆட்கள் அடித்து உடைக்கிறார்கள்.
இதையறிந்து ஓடிவரும் பகதூரின் பின்னால் இருவர் ஓடிவருகிறார்கள். அந்த இருவரில் ஒருவன் நான். இதுதான் நான் நடிக்க வேண்டிய காட்சி முதல் ரிகர்சல். என்னால் கண்ணைத் திறக்கமுடியவில்லை. ரிப்ளக்ஷனின் சூடும், பிரகாசமும்… துணை இயக்குனர் கண்ணை மூடாமல் வாய் மூடி ஓடிவரச் சொன்னார்.
இரண்டு முறையும் சரியா வரலை. அப்போ நீ மாறி நின்றுகொள் என்று டைரக்டர் சொன்னார். நான் அழுகிற நிலைமைக்கு வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாய்ப்பைக் கேட்டு கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து வாயை மூடி ஓடிவந்தேன். அந்த காட்சி முடிந்ததும் செட்டிலிருந்து நழுவிவிட்டேன்.
முதல்முறையாக திரையில் :
‘அனுபவங்கள் பாழிச்சகள்’ படம் ரிலீசானவுடன் எர்ணாகுளம் தியேட்டரில் மார்னிங் ஷோ பார்க்க நண்பர்களோடு போனேன். எனக்குப் பயங்கர டென்ஷன். படத்துல என்னோட காட்சி வருமோ வராதோ என்று. ஆனால் வந்திருந்தது. மெலிந்து வளர்ந்திருக்கின்ற ஒரு உருவம் கொக்கு ஓடி வருவதுபோல தோன்றியது. எனக்குத் திருப்தியில்லை. ஆனால் என் நண்பர்கள் எல்லோரும் ‘எடா மம்முட்டி’ என்று சந்தோஷத்தில் கூப்பிட்டார்கள்.
முதல் வசனம் :
இரண்டாவது சினிமா ‘காலசக்கரம்’ எனக்கு அதில் வள்ளம் ஓட்டுபவன் ரோல் கிடைத்தது. பனியன், லுங்கி துண்டு தலையில் கட்டி, பீடி குடித்துக் கொண்டிருக்கும்போது அடூர் பாஸி வந்து பழைய வள்ளக்காரனைக் குறித்து விசாரிக்கிற ஒரு காட்சி
“அவன எவிடத்து காரனா? அவன் மற்றே பெண்ணிலை அடிச்சோண்டு போய கார்யம் அறிஞ்சில்லே” (இவன் எங்கே? உள்ளேயா இருக்கான், அவன் அந்தப் பெண்ணை கூட்டிட்டு ஓடிப்போனது தெரியாதா) இதுதான் என்னுடைய முதல் டயலாக்
அப்புறம் அடூர்பாஸி வள்ளத்தில் ஏறும்போது கால் வழுக்கி விழுகிற காட்சியை எடுத்தாங்க, முதல் டேக்கிலேயே ஓ.கே. ஆகிவிட்டது. இயக்குனர் மறுநாள் என்னை வரச் சொன்னார். பிரேம்நசீர் கூட சீன்ஸ் உண்டு என்று சொன்னார்.
அடுத்தநாள் லொகேஷனுக்குப் போயாச்சு, பிரேம் நசீரும் வள்ளக்காரன் வேஷம். ராத்திரி சங்கீதம் படிக்கப் போகவேண்டியுள்ளதால் பழைய வள்ளக்காரனுக்குப் பதிலாக புதிய வள்ளக்காரனை நியமிக்கிற காட்சி. நான்தான் புதிய வள்ளக்காரன். வள்ளத்தினுடைய சொந்தக்காரனாக நடிச்சது மேக்கப் மேன் எம்.ஓ.தேவஸ்யா. பிரேம் நசீர் கையிலிருந்து துடுப்பு வாங்கி என் கையில் கொடுக்கிறதுதான் அப்போது எடுத்த காட்சி. பிரேம் நசீர் என்னைப் பார்த்து, “எனக்குப் பதிலாக வந்த ஆள் இல்லையா” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
எம்.டி. முதல் எம்.டி வரை :
எர்ணாகுளத்தில் ஜனசக்தி பிலிம்ஸின் திரைப்பட விழா நடக்கிறது. அங்கு எம்.டி.வாசுதேவன் நாயர் வருவார் என்று என்னுடைய மகாராஜாஸ் கல்லூரியில் படித்த வைக்கம் ரமேசன் சொன்னார். “அவரை எனக்குத் தெரியும். அறிமுகப்படுத்துகிறேன்” என்றார். திரைக்கதை டைரக்ஷன் எம்டி வாசுதேவன் நாயர்தான் எழுதுகிறார்.
எம்.டி. வந்தவுடன் ரமேசன் அவரிடத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். இது, ”மம்முட்டி, வக்கீலாக இருக்கார். நடிக்க விருப்பம் இருக்கு” என்று. அப்புறம் என்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சிறிது நேரம் பேசிவிட்டு பின்பு தெரிவிக்கிறோம் என்றார். நான் மஞ்சேரிக்குத் திரும்பி வந்தேன். அப்போதுதான் (1979 ஏப்ரல்) எனக்கும் ஸீலுவுக்கும் விவாகம் நிச்சயம் செய்தார்கள்.
அப்போ எனக்கு ஒரு போன் வந்தது. உடனே எர்ணாகுளம் ஜனசக்தி பிலிம்சுக் போகணும் என்று. அங்கே போனவுடன் மேனேஜர் அஜயன், “தேவலோகம் என்ற படத்தில் உனக்கு ஒரு ரோல் இருக்கு செய்யத்தான் வரச்சொன்னோம், பட ஆரம்பித்தவுடன் திரும்ப கூப்பிடுகிறோம்” என்றார். நான் திரும்பி மஞ்சேரிக்கு வந்தேன்.
மே 6-ல் எனக்குத் திருமணம் நடந்தது. என்னுடைய ஊரான செம்பில் சில சடங்குகளை முடித்துவிட்டு மட்டாஞ்சேரியிலிருக்கும் ஸீலுவின் வீட்டிற்கு விருந்திற்குப் போனோம். மறுநாள் அஜயன் என்னைத் தேடி வந்தார். ஷீட்டிங் 13-ம் தேதி பாலக்காட்டில் நடக்கிறது, அதில் பாப்பச்சன் என்ற சகாவினுடைய ரோலை (தோழர் கம்யூனிஸ்ட்) எனக்குக் கொடுத்தார்கள்.
நான் 12-ம் தேதி ஷூட்டிங்குக்குப் புறப்பட்டேன். ரெண்டு மூணு நாள் கழித்து படப்பிடிப்பு ஆரம்பித்தது. எம்.டி. ஸ்டார்ட், ஆக்ஷ்ன் சொல்லிக் காட்சியை எடுத்தார்கள். ஆனால் ‘தேவலாகம்’ பாதியில் நின்றுபோய்விட்டது.
அப்புறம் 1986 பிப்ரவரி 1-ம் தேதி மட்டாஞ்சேரியில் வக்கீல் ஆபிஸ் திறக்கலாம் என்று முடிவு செய்தேன். திரும்பவும் எம்.டி கூப்பிடுவதாக போன், கோழிக்கோட்டுக்கு வரும்படி. நான் கோழிக்கோட்டுக்குப் போனேன். வில்கானுண்டு ஸ்வப்னங்கள் (கலைகள் விற்பனைக்கு) என்ற படத்தில் தெக்கேபாடு மாதவன் குட்டி என்ற ரோல் எனக்கு. அந்தப் படத்திலும் திரைக்கதை, டைரக்ஷன் எல்லாம் எம்.டி தான். என்னோட சீன் எடுக்கும்போது எம்டிதான் ஷூட் செய்தார்.
அடுத்த சினிமா ‘மேள’ (மேளா) அதில் எனக்கு விஜயன் என்ற கதாபாத்திரம். இது ஐந்தே ஐந்து நாட்கள்தான் ஓடியது. ஜயன் இறந்தபிறகு வந்த படம் இது. அப்படி ஐயன் படங்கள் எல்லாம் ரிலீஸ் செய்திருந்த நேரம். அதற்கிடையில் இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. ஆனால் இந்த சினிமாவைப் பார்த்துவிட்டு ஹரிகோவிந்தன் என்னை நல்லா நடிச்சதா பாராட்டினார்.
முதல் சென்னைப் பயணம் :
மேளா படத்தின் டப்பிங்கிற்காக என்னை சென்னை வரச் சொன்னாங்க. என்னோட நண்பர் ஷெரீபும் நானும் சென்னை ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் சாக்கு மூட்டைகளுக்கு மேலே உட்கார்ந்து போனோம். எனக்கு ரயில் அவ்வளவு பழக்கமில்லை. அந்த கடகடா சப்தத்தில் எனக்கு உறக்கம் வரலை, இப்பவும் எனக்கு ரயில் பயணம் என்றால் பிடிக்காது.
காலையில் சென்னை சென்றவுடன் ரோகிணி இன்டர்நேஷனல் ஹோட்டலில் சீனிவாசன் எங்களை அழைத்துக்கொண்டு போனார். அங்கு ரூம் இல்லாததால் கோடம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலில் தங்கவைத்தார்.
அதுக்கு நேர் எதிரேயுள்ள தியேட்டரில் சங்கரும், ரவீந்திரனும் நடித்த ‘ஒருதலைராகம்’ படம் ஒரு வருடமாக ஓடிக்கொண்டிருந்தது.
இரண்டு பேருக்கும் பெரிய கட்அவுட் வைத்திருந்தார்கள். இருவரும் மலையாளிகள் இவங்க ரெண்டு பேரும் இங்க பெரிய ஆளா இருக்காங்களே என்று மனசிலே நினைச்சிட்டு இருப்பேன்.
இந்தப் படத்தில் நடிச்சதுக்கு எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அப்போ அது பெரிய தொகை. அப்போதான் எனக்கு ‘ஸ்போடனப்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல்ல இறங்கிய படமும் இதுதான். இதில் ஜயன், சோமன், சுகுமாரன் கதாநாயகர்கள் ரதீஷும் உண்டு.
எனக்கு சிறிய ரோல், அப்போதான் ஐயன் இறந்தது. ஜயனோட ரோலை சுகுமாரனும், சுகுமாரனுடைய ரோலில் ரதிஷும் நடித்தார்கள். இதில் சீமாவை காதலிக்கிற வேஷம் எனக்கு. நாலோ ஐந்தோ சீன் மாத்திரம் நடிக்க ஐயாயிரம் ரூபாய் கிடைத்தது.
அப்போ ரதிஷீக்கு வேற படம் புக்கானதால், இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் எனக்கு செகண்ட் ரோல் கிடைச்சது. ஆனால் சம்பளம் அதேதான் என்று சொன்னார்கள். அதில் என்னோட பேர் சஜீன் என்று எழுதி பிராக்கெட்டில் மம்முட்டி என்று போட்டார்கள். இந்தப் படத்தின் பூஜை பெரிய அளவில் நடந்தது. அப்போதுதான் முதன்முதலாக ரயிலில் ஏ.ஸி. முதல் வகுப்பில் பயணம் செய்தேன்.
முதல் கதாநாயகன் வேடம்:
படயோட்டம் ஷீட்டிங் தொடங்கி ரிலீஸ் ஆவதற்கு முன்பே நான் எல்லோருக்கும் தெரிந்த நடிகனாகிவிட்டேன். அப்போதான் ‘க்ருஷ்ணா’ படம் கிடைத்தது. முதல்ல வேற ஒருத்தரை வைத்து ஷூட் செய்து சரியா வரலைன்னு என்னை புக் செய்தார்கள். எம்.டி.யும் ஐ.வி. சசியும் சேர்ந்த செய்த படம் அது. அந்தப் படத்தில் என்னோட கதாபாத்திரம் பேரு கிருஷ்ணதாஸ். அதுதான் நான் ஹீரோவா நடிச்ச முதல் படம்.
முதல் வெளிநாட்டுப் பயணம் :
1982-ல் ‘அமெரிக்கா அமெரிக்கா’ என்ற படத்திற்காக முதன்முதலா அமெரிக்கா சென்றேன். இதில் சதீஷ் பிரதாப்போத்தன், ஸீமா, லக்ஷ்மி எல்லோரும் உண்டு. இதில் லக்ஷ்மிக்கு ஜோடி நான். அவர் எனக்கு ரொம்பசீனியர்.
1965-ல் அவர் ஹீரோயினாக நடிக்க வந்துவிட்டார். நான் பள்ளியில்தான் படிச்சிட்டிருந்தேன். அப்போது எனக்கு காஸ்ட்யூமர், மேக்கப் மேன் எல்லாம் நான்தான். அமெரிக்காவில் எனக்கு ஒருநண்பர் உண்டு, அவர் எனக்கு 500 டாலர் தந்தார். அதுதான் என்னுடைய முதல் சொத்து, அப்ப அந்த யூனிட்ல நான்தான் வசதியுள்ளவன். எல்லோரும் என்னிடத்தில்தான் கடன் வாங்குவாங்க அப்படியே பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. இதுவரை யாரும் ஒரு பைசாகூட திருப்பித் தரவில்லை.
– தமிழில் அரவிந்த்
- புதிய பார்வை நவம்பர் 15, 2004