கான்ஜுரிங் கண்ணப்பன் – ஓரளவு சிரிக்கலாம்!

‘நீ பதிமூணாம் நம்பர் வீடு பார்த்திருக்கியா’, ‘மை டியர் லிசா பார்த்துட்டு ரெண்டு நாளைக்கு காய்ச்சல்’, ‘தியேட்டர்ல ஒத்தையாளா உட்கார்ந்து இங்கிலீஷ் பேய் படம் பார்க்குற போட்டியில ஒரு ஆள் செத்தே போயிட்டாரு தெரியுமா’, இது போன்று ‘ஹாரர்’ படங்கள் சார்ந்த பால்ய வயதுக் கேள்வியனுபவங்கள் எத்தனையோ உண்டு.

‘காஞ்சனா’, ‘அரண்மனை’ படங்களின் வரவு அந்த பயத்தைச் சிரித்தே கரைக்க வைத்தது.

இப்போதெல்லாம் ‘பேய் படம் என்றாலே நகைச்சுவைக்கு கியாரண்டி’ என்றாகிவிட்டது.

அப்படியொரு சூழலில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ என்று டைட்டில் வைத்தால் ரசிகர்கள் மனதில் என்ன தோன்றும்? அதனை உறுதிப்படுத்தும் விதமாகப் படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது.

சரி, அதே தொனி முழுப்படத்திலும் நிறைந்திருக்கிறதா?

கண்ணப்பனும் ட்ரீம் கேட்சரும்..!

கண்ணப்பன் (சதீஷ்) கேமிங் துறையில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் ஒரு இளைஞர்.

தாய் (சரண்யா), தந்தை (விடிவி கணேஷ்), தாய்மாமா (நமோ நாராயணா) ஆகியோரோடு தினமும் குட்டி குட்டி கலாட்டாக்களில் ஈடுபடும் சாதாரண மனிதர்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதைத் தவிர அவரது வாழ்வில் வேறெந்தக் கவலையும் இல்லை.

ஒருநாள் அவரது வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து ஒரு வித்தியாசமான பொருள் கிடைக்கிறது. அதன் பெயர் ‘ட்ரீம் கேட்சர்’. கெட்ட கனவுகளில் இருந்து ஒருவரை விடுவிக்கும் திறன் கொண்டது. கண்ணப்பன் வீட்டு கிணற்றில் கிடைத்த ட்ரீம் கேட்சரில் ஒரு பொம்மையும் சில சிறகுகளும் தொங்குகின்றன.

அதனைக் கையில் எடுக்கும்போது ஒரு சிறகைப் பிய்த்துவிடுகிறார் கண்ணப்பன். அந்த நொடி முதல் அவரது மனதில் ஒரு உறுத்தல் பிறக்கிறது. அந்த சஞ்சலம் பெரிதாகும்போது, என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்; இணையத்தில் சில நிபுணர்களின் பெயர்களைத் தேடுகிறார்.

எக்சார்ஸிஸ்ட் ஏழுமலை (நாசர்) எனும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர், கண்ணப்பன் வாட்ஸப்பில் அனுப்பும் ட்ரீம் கேட்சரின் புகைப்படத்தைப் பார்க்கிறார்.

அடுத்த நொடியே, அது மிகவும் ஆபத்தானது என்று கண்ணப்பனை எச்சரிக்கிறார். ஆனால், அந்த அறிவுரையைக் அவர் பொருட்படுத்துவதில்லை.

அன்றிரவு, தூக்கத்தில் ஒரு பங்களாவுக்குள் சிக்கிக்கொள்வது போலக் கனவு காண்கிறார் கண்ணப்பன்.

அங்கிருக்கும் பேய் அவரைத் துரத்துகிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் கண் விழிக்கிறார். கனவில் அவர் மீது விழுந்த காயம், நிஜத்திலும் அப்படியே இருப்பது கண்டு அதிர்கிறார்.

அதன்பிறகே ஏழுமலையின் அறிவுரை அவர் மனதை ஆக்கிரமிக்கிறது. கனவில் கண்ணப்பன் இறந்தால் நிஜத்திலும் அவர் மரணமடைந்துவிடுவார். இந்த உண்மை தெரிந்ததும், அவரது நிம்மதி பறிபோகிறது.

ஆனால், அதற்குத் தீர்வு காண்பதற்குள் கண்ணப்பனின் பெற்றோர், தாய்மாமன், சைக்யாட்ரிஸ்ட் ஜானி, கந்துவட்டி டெவில் ஆகியோர் அந்த ட்ரீம் கேட்சரில் இருந்து இறக்கைகளைப் பிய்த்துவிடுகின்றனர். அவர்களும் அந்தக் கனவுலகில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஏழுமலை சொல்லும் தீர்வைச் செயல்படுத்த முடியாமல் திணறும் கண்ணப்பன், தான் சார்ந்த அனைவரையும் தூங்காமல் இருக்க வைக்க முயற்சிக்கிறார்.

அவர்களால் தூங்காமல் கண் விழிக்க முடிந்ததா? இந்த பேய் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்ததா என்று சொல்கிறது ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் ‘ட்ரீம் கேட்சர்’ எனும் விஷயம் மட்டுமே புதிது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி ஆகவும் உள்ளது.

வித்தியாசமான அனுபவம்!

வழக்கமாக நாயகனுடன் சேர்ந்து ஊர் சுற்றியவாறே, அவ்வப்போது சில நகைச்சுவை ஒன்லைனர்களை அள்ளிவிடுவது சதீஷின் பாணி. அதிலிருந்து விலகி ‘நாய் சேகர்’ படத்தில் நாயகன் ஆனார்.

அந்த இடத்தை உறுதிப்படுத்தும் வகையில், இதில் நல்லதொரு பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி தவிர, மற்றனைத்திலும் அவர் நாயகனாகவே தெரிகிறார்.

ரெஜினா கேசண்ட்ராவை நாயகி என்று சொல்ல முடியாது. ஆனால், அவரே இதில் தோன்றியிருக்கும் இளம் நடிகையாக இருக்கிறார். நான்கைந்து காட்சிகளில் கவர்ச்சிகரமாகத் தோன்றி, இந்த படத்தில் எனக்கும் ஒரு இடம் உண்டு என்று நிரூபிக்க முனைந்திருக்கிறார்.

நாயகர்களுக்கும் நாயகனுக்கும் அம்மாவாக நடிப்பதுதான் சரண்யாவின் தற்போதைய வேலை. சதீஷின் அம்மாவாகத் தோன்றி இதிலும் அதையே செய்திருக்கிறார்.

விடிவி கணேஷ் மற்றும் நமோ நாராயணா உடன் அவர் வரும் காட்சிகள் லேசாகக் கிச்சுகிச்சு மூட்டும் ரகம்.

இவர்கள் தவிர்த்து ஆனந்தராஜும் ஆதித்யா கதிரும் அவ்வப்போது நம்மைச் சிரிப்பூட்டுகின்றனர். பிளாஷ்பேக் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஜேசன் ஷா – எல்லி ஆவ்ரம் ஜோடி பாந்தமாகக் கதையுடன் பொருந்திப் போகிறது.

’மினிமம் பட்ஜெட்டில் ஒரு எண்டர்டெயினர் கியாரண்டி’ என்பதற்கேற்ப கூட்டுழைப்பைக் கொட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா, பிரதீப் கே.ராகவ், கலை இயக்குனர் மோகன மகேந்திரனின் கூட்டணி.

கொஞ்சம் வித்தியாசமான படம் என்று சொல்லும் அளவுக்கான காட்சியனுபவத்தைத் தர உதவியிருக்கிறது.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அடுத்தடுத்த காட்சிகளில் நம்மைப் பயத்தில் ஆழ்த்தவும் நகைச்சுவையில் மூழ்கவும் செய்யும் இசையைத் தந்திருக்கிறார்.

’நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்’ பாடலானது ‘லவ் டுடே’வில் வந்த மாமாகுட்டியை நினைவூட்டுகிறது; ஆனால், அதற்கு மாறான காட்சியமைப்பைக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் செல்வின் ராஜ் சேவியரின் கைவண்ணத்தில் ஆங்காங்கே வசனங்கள் பளிச்சிடுகின்றன. இது இவரது முதல் படம் என்பது நம்மை இன்னும் திரையை நோக்கித் தள்ளுகிறது.

சிரிப்புக்கு கியாரண்டி!

கடந்த ஆண்டு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியான ‘லவ் டுடே’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வரிசையில், தற்போது ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ சேர்ந்திருக்கிறது.

மாபெரும் வெற்றியைப் பெறுமா என்று தெரியாவிட்டாலும், ’இந்த வாரம் இந்த படம் பார்க்கலாம்’ என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதைத் தாண்டி, இதில் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. போலவே, ‘ட்ரீம் கேட்சர்’ எனும் அம்சம் இருப்பதால் இதில் லாஜிக் குறைகளையும் பெரிதாக நோக்கக் கூடாது.

பயமும் நகைச்சுவையும் கலந்த ‘ஹாரர்’ படம் என்பது இன்றைய தேதியில் பழைய பார்முலா. ஆனால், அதனைத் திறம்படத் திரையில் செயல்படுத்தும் படங்களோ வெகு குறைவு.

அந்த வகையில், ‘சிரிப்புக்கு கியாரண்டி’ என்பதாகக் களமிறங்கியிருக்கிறது ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது.

மக்களின் கவனம் இதன் மீது குவியும்போது, நாயகன் சதீஷும் இயக்குனர் செல்வினும் இணைந்து நமக்கு வேறொரு வகைமையில் அடுத்த படத்தைத் தர வாய்ப்புகள் அனேகம்.

அந்த நம்பிக்கையை உருவாக்கும் அளவுக்குப் படத்தின் உள்ளடக்கம் உள்ளது; அதேநேரத்தில், இரண்டாம் பாகம் எடுத்தால் இந்த பார்முலா புளித்துப் போகும் என்ற எண்ணத்தையும் இப்படம் உருவாக்குகிறது.

ஆதலால், ஒரு படம் பார்க்கலாமா என்று யோசிப்பவர்கள் தாராளமாக இதனைப் பார்த்துச் சிரித்தவாறே சிறிதளவு பயப்படலாம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like