காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!

“அதுல பாருங்க… அது கெடக்குது கழுத..‌.” இந்த ஃபேமஸ் டயலாக்குக்கு சொந்தக்காரர் தான் நம்ம வி.கே. ராமசாமி. அவர் நடித்த மிக முக்கியமான படங்களில் ஆண்பாவமும் ஒன்று. அந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இவர் நடித்த படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றான ஆண்பாவம் படத்தில் ஊருக்கு பெரிய மனிதராக நடித்திருப்பார். இதில், வி.கே.ராமசாமிக்கு பாண்டியன், பாண்டியராஜன் இருவரும் மகன்கள். மூத்த மகன் பாண்டியனை பக்கத்துக்கு ஊருக்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வரச்சொல்கிறார் வி.கே.ராமசாமி.

அவரும் அந்த ஊருக்குச் சென்று தவறுதலாக வேறொரு வீட்டில் இருக்கும் சீதாவை பார்த்துவிட்டு வருகிறார். பின்பு தான் தெரிகிறது அவர் பார்க்க வந்த பெண் இவரில்லை என்று. இருந்தாலும் சீதாவை இவர் காதலிக்க, சீதாவும் இவரை காதலிக்கிறார்.

ஆனால், வி.கே.ராமசாமி பார்க்கச் சொன்ன பெண்ணான ரேவதியை பாண்டியன் நிராகரித்து விட, ரேவதி தற்கொலைக்கு முயன்று தன் பேசும் தன்மையை இழக்கிறார்.

அதே சமயம் சீதாவுக்கும் வேறொருவரோடு நிச்சயமாகிறது. கடைசியில் பாண்டியன், சீதா ஒன்று சேர்ந்தார்களா? ரேவதியின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு மிகவும் நகைச்சுவையாக பதில் சொல்லியிருக்கும் படம் ‘ஆண் பாவம்’.

இந்தப் படத்திற்கு யார் ஹீரோ, யார் கதாநாயகி என்று சொல்வதை விட யார் இந்த படத்தில் சிறப்பாக காமெடி செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால், வி.கே.ராமசாமி தான் முதலில் மனதில் நிற்கிறார்.

‘பொண்ணு கருப்பு தோலா, சிகப்பு தோலா’ என்று பாண்டியன் கேட்கும்போது புலித்தோலு என்று நக்கலாக பதில் சொல்வது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். 

அடுத்தாக பாண்டியன்.

பேருந்தில், தான் பார்க்கப்போகும் பெண் எந்த நடிகை போல இருப்பாள்? என்று நினைத்துக் கொண்டே பக்கத்திலிருப்பவனின் காலில் சிகரட்டால் சுட்டு விட்டு அடி வாங்குவது, தான் கட்டியிருக்கும் வாட்சை சீதாவிடம் தன் காதல் பரிசாக கொடுப்பது என்று ஒரு கிராமத்து இளைஞனாக அழகாக நடித்திருக்கிறார் பாண்டியன்.

வி.கே.ராமசாமிக்கு தம்பியாக ஜனகராஜ். தன் அண்ணனுக்கு போட்டியாக ஹோட்டல் வைத்து நஷ்டத்தை சம்பாதிப்பது ஒரே ரகளையாக இருக்கும்.

‘பூர்ணம்’ விஸ்வநாதன் ரேவதியின் அப்பாவாக வந்து நிறைவாக நடித்திருப்பார்.
பாண்டியனின் ஜோடியாக சீதா. நல்ல தேர்வு. ஒரு கிராமத்துப் பெண்ணிற்குரிய அழகுடன் நன்றாக நடித்திருக்கிறார்.

அடுத்து ரேவதி. இவருக்கு எந்த வேடம் கொடுத்தாலும் சரி, மிகச் சிறப்பாக நடிப்பார். இந்தப் படத்தில் அவருக்கு வாத்தியார் மகள் வேடம். முதல் கொஞ்சம் நேரம் ஒரு துள்ளலான பெண்ணாக காட்டி, பின்பு ஊமையாக நடிக்க வைத்தது கொஞ்சம் சோகம் தான். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியான தேர்வு.

அடுத்து பாண்டியராஜனின் பாட்டியாக வரும் கொல்லங்குடி கருப்பாயி. இவரை ஒவ்வொரு காட்சியிலும் ஒரு நாட்டுப்புறப்பாட்டை பாட சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. ஏதாவது ஒரு பாட்டை பாடிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு காட்சியில் ரேவதிக்கு ஊசி போடும்போது தன் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு விரலிடுக்கில் ஊசி போடுவதை பார்க்கும்போது, அந்த கால பாட்டிகளுக்கு ஊசி என்றாலே பயம் என்று அழகாகவும், சூசகமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

‘இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு, இளையராஜா எந்தன் பாட்டிருக்கு’ என்ற வரி இசைஞானிக்கு தான் அம்சமாக பொருந்தும். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.

இதில் ‘காதல் கசக்குதைய்யா’ பாடல் இன்றைய தேதிவரை பிரபலம். ஒரு காதல் பின்னணி இசையை, சோக பின்னணி இசையாக மாற்றும் திறமை இசைஞானிக்கு தான் உண்டு.

அதுமட்டுமல்ல, அவருக்குத்தான் அதை எப்படி, எந்தக் காட்சியில் வைக்கவேண்டும் என்று மிக சரியாக கணிப்பார்.

அடுத்து படத்தின் இயக்குனர் பாண்டியராஜன். படத்தில் இவரின் பங்கு என்னவென்று பார்த்தால், ஒரு குணசித்திர கதாபாத்திரம் என்று சொல்லலாம். ஆனால் ஒரு இயக்குனராக இவர் புகுந்து விளையாடியிருக்கிறார்.

இவரது குரு பாக்யராஜ் திரைக்கதையில் வல்லவர் என்றால், இவர் நக்கலான வசனங்கள் அமைப்பதில் வல்லவர் என்று சொல்லலாம்.

‘நீ எங்க அம்மாவைக் கட்டிக்கும்போது, நான் உங்க அம்மாவைக் கட்டிக்கக் கூடாதா?’ போன்ற வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.

ஜனகராஜின் மகனாக நடித்திருக்கும் தவக்களை குழாயடியில் ஒரு சிறுமியோடு தண்ணீர் குடத்தில் தலையை உள்ளே விட்டு ‘ஹலோ ஆண்டாலு, சாப்பிட்டியா?’ என்று ஆரம்பிக்கும் காட்சி, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சீன் அது.

இந்த படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

இதுபோன்ற பேமிலி ஓரியன்ட்டு காமெடி படங்கள் இப்போது வருவதே இல்லை.

எல்லா ஹீரோக்களும் தியேட்டர் வாசலின் போஸ்டர்களில் கையில் ஏதாவது ஆயுதத்தை வைத்துக்கொண்டு ‘உள்ள வந்தா, கொன்னுடுவேன்’ என்ற ரீதியில் மக்களை மிரட்டுவதை விடுத்து, கொஞ்சம் இந்த மாதிரி கதைகளில் கூட நடிக்க முயற்சி செய்யலாம் என்பது ரசிகர்களின் கருத்து.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like