அனிமல் – மனிதரின் இயல்பைச் சுட்டிக் காட்டுகிறதா?

ஒரு திரைப்படம் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்போது, அது ரசிகர்களால் பெரிதாக வரவேற்கப்படும்போது ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறும்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ அப்படித்தான் விஜய் தேவரகொண்டாவுக்கும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கும் பெரிய பாராட்டுகளைத் தந்தது.

கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் அதில் நிறைந்திருந்த சண்டைக்காட்சிகள் மற்றும் ஹீரோயிசத்திற்காக கொண்டாடப்பட்டது.

இந்தியா முழுவதுமிருந்து வெளியாகும் திரைப்படங்களில் சிறிதும் பெரிதுமாகத் தாக்கத்தை உண்டுபண்ணின இப்படங்கள்.

மேற்சொன்ன இரண்டு படங்களையுமே நினைவூட்டும் விதமாக ‘அனிமல்’ தந்திருக்கிறார் இயக்குனர் சந்தீப்.

இதில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி, சக்தி கபூர், பிரேம் சோப்ரா, சௌரஃப் சச்தேவா உட்படப் பலர் நடித்துள்ளனர்.

‘அர்ஜுன் ரெட்டி’யில் தனது பின்னணி இசையால் திரும்பிப் பார்க்க வைத்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இதிலும் பங்களித்துள்ளார்.

இந்த ‘அனிமல்’ நமக்கு எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது?

ஒரு மகனின் பாசம்!

ஸ்வஸ்திக் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளரான பல்பீர் சிங் (அனில் கபூர்) எந்நேரமும் வர்த்தகமே உலகம் என்றிருக்கிறார். வீட்டில் இருக்கும் மனைவி, மகள்கள், மகன் மீது அவர் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.

ஆனால், மகன் ரான்விஜய் அவர் மீது மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார். தனது குடும்பத்தினருக்காக எதையும் செய்யும் மனநிலையை வார்த்தெடுக்கிறார்.

 கல்லூரியில் ‘ராகிங்’ என்ற பெயரில் சகோதரியைச் சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கேள்விப்பட்டவுடன், பாதுகாவலரின் எந்திரத் துப்பாகியைக் கையிலெடுத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைகிறார் ரான்விஜய் (ரன்பீர் கபூர்).

‘யார் எனது சகோதரியைக் கிண்டலடித்தது’ என்று கேட்கிறார்.

அவர்கள் சிரிக்கிறபோது, துப்பாக்கியை எடுத்து தரையில் சுடுகிறார். உடனே, அந்த நபர்கள் யாரென்று ஒருவர் சொல்கிறார். மோட்டார்சைக்கிளில் வரும் அந்த நபர்களைத் தனது காரால் இடித்து தள்ளுகிறார் ரான்விஜய்.

அதன் காரணமாக உறைவிடப் பள்ளியொன்றில் ரான்விஜய் சேர்க்கப்படுகிறார். தொடர்ந்து, வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார். நாடு திரும்பியதும், தந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அப்போது, சுற்றுச்சூழலையும் எளிய மக்களையும் நசுக்கும் ஸ்வஸ்திக்கின் புதிய திட்ட ஒப்பந்தத்தை விமர்சிக்கிறார். சகோதரியின் கணவரைத் திட்டுகிறார். அதனால், தந்தையால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

அன்றைய தினமே, ‘இவர்தான் எனது மனைவி’ என்று கீதாஞ்சலி (ராஷ்மிகா) எனும் பெண்ணைத் தந்தையிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்தப் பெண் ரான்விஜய் நண்பரின் சகோதரி. அவருக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமான பிறகு, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அந்தப் பெண்ணிடம் சொன்னவர் ரான்விஜய்.

அது மட்டுமல்லாமல், எக்காலத்திலும் உனக்கு அரணாக இருப்பேன் என்றவர். கூடவே, ‘நினைத்ததைச் சாதிக்கும் ஆல்ஃபா ஆண் வரிசையில் இடம்பெறுபவன் நான்’ என்று சொல்கிறார். அதனைக் கேட்டதும், அப்பெண் மனம் மாறிவிடுகிறார்.

அப்படிப்பட்ட ரான்விஜய், எட்டாண்டுகள் கழித்து மீண்டும் தந்தையைச் சந்திக்க மனைவி, குழந்தைகள் சகிதம் ஓடோடி வருகிறார். காரணம், மர்ம நபர்கள் சிலர் தந்தையைத் துப்பாக்கியால் கொல்ல முயன்றதுதான்.

அதன்பிறகு, தந்தையின் உயிரைக் காக்கத் தானே களமிறங்குகிறார். தந்தை வழி உறவினர்கள் சிலரை பஞ்சாப்பில் இருந்து அழைத்து வருகிறார்.

அப்போது, தனது சகோதரியின் கணவரே தந்தை மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததையும் அறிகிறார். அந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களும் கூட ஒருவகையில் ரான்விஜய்க்கு உறவினர்கள் தான்.

அதன்பிறகு, ரான்விஜய் என்ன செய்தார்? தனது குடும்பத்தைக் காக்க எந்த எல்லை வரைக்கும் அவர் சென்றார் என்று சொல்கிறது ‘அனிமல்’.

கூடவே, குடும்பத்துப் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் அடக்குமுறைகளைக் கையாளும் எந்தவொரு ஆணும் ‘அனிமல்’தான் என்கிறார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா.

தந்தை மீதான ஒரு மகனின் அதீத பாசமே இப்படத்தின் ஆதார மையம். அவரோ, காட்டில் இரைகளை வேட்டையாடும் சிங்கத்தைப் போலக் குடும்பத்திற்காகச் சம்பாதித்துப் போட்டால் போதும் என்றிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, அவரைச் சார்ந்த பலரும் கூட அப்படித்தான் இருக்கின்றனர். அந்த வரிசையில், அவரது மகன் இடம்பெறுகிறானா என்பதைச் சொல்கிறது இப்படம். அதுவே, ரசிகர்கள் இப்படத்தில் கவனிக்க வேண்டியது.

செறிவான உள்ளடக்கம்!

‘இந்த படத்தில் உங்களுக்குப் பல கெட்டப்புகள் உண்டு’ எனச் சொன்னால் ரன்பீர் கபூர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை.

சமீபகாலத்தில் அவர் நடித்த பல படங்கள் அப்படித்தான் இருந்தன. இதிலும் அப்படியே.

ஆனால், அதையெல்லாம் மீறி அவரது அபாரமான நடிப்புத்திறமையை வியக்கத்தான் வேண்டும். பல காட்சிகளில் அவரது நடிப்பில் சஞ்சய்தத்தின் சாயல் தெரிகிறது.

ராஷ்மிகாவுக்கு இதில் அழுத்தமான பாத்திரம். ஆண் பெண் நெருக்கம் உட்பட எதையும் நேரடியாகப் பேசும் வகையில் அவருக்கான வசனங்கள் அமைந்துள்ளன. சோகம் மற்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.

அனில் கபூர் படம் முழுக்க விறைப்பாக வந்து போயிருக்கிறார். இறுதிக் காட்சியில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதைப்படி இந்த படத்தின் வில்லன் அனில்கபூர் என்று புரிந்துகொண்டால், பாபி தியோலை ஏன் திரையில் அதிக நேரம் காட்டவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். சௌரஃப் சச்தேவா, ட்ரிப்தி டிம்ரி உட்படப் பலர் அவரைச் சார்ந்தவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

பிரேம் சோப்ரா, சக்தி கபூர், சுரேஷ் ஓபராய், உபேந்திர லிமாயே, சலோனி பத்ரா உட்பட இரண்டு டஜன் கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். அவர்களிடையே நமக்குத் தெரிந்த மேத்யூ வர்கீஸும் பப்லு பிருத்விராஜும் உள்ளனர் என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

அமித் ராயின் ஒளிப்பதிவு மட்டுமே மூன்று மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை அலுப்பின்றி ரசிக்கத் துணை நிற்கிறது.

சில காட்சிகளில் உணர்வுகளுக்கும் சிலவற்றில் பிரமாண்டமான உள்ளடக்கத்திற்கும் அவர் முக்கியத்துவம் தந்திருக்கும் விதமே, இயக்குனர் மீதான அவரது புரிதலைக் காட்டுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைக் குறித்த கதை என்பதால், சாதாரண ரசிகர்கள் படத்தோடு ஒன்றுவதற்கான விஷயங்கள் குறைவு.

குடும்பத்தின் மீதான அக்கறை, உறவுகள் குறித்த பார்வை, ஆணாதிக்க மனப்பான்மை, அவற்றால் அவதிப்படும் பெண் மனம் என்று பலவற்றைச் சொல்லி அந்தக் குறையை இல்லாமல் ஆக்குகிறார் சந்தீப்.

மதமாற்றம் உள்ளிட்ட சர்ச்சைக்குள்ளாகும் சில விஷயங்களும் கூட இதில் உண்டு.

சுரேஷ் பண்டாரு, பிரனய் ரெட்டி வாங்கா திரைக்கதையில் அவருடன் கைகோர்த்துப் பங்களித்துள்ளனர். சௌரஃப் குப்தா இதற்கு வசனம் எழுதியுள்ளார்.

அவற்றின் சாரத்தைத் தமிழில் தர உதவியிருக்கிறார் மோகன் குமார். இயல்பான அந்த வசனங்கள் படத்துடன் ஒன்றிணையத் தூண்டுகிறது.

சுரேஷ் செல்வராஜனின் தயாரிப்பு வடிவமைப்பானது, இத்திரைக்கதையில் இடம்பெறும் பல்வேறு களங்களை சில வண்ணங்களுக்குள் அடக்க முயன்றுள்ளது. அதனால், நம் கண்கள் பெரிதாக அவதிக்கு உள்ளாகவில்லை.

போலவே விஎஃப்எக்ஸும் நிறமூட்டலும் கூட வெகுநேர்த்தியாக அமைந்துள்ளன.

இயக்குனர் சந்தீப்பே இப்படத்தில் படத்தொகுப்பையும் செய்துள்ளார். அதனால், எடுத்த காட்சிகளை எப்படி வெட்டியெறிவது என்ற தயக்கத்துடன் படத்தை 3 மணி நேரம் 21 நிமிடங்கள் கொண்டதாகத் தந்துள்ளார்.

ஓடிடியில் வெளியாகும்போது, இன்னும் 25 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் சேர்க்கப்படும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. நிச்சயமாக, இந்த நீளம் ஒரு மைனஸ் தான்.

ஆனால்., சில மேற்கத்தியப் படங்கள் போல வெகுநிதானமான திரைமொழியுடன் இப்படத்தில் பல காட்சிகள் நகர்கின்றன.

அந்த உத்தியே ‘கிளாசிக்’ தன்மையைப் பெற்றுத் தரும் என்று கூட இயக்குனர் யோசித்திருக்கலாம்.

அதேநேரத்தில், ‘செறிவான உள்ளடக்கம்’ என்று யோசித்துப் பார்க்கும் வகையிலேயே இப்படத்தின் காட்சிகள் இருக்கின்றன.

அதற்கேற்ப ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் பின்னணி இசையும் ஒவ்வொரு காட்சியையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. ஐந்தாறு இசையமைபாளர்கள் பாடல்கள் தந்திருக்கின்றனர். அவை ஓகே ரகம் என்றளவில் நம்மை மகிழ்விக்கின்றன.

ஆணாதிக்கம் அதிகம்!

படத்தின் தொடக்கமே, ‘கொச்சையான பாலுணர்வு கிண்டல்’ சார்ந்த ஒரு விவாதத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அது, 2056ஆம் ஆண்டு இக்கதை நிகழ்வதாகச் சொல்லும். படத்தின் முடிந்தபிறகே, நாம் அதனை முழுமையாக உணர்வோம்.

பாலுணர்வு சார்ந்த கிண்டல், கேலிகள் பொதுவாக ஆணாதிக்கத்தை உணர்த்துவதாகவே இருக்கும். அதற்கேற்ப, இப்படமும் ‘ஆல்ஃபா’ ஆண்கள் சூழ்ந்த ஒரு உலகத்தையே முன்னிறுத்துகிறது.

அதாகப்பட்டது, ஆண் என்பவன் பொறுப்புமிக்கவன்; அவன் சொல்வதைப் பெண்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவரது அடக்குமுறைக்கு உட்பட வேண்டும்.

குடும்பம், நிறுவனம், ஆட்சியதிகாரம் என்று எல்லாவற்றிலும் இந்த மனப்பான்மையே நிலவுவதாகச் சுட்டுகிறது இப்படம். ‘அப்படி எனக்குத் தெரியவில்லையே’ என்பவர்கள் மீண்டும் ஒருமுறை இப்படத்தைப் பார்த்தாக வேண்டும்.

ஆனால், ரசிகர்களுக்கு அந்த ‘அரசியல்’ பிடிபடாத வகையில் பல காட்சிகள் படத்தில் உள்ளன. இடைவேளைக்கு முன்னதாக இடம்பெறும் சண்டைக்காட்சி அதிலொன்று.

‘வீடியோகேம்கள்’ தோற்றுப்போகும் அளவுக்கு அது அமைந்துள்ளது. ஆனால், அதில் கொட்டப்பட்ட உழைப்புக்காக அதனை வடிவமைத்த சுப்ரீம் சுந்தரைப் பாராட்டத்தான் வேண்டும்.

வில்லனாக வரும் பாபி தியோல் உள்ளிட்ட சிலருக்கும், நாயகனாக வரும் ரன்பீர் கபூருக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால், அப்பாத்திரங்களை உற்றுநோக்கினால் மிகப்பெரிய வேறுபாடுகள் புரிய வரும்.

என்னதான் குடும்பத்தைக் காக்கும் பொறுப்போடு ஆண்மகன் திரிந்தாலும், குடும்பத்தினர் மீது பாசம் காட்டுவது மிக முக்கியம். இல்லாவிடில், அது தப்பான முன்னுதாரணமாகிப் போகும் என்கிறது ‘அனிமல்’.

படம் பார்த்தபிறகு, ‘இனி தேவையின்றி குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது’ என்று ஒருவர் முடிவு செய்தால் அதுவே ‘அனிமல்’ படத்தின் வெற்றி.

மாறாக, ‘அனிமல்’ ஆக இருப்பது சிறந்தது என்று முடிவு செய்தால், அது உங்களது இயல்பைச் சுட்டிக்காட்டும்.

குடும்பத்தினரிடம், நண்பர்களிடம் மட்டுமல்லாமல் இந்தச் சமூகத்தையும் எப்படி நோக்குகின்றீர்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்.

– உதய் பாடகலிங்கம்

You might also like