வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!

அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர்.

அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த விளையாட்டைப் பற்றி விவேகானந்தருக்கு விளக்கினார். கொடிக்குக் கீழே இருக்கும் குழிக்குள் பந்தை செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது 4 முறையாவது முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.

இதில் விவேகானந்தருக்கு உடன்பாடில்லை. ”நான் ஒரே முயற்சியில் பந்தை குழிக்குள் செலுத்துகிறேன்” என்றார்.

உடனே ஹாலிஸ்டர், ”நான் ஐம்பது செண்ட் தருகிறேன்” என்றார். இவர்களுடைய விவாதத்தைக் கவனித்த லெக்கெட் என்கிற சீடர், ”சுவாமிஜி ஒரே முயற்சியில் செய்துவிட்டால் பத்து டாலர் தருகிறேன்” என்றார்.

உற்சாகமாக மட்டையை வாங்கிய விவேகானந்தர், சில நொடிகள் அந்தக் குழியை உற்றுப் பார்த்தார். பந்தை ஓங்கி அடித்தார். பந்து பறந்து போய் குழிக்குள் விழுந்தது.

அதைப் பார்த்த சீடர்களுக்கு அடுத்து பேச்சே வரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது என்று விசாரித்தனர்.

“முதலில் தூரத்தைக் கண்களால் அளந்து கொண்டேன். அந்தத் தூரத்துக்குப் பந்தைச் செலுத்த வேண்டுமானால் எவ்வளவு சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று கணக்கு போட்டுக் கொண்டேன். அடுத்ததாக, பந்தை செலுத்தினால் எனக்குக் கிடைக்கப் போகும் பத்தரை டாலர்களை நினைத்துக் கொண்டேன். ஓங்கி பந்தை அடித்தேன். அவ்வளவுதான்” என்றார்.

வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிமையாகப் புரிய வைத்து விட்டதாகச் சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

You might also like