சமீபகாலத்தில் பெரும் ஆரவாரமான ‘மார்க்கெட்டிங்’ உத்திகளுடனும், திரையரங்க ஆக்கிரமிப்புகளுடனும் வெளியாகும் வணிகமயமான படங்களால் அசலாகவே நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் எடுக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கே படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
தரமான படங்களைத் தயாரித்தும், இயக்கியும் அவற்றை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப் பலதரப்பட்ட சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படி வணிக மசாலா கலவையான படங்கள் மட்டுமே ஓட வைக்கப்படும் சூழலில், யதார்த்தமான படமான ‘குய்கோ’வை இயக்கிய தாமஸ் அருள்செழியனின் பதிவினைப் பாருங்கள்.
அவரது பதிவில், “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும், குய்கோவை தயாரித்த நிறுவனம் அதை வலுக்கட்டாயமாக ப்ரீசர் பாக்ஸில் அடைத்து உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டது.
குய்கோவிற்கு என் வீர வணக்கம்.
பின் குறிப்பு: துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும்…” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் ஒரு வணிக வெற்றிப்படத்தைத் தற்செயலாகக் கொடுத்த ஹீரோ “மூன்று, நான்கு கோடிகளை வைச்சுக்கிட்டுப் படம் எடுக்க வராதீங்க” என்று குரல் கொடுத்தது நினைவுக்கு வரும்.