‘காதல் ஒரு உயிர்ப்பிக்கும் சக்தி’ எனும் ஜோ!

பள்ளி, கல்லூரிக் காலத்து காதலைச் சொல்லும் படங்கள் இளைய தலைமுறையினரை எளிதாக ஈர்க்கும். ‘கல்யாணப்பரிசு’ க்கு முன் தொடங்கி ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்’, ‘வாரணம் ஆயிரம்’ என்று தொடரும் அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘ரங்கோலி’ கடைசியாகச் சேர்ந்தது.

பதின்ம வயதில் திரையில் அறிமுகம் ஆகுபவர்களுக்கு அது போன்ற கதைகளும் கதாபாத்திரங்களும் பொருந்திப்போகும் என்பதுவே அதற்கான காரணம். அது போன்றதொரு கதையே தன்னை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு ‘ஜோ’வில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார் ரியோராஜ். ‘சத்ரியன்’ படத்தில் அறிமுகமானாலும், அவர் நாயகனாக நடித்துள்ள நான்காவது படம் இது.

இதில் மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா நாயகிகளாக நடித்துள்ளனர். ஹரிஹரன் ராம் இதனை இயக்கியுள்ளார்.

இளம் வயதில் ஏற்படும் காதல் அனுபவங்களே இப்படத்தின் கதை என்பதை ட்ரெய்லர் உணர்த்தியது. அதைத் தாண்டி, சிறப்பான காட்சியனுபவத்தை இப்படம் தருகிறதா?

ஒரு காதலன் ஒரு காதலி!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான ஜோ (ரியோராஜ்). நண்பர்கள் குழாம் உடன் ஜாலியாகத் திரியும் ஒரு இளைஞர். ஒருமுறை அவர்களோடு சேர்ந்து ஒரு கலைவிழாவில் பங்கேற்கச் செல்கிறார்.

அங்கு வேறொரு பள்ளி மாணவனை அடித்து தகராறில் ஈடுபடுகிறார். அதன் காரணமாக, அப்பள்ளி மாணவர்களிடம் இருந்து தப்பியோடுகிறார்.

ஓராண்டு கழித்து, பள்ளியில் படித்த அதே நண்பர்கள் புடைசூழ கோயம்புத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் ஜோ. அங்கு, கேரளாவைச் சேர்ந்த சுசித்ராவை (மாளவிகா மனோஜ்) முதன்முறையாகப் பார்க்கிறார். பார்த்தவுடன், அவருக்குள் காதல் பூக்கிறது. அப்புறமென்ன, சுசித்ரா பின்னால் சுற்றுகிறார். அவரிடத்தில் காதலைச் சொல்ல நிறையவே தயங்குகிறார். ஒருகட்டத்தில் ஜோ காதலைச் சொல்ல, அதனை சுசித்ரா ஏற்கிறார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தக் காதல் இறுக்கமானதாகிறது. இந்த நிலையில், ஒருநாள் கோயிலில் இருக்கும் மஞ்சள் கயிறைத் தன் கழுத்தில் கட்டச் சொல்கிறார் சுசித்ரா. அதனைச் செய்யத் தயங்குகிறார் ஜோ. பின்னாட்களில் இதற்காக நாம் வருத்தப்படக்கூடாது என்கிறார் சுசித்ரா.

கல்லூரி முடிந்தபிறகு, இருவரும் முதுகலை படிப்புக்காக வெவ்வேறு ஊர்களுக்குச் செல்கின்றனர். மொபைல் வழியே தொடரும் காதல் பல சண்டை சச்சரவுகளையும் உருவாக்குகிறது. ‘இனிமேல் பிரிந்துவிடலாம்’ என்று முடிவு செய்தாலும், அவர்கள் சந்திக்கும் தருணங்கள் அம்முடிவை நீர்த்துப்போகச் செய்கின்றன.

திடீரென்று ஒருநாள், ‘வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்’ என்கிறார் சுசித்ரா. ஜோ செல்கையில், அவரது வீட்டில் சில உறவினர்களும் இருக்கின்றனர். சுசித்ராவை ஜோ திருமணம் செய்துகொள்வதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்போது நிகழும் கைகலப்பில் சுசித்ராவின் தந்தை கீழே விழுகிறார்.

வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் சுசித்ரா, தனது தந்தையைத் தள்ளியது ஜோ என்று நினைக்கிறார். அவர் மீது ஆத்திரப்படுகிறார். அந்த தருணம் அவர்களது காதலை முறிக்கிறது.

பிரிவைத் தாங்க முடியாமல் ஜோ தவிக்கிறார்; மது போதையில் மூழ்குகிறார். இந்த நிலையில், சுசித்ராவுக்குத் திருமணம் நடக்கவிருக்கும் தகவல் கிடைக்கிறது. அதையடுத்து, அவரை கேரளாவுக்குக் கூட்டிச் செல்கின்றனர் நண்பர்கள்.

அங்கு, சுசித்ரா தற்கொலை செய்துகொண்டு பிணமாகக் கிடக்கும் காட்சியைக் காண்கிறார் ஜோ. ‘ஒரு கணமும் பிரியமாட்டேன் என்று சொன்னாளே’ என அவரது சடலத்தின் முன் நின்று துடிக்கிறார். அது அவரை உடலளவிலும் மனதளவிலும் சிதைக்கிறது. இப்படியே சில ஆண்டுகள் கரைகின்றன.

அந்த துயரில் இருந்து ஜோவை விடுவிக்க, அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர் அவரது பெற்றோர்.

திருமணத்திற்கு முந்தைய நாள், ‘இனிமேல் குடிக்கமாட்டேன்’ என்ற சத்தியத்துடன் நண்பர்களுடம் சேர்ந்து மது அருந்துகிறார் ஜோ. அப்போது, மணப்பெண் ஸ்ருதி (பவ்யா த்ரிகா) அவருக்கு போன் செய்கிறார்.

ஆனால், ஜோவின் நண்பர் ஒருவர் அந்த போனை ’அட்டெண்ட்’ செய்கிறார். எதிர்முனையில் இருக்கும் ஸ்ருதி, ‘இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க ப்ளீஸ்’ என்கிறார்.

ஸ்ருதி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, அடுத்தநாள் காலையில் அவரது கழுத்தில் தாலி கட்டுகிறார் ஜோ. அதன்பிறகு, ஒரே வீட்டுக்குள் இருவரும் இரு துருவங்களாக வாழ்கின்றனர்.

அந்த நாட்களில், ஸ்ருதியின் மனதில் வேறொரு ஆண் இருப்பதை அறிகிறார் ஜோ. அந்த நபர் யார்? அதனை அறியும் ஜோவின் முயற்சி என்னவானது என்பதோடு இப்படம் முடிவடைகிறது.

‘ஒரு காதலன் ஒரு காதலி’ என்று பயணிக்கும் ‘ஜோ’ திரைக்கதை, இறுதியில் சின்னதாக ஒரு திருத்தத்தைச் சேர்க்கிறது. அது, தொடக்கக் காட்சியை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டுகிறது. கூடவே, நல்லதொரு காதல் படம் பார்த்த திருப்தியையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.

இயல்பான நடிப்பு!

ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் ஆகியன ஒன்றிணைந்த திரைக்கதை, ஒரு அறிமுக நாயகனை எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். அந்த வகையில், தன்னை முன்னிறுத்தும் ஒரு ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றியை ஈட்டிவிட்டார் நாயகன் ரியோராஜ். அதற்கேற்ற நடிப்பையும் தந்திருக்கிறார்.

நாயகி மாளவிகா மனோஜ் முதல் பார்வையிலேயே நம்மை ஈர்க்கிறார். பெரிதாக அலங்காரங்கள் இல்லாமல் திரையில் அவர் வந்து போயிருப்பது ஒரு அழகியை நேரில் காணும் உணர்வை உருவாக்குகிறது. காதல் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது கண்களே பாதி நடிப்பை வெளிப்படுத்துவது இன்னொரு சிறப்பு.

பவ்யா த்ரிகாவுக்குக் காட்சிகள் குறைவு. அவர் வசனம் பேசுவது செயற்கையாகத் தெரிந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை ஈர்க்கிறார். கல்யாண பருவத்தை எட்டிய பெண்ணாகக் கண்ணுக்கு அழகாகத் தோன்றும் பவ்யா, பள்ளி மாணவியாக வரும் இடங்களில் நம் அதிருப்தியைச் சம்பாதிக்கிறார்.

‘கோலமாவு கோகிலா’வில் யோகிபாபுவைக் கதறவிட்ட அன்புதாசன், இதில் ரியோவின் நண்பர்களில் ஒருவராக வருகிறார். அவரும் அவருடன் வரும் இதர இளைஞர்களும் அடிக்கும் லூட்டிகள் அந்தக்காலத்து சார்லி, தாமு, விவேக், வையாபுரியை நினைவூட்டுகின்றன.

அதையும் மீறி, அவர்கள் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பே இப்படத்தைக் காப்பாற்றுகிறது. அவர்களுக்கு இணையாக, உடற்கல்வி ஆசிரியராக வருபவர்                                                                                                 பின்பாதியில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

இவர்கள் தவிர்த்து எம்.ஜெ.ஸ்ரீராம் பிரவீனா, இளங்கோ குமணன், ஜெயகுமார், சார்லி எனப் பலர் இதில் நடித்துள்ளனர்.

சித்துகுமார் இசையில், ’ஒரே கனா கண்டேன்’ பாடல் யுவன் குரலில் ஒலிக்கிறது. அதோடு சேர்ந்து ‘கோவை குளிரா’, ‘உருகி உருகிப் போனதடி’, ‘கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு’ பாடல்கள் மெல்ல நம் மனதைத் தொடுகின்றன. ‘குஷி’ விவேக்கை நினைவூட்டும் ‘காலேஜ் கல்ச்சுரல்ஸ்’ இசைக்கோர்வை துள்ளலாட்டத்திற்கு உத்தரவாதம் தருகிறது.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, தென்றல் வருடும் அனுபவத்தை வழங்கியிருக்கிறார் சித்துகுமார்.

ஒளிப்பதிவாளர் ராகுல் கேஜி விக்னேஷ் ஒவ்வொரு ஷாட்டையும் அழகுறக் காட்டுவதற்கு மெனக்கெட்டிருக்கிறார். அதுவே, நாம் திரையை விட்டுக் கண்களை அகலாமல் இருக்கச் செய்கிறது.

வருண் கேஜியின் படத்தொகுப்பு, ஏபிஆரின் கலை வடிவமைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப உழைப்பு ஒன்றுசேர்ண்ட்து நல்லதொரு காட்சியாக்கத்திற்கு உத்தரவாதம் தருகின்றன.

நண்பர்களுடன் சேர்ந்து ரியோ அடிதடியில் இறங்குமிடங்கள் ‘பிரேமம்’ படத்தை நினைவூட்டுகின்றன. முன்பாதியில் ‘ஆட்டோகிராப்’, ‘வாரணம் ஆயிரம்’ போன்றவற்றை நினைவூட்டினாலும், பின்பாதியில் ஒரு மென்மையான காதல் கதையாக ‘ஜோ’வை மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன் ராம்.

இளைய தலைமுறையினர் உற்சாகத்துடனும் ஆவேசத்துடனும் படம் பார்ப்பதோடு, ஆங்காங்கே உணர்ச்சிவசப்படவும் இடம் தந்திருக்கிறார்.

மடை மாற்றும் காதல்!

பள்ளியிலும் கல்லூரியிலும் மட்டுமல்லாமல், வாழ்விலும் அதே நண்பர்கள் தொடர்வதென்பது நல்லதொரு கற்பனை மட்டுமே. இப்படத்தில் நாயகனோடு வரும் நண்பர்கள் அப்படித்தான் காட்டப்பட்டுள்ளனர்.

நாயகன் நாயகியிடம் காதலைச் சொல்லத் தயங்குவது வெகு நேரம் திரையில் ஓடுகிறது. அதேநேரத்தில், அவர்களுக்கு இடையிலான ஊடல் வெகுசிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

காதல் நிறைவேறாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் எனும் செய்தி ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒரு மூலையில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. அது வேண்டாமே என்று சொன்ன வகையில் கவனம் கவர்கிறது ‘ஜோ’.

காதலில் விழுந்து, திளைத்து, உருகும் காதலர்கள், அதன்பிறகும் தங்களது வாழ்க்கை தொடரும் என்பதை ஏன் மறக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்பிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

கல்லூரியில் மாளவிகாவின் பின்னால் சுற்றுபவராக ஒரு நபரைக் காட்டுகிறார் இயக்குனர். இரண்டு பேரும் மோதிக்கொள்வார்கள் என்று பார்த்தால், ‘தேவையில்லாத ஃபுட்டேஜ்’ என்று அந்த விஷயத்தைப் பாதியில் விட்டிருக்கிறார்.

அதேபோல, இக்கதையில் நாயகனின் நண்பர்களுக்குத் தந்த முக்கியத்துவம் அவரது பெற்றோர்களுக்குத் தரப்படவில்லை. இரு நாயகிகளின் குடும்பமும் கூட திரையில் அழுத்தமாகக் காட்டப்படவில்லை. அதனால், அவர்கள் வரும் காட்சிகளில் நம்மால் பெரிதாக ஒட்ட முடிவதில்லை.

இது போன்ற குறைகளைத் தாண்டி, அதிகமான காதல் காட்சிகளைக் கொண்டிருப்பதே ‘ஜோ’வின் யுஎஸ்பி என்று சொல்லலாம்.

வாழ்வில் சோகங்களில் வீழ்ந்த ஒருவரை உயிர்ப்பிக்கும், அவரது வாழ்வை மடைமாற்றும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொன்ன வகையில், இது எல்லா வயதினரையும் ஈர்க்கும். திரையரங்குகளில் காணும்போது, ‘ஜோ’ தரும் காட்சியனுபவம் இந்த உலகை மென்மையாக நோக்கச் செய்யும். அது வேண்டும், வேண்டாம் என்பதைப் பொறுத்து இந்த காதல் படைப்பு உங்களை ஈர்க்கும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like