வெகு யதார்த்தமான கதாபாத்திரங்களையும் களங்களையும் காண்பிக்கும் சில மலையாளத் திரைப்படங்கள் போலத் தமிழிலும் படைப்புகள் காணக் கிடைக்குமா? இந்தக் கேள்விக்கு அவ்வப்போது பதிலளித்து வருகிறது தமிழ் திரையுலகம்.
அந்த வரிசையில் மேலும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது டி.அருள்செழியன் இயக்கியுள்ள ‘குய்கோ’. இதில் யோகிபாபு, விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு, துர்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரையில் யதார்த்தத்தை நிறைக்கும் திரைப்படங்கள் ‘மிக சீரியசான’ விஷயங்களைப் பேசுபவையாக இருக்கும். அந்த வகையில், இந்த ‘குய்கோ’ எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?
வித்தியாசமான மனிதர்கள்!
கணக்கு பாடத்தில் கில்லாடியாக விளங்கும் தங்கராஜ் (விதார்த்), தான் பார்த்துவந்த டுடோரியல் ஆசிரியர் வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்.
அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தை நண்பருடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படுகிறார். அதற்குத் தேவைப்படும் ஆயிரம் ரூபாயைக் கடனாகப் பெறுவதற்காக, தனது உறவினர் பண்பழகனை (முத்துகுமார்) பார்க்கச் செல்கிறார்.
அதன் பலனாக, கந்துவட்டி கொடுமை செய்வதாகப் பண்பழகன் மீது பதிவாகும் வழக்கொன்றில் தங்கராஜின் பெயரும் சேர்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், சடலத்தைக் காப்பதற்காக அவர் வைத்திருந்த ‘ப்ரீசர் பாக்ஸ்’ உடன் தங்கராஜ் ஒரு மலைக்கிராமத்திற்குப் பயணப்படுகிறார்.
இதையடுத்து, கதையும் திருவண்ணாமலையில் இருந்து அந்தக் கிராமத்திற்குத் தாவுகிறது.
துபாய் அரசரிடம் ஒட்டகம் மேய்க்கும் வேலையைச் செய்து வரும் மலையப்பனின் (யோகிபாபு) தாயார் வீர லட்சுமி இறப்பையொட்டி, அந்த ப்ரீசர் பாக்ஸ் எடுத்துவரப்படுகிறது.
வந்த இடத்தில், தொடர்ந்தாற்போல மூன்று நாட்கள் தங்கராஜ் தங்க நேரிடுகிறது. மலையப்பன் ஊருக்கு வந்தபிறகும், தங்கராஜால் அக்கிராமத்தை விட்டு வெளியேற முடிவதில்லை.
அது ஏன்? அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்று சொல்கிறது ‘குய்கோ’.
இடைவேளைக்குப் பிறகு, முழுப்படமும் மலையப்பனைச் சுற்றியே நகர்கிறது.
கிராமத்தில் மாடு மேய்த்து வந்த மலையப்பனை முத்துமாரி (துர்கா) எனும் பெண் காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு முத்துமாரியின் சகோதரர் தடையாக நிற்கிறார். தனது அந்தஸ்தைக் காரணம் காட்டி மலையப்பனைக் கடுமையாக அவமானப்படுத்துகிறார்.
வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் முத்துமாரியின் சகோதரரைப் போலவே தானும் பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கில் மலையப்பன் துபாய் செல்கிறார்.
துபாய் அரசரிடம் வேலைக்குச் சேர்கிறார். தாயின் இறுதிக்காலத்தில் உடன் இருக்க முடியவில்லையே என்று வருத்தப்படும் மலையப்பன், ஈமச்சடங்குகளுக்காக ‘தாம்தூம்’ என்று செலவு செய்கிறார்.
மலையப்பனிடம் இருக்கும் பணத்தைச் சுருட்ட, ஊரில் சிலர் ஆலாய் பறக்கின்றனர். ஆனால் தங்கராஜோ, பண்பழகனோ அவ்வாறு நினைப்பதில்லை. இதுவே, மலையப்பன் மனதில் அவர்கள் குறித்து நன்மதிப்பு பெருகக் காரணமாகிறது.
எப்படிப்பட்ட குணமுடையவர்களாக இருந்தாலும், அவர்களது இயல்புடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடைய மலையப்பனுக்கு அந்த கிராமத்தில் வாழ வேண்டும் என்பதே ஆசை. அது நிகழ்ந்ததா இல்லையா என்று சொல்கிறது படத்தின் கிளைமேக்ஸ்.
இரண்டு பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்து கதை அங்குமிங்கும் நகர்ந்தாலும், திரைக்கதை முழுக்கவே யதார்த்த வாசம் அதிகம். அது மட்டுமே, இந்த ‘குய்கோ’வைக் கொண்டாடக் காரணமாக இருக்கிறது.
யதார்த்த முகங்கள்!
சில படங்களில் யதார்த்தமான முகங்கள் தெரிய வேண்டுமென்று படப்பிடிப்புத்தளங்களில் வாழும் மனிதர்களையே பயன்படுத்துவார்கள்.
‘குய்கோ’வில் முக்கியப் பாத்திரங்களில் நடித்தவர்கள் தொழில்முறை நடிகர்களாகவே இருக்கின்றனர்.
ஒரு நாயகனுக்குரிய அம்சங்கள் திரையில் தெரிய வேண்டுமென்று மெனக்கெடாமல், ஒரு சாதாரண பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார் விதார்த். அதுவே, முன்பாதியில் கதையோடு ஒட்டவும் ஆங்காங்கே சிரிக்கவும் வழியமைத்துத் தருகிறது.
யோகிபாபு நடித்த நல்ல படங்கள் பட்டியலில் நிச்சயமாக ‘குய்கோ’வும் இடம்பெறும்.
சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காதலியைச் சந்திப்பது, திருடர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று சொல்வது, ப்ரீசர் பாக்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று பெரும்பணம் கொடுப்பது போன்ற காட்சிகளில் அவரது நடிப்பு ‘வாவ்’ சொல்ல வைக்கிறது.
‘ஏ செகப்பழகி’ பாடலுக்கு முன்னர், வயற்காட்டில் யோகிபாபு நடப்பதாக ஒரு ஷாட் உண்டு. அப்போது, தரையில் படுத்திருக்கும் ஒரு பெண் நடனக்கலைஞர் எச்சில் துப்புவார்.
‘ஏன் என்னோட தலையில துப்பு’ என்று யோகிபாபு சொல்ல, பதிலுக்கு அவர் ‘கொஞ்சம் குனி’ என்பார். இது போன்ற நகைச்சுவை வசனங்கள் இதில் அதிகம்.
நாயகிகளாக வரும் ஸ்ரீபிரியங்கா, துர்கா இருவருக்குமே காட்சிகள் குறைவு. என்றாலும், அவர்களது பாத்திரங்கள் நம் மனதில் நிற்கும்விதமாகவே அவர்களது நடிப்பு அமைந்துள்ளது.
கால்குலேட்டர் சண்முகமாக நடித்துள்ள இளவரசு, மிகச்சாதாரணமாக நாம் நேரில் காணும் சில கிராமத்து மனிதர்களை நினைவூட்டுகிறார். முத்துக்குமாரும் அந்த வரிசையில் இணைந்து கொள்கிறார்.
இவர்கள் தவிர்த்து இன்னும் பலர் இப்படத்தில் உண்டு.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் பணியானது, மொத்த திரைக்கதையின் மீதும் யதார்த்த முலாம் பூச உதவியிருக்கிறது.
பெரிதாக அலங்காரங்கள் இன்றி அமைந்திருக்கும் அவரது ஒளிப்பதிவே, தினசரி வாழ்க்கையில் நாம் காணும் நகைச்சுவையாகக் காட்சிகளைக் கருத வைக்கிறது.
கலை இயக்குனர் டி.பாலசுப்பிரமணியம், காட்சிகள் நிகழும் களங்களுக்கேற்ப ‘மினிமலிசத்துடன்’ திரையில் சூழலை வடிவமைக்க உதவியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் மிகுந்த ரசனையுடன், நிதானம் திரையில் தெரியும் வகையில் ஷாட்களை அடுக்கியிருக்கிறார்.
ஐந்து பாடல்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ‘மாலை முரசு காலையில் வரும்’ பாடலைத் தந்திருக்கிறார் கெவின் மிராண்டா.
இதர பாடல்களையும் பின்னணி இசையையும் அந்தோணி தாசன் அமைத்துள்ளார். ‘அடி பெண்ணே’, ‘ஏ செகப்பழகி’ இரண்டுமே துள்ளல் ஆட்டத்தை உருவாக்கும் ரகமாக உள்ளன.
எள்ளல் நடையுடன் அமைந்த ‘வீர வணக்கம் வீர வணக்கம்’ பாடல், அதற்குப் பொருத்தமான காட்சியமைப்புடன் சேர்ந்து நம்மை குதூகலத்தில் ஆழ்த்துகிறது.
இந்த வரிசையில் ஷாரூக்கான், கஜோலை நினைவூட்டும் ‘நீ முத்து மாரி..’ பாடலுக்கும் ஒரு இடமுண்டு. அதற்கு யோகிபாபுவும் துர்காவும் ஆடுகையில் நம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.
இயக்குனர் அருள்செழியன், ஏற்கனவே ‘ஆண்டவன் கட்டளை’ படத்திற்கு எழுத்தாக்கம் செய்தவர்.
அப்படத்தைப் போலவே இதிலும் வித்தியாசமான களம், கதாபாத்திரங்கள் மூலமாகப் புதிய காட்சியனுபவத்தை நமக்கு வழங்குகிறார்.
விதார்த் வீட்டில் மாமியாரும் மருமகளும் சண்டையிடுவது போன்று இப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி வரும்.
அப்படியானால், அவருக்கும் ஸ்ரீபிரியங்காவுக்கும் காதல் வருமா என்ற கேள்வி நமக்குள் முளைக்கும். அதுவே, இப்படத்தை மீண்டும் ஒருமுறை காணத் தூண்டும். இது போன்ற ‘சுவாரஸ்ய சமாச்சாரங்கள்’ இதில் நிறைந்திருக்கின்றன.
அதேபோல, இக்கதையில் இரண்டு திருடர்கள் வருகின்றனர். அவர்களை ஒரேயொரு காட்சியில் மட்டும் இயக்குனர் காட்டியிருக்கிறார். அவர்களால் தான் ஈமச்சடங்கு நடக்கும் இடத்திற்கே போலீசார் வருகின்றனர்.
இது போன்ற விஷயங்களைச் சட்டென்று சொல்லிவிட்டு நகரும் பாங்கே, அருள்செழியனின் எழுத்தாக்கத்தைக் கொண்டாடத் தூண்டுகிறது.
பிடிக்குமா, பிடிக்காதா..?!
முதல் பகுதிக்கும் இறுதிப்பகுதிக்கும் நடுவே பிரச்சனையின் முதல் முடிச்சையும் அது தீர்வதற்கான தொடக்கத்தையும் காட்டியாக வேண்டும் என்பது ‘கமர்ஷியல் பட திரைக்கதைகளுக்கான’ அடிப்படை விதி.
அப்படிப் பார்த்தால், முதல் பகுதியில் அக்கதைக்குத் தேவையான களங்களும் கதாபாத்திரங்களும் விவரிக்கப்படும். இறுதிப்பகுதியில் அந்த தீர்வை நோக்கிய பயணம் முழுமையாகக் காட்டப்படும்.
அப்படி எந்த விதிகளும் ‘குய்கோ’வுக்கு பொருந்தாது. அதற்காக, இத்திரைக்கதையைச் சுவாரஸ்யமற்றது என்று புறக்கணித்துவிடவும் முடியாது.
ஐபிஎல் போட்டியைக் காண விரும்பும் ஒரு மனிதன், தற்செயலாக ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்கிறார். அதுவே கதையில் வரும் முதல் திருப்பம்.
அந்த இடத்தில் அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள் எப்படிப்பட்டது? அதன் மூலமாக, அவரைப் பீடிக்கவிருந்த ஆபத்து எப்படி நீங்கியது ஆகியன இடைப்பட்ட பகுதியில் மிகநிதானமாகச் சொல்லப்படுகிறது.
இறுதிப்பகுதியில் அந்த கிராமத்திற்கும் அவருக்குமான உறவு எந்தளவுக்கு உள்ளது என்பது விளக்கப்படுகிறது.
மேற்சொன்ன விஷயங்களே, இந்த திரைக்கதை எவ்வளவு தூரம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு நுட்பம் கொண்டது என்பதைச் சொல்லிவிடும்.
சாதாரண மனிதர்களின் வாழ்வை நகைச்சுவையாகச் சொன்னாலும், இத்திரைக்கதையில் சமூக அரசியல் எள்ளல்களும் அதிகம்.
மூதாட்டியின் மரணத்தையொட்டி ‘வீர வணக்கம்’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டும்போது, ‘இதெல்லாம் நியாயமா’ என்று கேட்பார் நாயகன். சடலத்தை வைக்கும் குளிர்சாதனப் பெட்டி காணவில்லை என்றதும், ‘இதுக்கு தனிப்படை அமைச்சு தேடணும்பா’ என்று சொல்வார் ஒரு போலீஸ்காரர்.
‘சாலையில் இருந்த மரங்களை எம்.எல்.ஏ. வெட்டிட்டாரா’ என்று ஒருவர் வினவ, ‘யப்பா நீ கேள்விய கேட்டுட்டு துபாய் போயிடுவ, நாங்கதான் இங்க வாழணும்’ என்பார் எதிரே இருப்பவர். இப்படிச் சமகால சமூக, அரசியலைக் கிண்டலடிக்கும் பல இடங்கள் இப்படத்தில் உண்டு.
அது புரியாமலும் ஒருவரால் சிரிக்க முடியும்; புரிந்துகொண்டு கொஞ்சம் பலமாகவும் நகைக்க முடியும். அதுதான் ‘குய்கோ’வின் சிறப்பு.
திரைக்கதையில் சுவாரஸ்யங்கள் இருந்தாலும், தொடக்கத்தில் வரும் 20 நிமிடங்கள் மனதோடு ஒட்ட நேரம் ஆகிறது.
போலவே, சில பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் கொண்டிருந்தாலும் மொத்த திரைக்கதையும் ஒரு நீரோடை போல வழிந்தோடுகிறது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல பொங்கிப் பிரவாகமாக மாறவில்லை.
‘அதெல்லாம் தேவையில்லை, இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்க்கும் அளவுக்குப் புதிதாக இருந்தால் போதும்’ என்பவர்கள் தாராளமாக ‘குய்கோ’வைப் பார்க்கலாம்.
பார்த்தபிறகு நிச்சயமாகக் கொண்டாடாமல் இருக்க முடியாது. வரும் வாரமும் இப்படம் தியேட்டரில் இடம்பிடித்தால் மட்டுமே அது நிகழும். அவ்வாறு நடந்தால், இயக்குனர் அருள்செழியனும் படக்குழுவினரும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள்!
– உதய் பாடகலிங்கம்