வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!

வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம்.

முப்பதாண்டுகளுக்கு முன்பே, அறுபது வயதைத் தொட்டவர்களாக மோகன்லாலும் மம்முட்டியும் நடித்திருக்கின்றனர். இன்று அவர்கள் முப்பதைத் தொட்டவர்களாகத் திரையில் தோன்றி வருகின்றனர்.

வெறுமனே நடிப்பு மட்டுமல்லாமல், திரைக்கதையிலும் பாத்திர வடிவமைப்பிலும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிற வித்தை அங்கு நிறையவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதனை முன்மாதிரியாகக் கொண்டு, இன்றைய தலைமுறையும் சில பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஷேன் நிகம், சன்னி வெய்ன், அதிதி பாலன், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடித்த ‘வேல’ படமும் அதிலொன்று. சாம் சி.எஸ். இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எம்.சாஜஸ் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்; ஷ்யாம் சசி இதனை இயக்கியுள்ளார்.

மீண்டும் பணி வாய்ப்பு!

பாலக்காடு காவல் கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார் உல்லாஸ் அகஸ்டின் (ஷேன் நிகம்). ஒருநாள் இரவு, அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது.

தன் மகனும் அவனது நண்பர்களும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக, ஒரு நபர் தகவல் சொல்கிறார்.

அதனை, அப்பகுதியில் ரோந்து மேற்கொள்ளும் போலீசாரிடம் உல்லாஸ் தெரிவிக்கிறார்.

அந்த சிறுவனின் வீட்டுக்குச் செல்கிறார் சப்இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுன் (சன்னி வெய்ன்). அதையடுத்து, அச்சிறுவனும் அவனது நண்பர்களும் தப்பியோடுகின்றனர்.

அந்தச் சிறுவனைப் பின்தொடர்ந்து ஜீப்பில் தனியாகச் செல்கிறார் மல்லிகார்ஜுன். அதன்பிறகு, அவன் வீடு திரும்பவில்லை.

சில நாட்கள் கழித்து, தன் மகன் காணாமல் போனதாகப் புகார் கொடுக்கிறார் அச்சிறுவனின் தந்தை. அப்போதும், அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மல்லிகார்ஜுன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உல்லாஸ் புகார் செய்கிறார்.

ஆனால், அவரது வாதம் நீர்த்துப் போகிறது. பதிலுக்கு, அவர் மீதே துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது; அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறார்.

சில மாதங்கள் கழித்து, உல்லாஸ் மீண்டும் கட்டுப்பாட்டு அறை பணிக்குத் திரும்புகிறார். அதற்கு முந்தைய தினம், உல்லாஸின் காதலி (நம்ரிதா) அவரைக் காண வருகிறார்.

தன்னை உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டுமென்றும், இல்லாவிட்டால் வீட்டில் உடனடியாக மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்றும் சொல்கிறார். ஆனால், அவருக்கு உரிய பதில் சொல்லாமல் சென்றுவிடுகிறார் உல்லாஸ்.

அடுத்தநாள் காலையில், கட்டுப்பாட்டு அறை தலைமை அதிகாரியிடம் (சித்தார்த் பரதன்) மல்லிகார்ஜுன் குறித்து தான் சேகரித்து வைத்த தகவல்களையும், சம்பவம் நடந்த அன்று அச்சிறுவன் காணாமல் போன தினத்தன்று எங்கிருந்தார் எனும் வரைபடச் செயலி விவரங்களையும் கொண்ட ஒரு கோப்பினைக் கொடுக்கிறார்.

இந்த விஷயம் உடனடியாக மல்லிகார்ஜுனுக்கு தெரிந்துவிடுகிறது.

அன்றைய தினம், சில போலியான அழைப்புகளால் உல்லாஸ் அலைக்கழிக்கப்படுகிறார்.

அந்த நேரத்தில், அவரது காதலி சிலரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மல்லிகார்ஜுனுக்கு உல்லாஸின் ஒவ்வொரு அசைவும் தெளிவாகத் தெரிகிறது. அவரை எதிர்கொள்ள முடியாமல் உல்லாஸ் திணறுகிறார்.

திருவிழாவொன்றில் ‘எக்ஸ்ட்ரா போர்ஸ்’ தேவைப்படுவதாகக் கூறி, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிடுகின்றனர்.

அதையடுத்து, தனது காதலியைச் சந்திக்க இயலாமல் அங்கேயே இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் உல்லாஸ்.

அந்த நேரத்தில், தனது கணவனைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்யும் முடிவுடன் இருப்பதாக ஒரு பெண் ‘போன்’ செய்கிறார். அவர் யார்? எங்கிருந்து பேசுகிறார் என்று எந்த விவரமும் இல்லை.

அப்பெண்ணைக் காப்பாற்ற, அந்த பகுதியில் ரோந்து செல்லும் போலீஸ் வாகனத்தைத் தொடர்பு கொள்கிறார். இம்முறையும் அந்த வாகனத்தில், எஸ்ஐ மல்லிகார்ஜுன் இருக்கிறார்.

ஏற்கனவே உல்லாஸ் மீது ஆத்திரத்தில் இருக்கும் மல்லிகார்ஜுன், அதன்பிறகு என்ன செய்தார்? உல்லாஸுக்கும் மல்லிகர்ஜுனுக்குமான பகை தீர்ந்ததா? மிக முக்கியமாக, அந்த பெண் உண்மையிலேயே தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறாரா என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்த ‘வேல’.

முத்திரை நடிப்பு!

நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், ஒரு துடிப்பான இளம் கான்ஸ்டபிள் ஆகத் திரையில் தெரிகிறார்.

அதேநேரத்தில், வழக்கமான கமர்ஷியல் படங்களில் வருவது போன்று நேரடியாக ரவுடிகளோடு அவர் மோதுவதில்லை. அந்த வகையில், இந்த படம் ஆறுதல் தருகிறது.

இதில் எஸ்ஐ மல்லிகார்ஜுனன் என்ற நடுத்தர வயது போலீஸ் அதிகாரியாக வந்து போயிருக்கிறார் சன்னி வெய்ன். அவரது மிடுக்கும் உடல்மொழியுமே படத்தில் பாதி காட்சிகளை உயிர்ப்புள்ளதாக மாற்றியிருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக சித்தார்த் பரதன் இத்திரைக்கதையில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் குறைவென்றபோதும், அளவெடுத்தாற்போல தனது பாத்திரத்தை ஏந்தியிருக்கிறார்.

மூவரது பாத்திர வார்ப்புகளும் திரையுலகுக்குப் புதிதல்ல என்றபோதும், அதில் தங்களது முத்திரையைப் பதிக்க வேண்டுமென்று முயற்சித்திருக்கின்றனர்.

அதிதி பாலனுக்கு இதில் மிகச்சிறிய பாத்திரமே தரப்பட்டுள்ளது. ஷேன் நிகம் ஜோடியாக வரும் நம்ரிதாவுக்கு அந்த அளவுக்குக் கூட முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

இவ்விரு பெண் பாத்திரங்களையும் எந்த அளவு திரையில் காட்ட வேண்டும் என்ற விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்று திரைக்கதையாசிரியர் எம்.சாஜஸ் மற்றும் இயக்குனர் ஷ்யாம் சசி இருவருமே திணறியிருக்கின்றனர். அதேநேரத்தில், இப்பாத்திரங்கள் இக்கதையில் முக்கிய இடத்தையும் வகிக்கின்றன.

இவர்கள் தவிர்த்து, திரையில் முகம் காட்டுபவர்களின் எண்ணிக்கை ஒரு டஜன் இருந்தால் அதிகம்.

சுரேஷ் ராஜன் ஒளிப்பதிவானது ‘லைவ்’வில் தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் அனுபவத்தை ஊட்டுகிறது.

படத்தொகுப்பாளர் மகேஷ் புவானந்த், திரைக்கதையில் விடுபட்டிருக்கும் பல தகவல்களை மீறி இயக்குனர் சொல்ல வந்ததைச் சீராகத் திரையில் காட்ட முயற்சித்திருக்கிறார்.

பல இடங்களில் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையே ‘காப்பான்’ ஆக வந்து நிற்கிறது. அவர் தந்திருக்கும் இரண்டு பாடல்களும் கூட, நீரோட்டத்தின் எதிரே படகை விரைவாகச் செலுத்த உதவும் துடுப்புகள் போன்று பயன்பட்டிருக்கின்றன.

வித்தியாசமான முயற்சி!

தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையிலான ஒரு திரைக்கதையைக் கொண்டு, வழக்கமான கதையொன்றைச் சொல்ல முற்பட்டிருக்கிறது எம்.சாஜஸ் – ஷ்யாம் சசி இணை.

சாதி வேறுபாடு, போதைப்பொருள் பயன்பாடு, காவல் துறை அதிகாரிகளுக்கு இடையிலான இணக்கம் என்று பல விஷயங்கள் இதில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், வரதட்சணைக் கொடுமையும் கூட இதில் உள்ளது.

திரைக்கதை முழுக்கவே காவல் துறை கட்டுப்பாட்டு மையம் பிரதானமாக விளங்குகிறது. அங்கு ஒருநாள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று காட்டுகிறது இத்திரைக்கதை.

அதேநேரத்தில், குயுக்தியும் வன்மமும் நிறைந்த ஒரு போலீஸ் அதிகாரியோடு ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் மோதினால் என்னவாகும் என்ற கதை அதனுள் இழையோடுகிறது.

செய்யும் வேலையை ஆத்மார்த்தமாக நேசிப்பவருக்கும், அதனைப் பயன்படுத்திப் பிழைக்க வேண்டுமென்று நினைப்பவருக்குமான முரணாக அது தொடங்குகிறது.

கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம். ஒரு கதையின் அடிநாதத்தைப் புரிந்துகொண்டு, அதனை அடிக்கோடிட்டுக் காட்டும் காட்சிகளை மட்டும் ஒரு வரிசையில் கோர்ப்பதுதான் திரைக்கதை.

அந்தக் கதையில் இருக்கும் பல விஷயங்கள் அதில் மறைமுகமாகச் சொல்லப்படலாம் அல்லது சொல்லாமலே விடப்படலாம்.

அனைத்தையும் தாண்டி, தியேட்டரை விட்டு வெளியேறும்போது அந்த திரைக்கதை திருப்தியைத் தந்திருக்க வேண்டும்.

சில நேரங்களில், திரைக்கதையில் பூடகமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பிடிபடாமலேயே வெளியே வர வேண்டியிருக்கும்.

அது திருப்தியின்மையை ஏற்படுத்தும். சில ஆண்டுகள் கழித்து, அடுத்த தலைமுறை அந்த படத்தில் நிறைந்திருக்கும் விஷயங்களைச் சிலாகித்து தள்ளும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

ஆனால், அப்படியொரு உதாரணமாகத் திகழ வேண்டுமென்று நினைத்து தற்காலத்தில் படம் எடுப்பது மிக ஆபத்தானது.

‘வேல’ திரைப்படம் அந்த வேலையையே செய்திருக்கிறது. ‘பேச்சு ஓகே, செயல் எங்கே’ என்று கேட்கத் தூண்டுகிறது. அரைக்கிணறு தாண்டுவது எப்போதுமே சோகத்தைத் தான் தரும். இப்படம் அதனை மிகச்சரியாகச் செய்திருக்கிறது!

– உதய் பாடகலிங்கம்

You might also like