நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்துக்கு ‘மொய்தீன் பாய்’ என்கிற கவுரவ வேடம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
‘லால் சலாம்’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திருவண்ணாமலை, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
பொங்கல் திருநாளில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ‘லால் சலாம்’ வெளியாகிறது.
தீபாவளியையொட்டி இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் ரஜினி பேசும் வசனம் வைரலாகி வருகிறது.
விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி, மத மோதலாக உருவெடுத்து கலவரம் வெடிப்பதுடன் டீசர் தொடங்குகிறது.
இதனால் சில மரணங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினி என்ட்ரி கொடுக்கிறார்.
‘விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க – குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சிருக்கீங்க’ என ‘மொய்தீன் பாய்’ ரஜினி ஆவேசமாக கர்ஜிக்கிறார்.
இந்த வசனத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியபோது, பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சிலர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.