இரண்டு நாயகர்கள் ஒன்றாகக் கைகோர்த்து காமெடி, ஆக்ஷனில் ஈடுபடுவது போலவே நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் திரைக்கதைகளும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
அந்த வரிசையில் சுரேஷ் கோபியையும் பிஜு மேனனையும் எதிரெதிரே நிறுத்தியிருக்கிறது ‘கருடன்’ மலையாளத் திரைப்படம்.
இது ஒரு த்ரில்லர் என்பது விளம்பரங்களின் வாயிலாகப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அதையும் தாண்டி தியேட்டருக்கு சென்றால், நமக்கு எத்தகைய அனுபவம் கிட்டுகிறது?
சைக்கோ த்ரில்லர்!
கல்லூரி விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்புகிறார் மாணவி தெரசா (சைதன்யா பிரகாஷ்). அவரை ஒரு மர்ம நபர் கொடூரமாகத் தாக்கி, கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு இடத்துக்குக் கொண்டு செல்கிறார்; பாலியல்ரீதியில் அவரிடம் அத்துமீறுகிறார்.
அந்த நபர் தெரசாவைக் கொலை செய்ய முயற்சிக்கையில், கட்டுமானப் பணியாளர்களில் ஒருவரான சலாம் (ஜகதீஷ்) அங்கு வருகிறார்; மின்னல் வெளிச்சத்தில், அந்த நபரைக் காண்கிறார். சலாமைக் கண்டதும், அவர் தப்பியோடி விடுகிறார்.
இந்த வழக்கை போலீஸ் அதிகாரி ஹரீஷ் மாதவ் (சுரேஷ் கோபி) விசாரணை செய்கிறார். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான தெரசா ‘கோமா’வில் இருப்பதாக அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
ஏழு மாதங்கள் கழித்து, குற்றவாளியின் டிஎன்ஏவை வைத்து தேடும் முயற்சிகள் நடக்கின்றன.
அப்போது, அதே போன்றதொரு டிஎன்ஏ ஹைதராபாதில் இருக்கும் சுதேவ் என்பவருக்கு இருப்பது தெரிய வருகிறது.
மாதவ் நடத்தும் விசாரணையில், அவரது உறவினர் ஒருவர் கேரளாவில் இருப்பது தெரிய வருகிறது.
அந்த நபர் தெரசா பயிலும் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒரு பேராசிரியர். அவரது பெயர் நிஷாந்த் (பிஜு மேனன்).
நிஷாந்தின் டிஎன்ஏவை ரகசியமாகச் சேகரிக்கின்றனர் போலீசார். தெரசா வழக்கில் கிடைத்த டிஎன்ஏவோடு அது பொருந்துவதை உறுதிப்படுத்துகின்றனர். அந்த ஆதாரங்களைக் கொண்டு நிஷாந்தை கைது செய்கின்றனர்.
நீதிமன்றத்தில் நிஷாந்துக்கு ஏழாண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சரியாக ஏழு ஆண்டுகள் கழித்து, அவர் சிறையில் இருந்து வெளியே வருகிறார் நிஷாந்த்.
அப்போது, காவல் துறை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார் ஹரீஷ். அவர் ஓய்வு பெறும் தினமன்று, உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று கோரி நிஷாந்த் மனு செய்கிறார்.
விசாரணையின்போது, சிறையில் இருந்தவாறே நிஷாந்த் சட்டம் பயின்றது தெரிய வருகிறது.
தொடர் விசாரணையில், அவர் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட சாட்சிகள், ஆதாரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
இதையடுத்து, அந்த வழக்கில் நிஷாந்த் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதன்பிறகு, ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராகத் தன் வாழ்வை மீண்டும் தொடங்குகிறார். ஆனால், ஹரீஷ் மாதவ் மட்டும் நிஷாந்த் குற்றவாளி தான் எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
அதன்பிறகு, இருவரும் எப்போது நேருக்கு நேர் சந்தித்தனர்? தெரசாவின் பாதிப்புக்கு யார் காரணம்? உண்மையிலேயே நிஷாந்த் ஒரு சைக்கோ குற்றவாளியா? ஹரீஷின் முடிவு தப்பா, சரியா என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கருடன்’.
இந்த படத்தில் காவல் துறையே ‘கருடன்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதேநேரத்தில், திட்டமிட்டு கொடூரக் குற்றங்களை நிகழ்த்தும் ஒரு சைக்கோ கொலையாளியின் செயல்பாடுகளோடும் இந்த டைட்டிலை பொருத்திப் பார்க்க முடியும்.
முக்கால்வாசி காட்சிகளுக்குப் பிறகு கதை முடிச்சு அவிழ்ந்துபோய் ஏனோதானோவென்று கிளைமேக்ஸ் அமைவதே இதுபோன்ற ‘த்ரில்லர்’ படங்களின் சாபக்கேடு. இதில் அது நிகழவில்லை. மாறாக, கடைசிவரை அந்த ’த்ரில்’ தொடர்கிறது.
அசத்தும் சுரேஷ்கோபி!
கடந்த ஆண்டு ஜோஷி இயக்கத்தில் ‘பாப்பன்’ படம் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து, ‘சுரேஷ்கோபி இஸ் பேக்’ என்றனர் மலையாள ரசிகர்கள். உண்மையில், அப்படிச் சொல்வதற்கு நூறு சதவிகிதம் ஏற்ற படம் இதுவே.
காரணம், அந்தளவுக்கு நேர்த்தியான நடிப்பை அசத்தலாகத் தந்திருக்கிறார்; அதேநேரத்தில், 2கே கிட்ஸ்களை மனதிற் கொண்டு ‘உரக்க’ வசனம் பேசும் பாணியைத் தவிர்த்திருக்கிறார்.
அவருக்கு இணையாகப் படம் முழுக்க வருகிறார் பிஜு மேனன்.
அவர் தனக்கென்று தனி பாணியைக் கைக்கொண்டு இயங்குபவர் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்.
அதையும் மீறி, அவரது நடிப்பு நம்மை ஆச்சர்யத்தில் தள்ளுகிறது.
சுரேஷ்கோபியின் மனைவியாக வரும் அபிராமிக்கோ, பிஜுவின் மனைவியாக வரும் திவ்யாவுக்கோ இப்படத்தில் பெரிதாக வேலை இல்லை.
தெரசாவாக வரும் சைதன்யா, ஒரு சில காட்சிகளில் வந்து நம் மனதைத் தொடுகிறார்.
தலைவாசல் விஜய், சித்திக், ஜகதீஷ், ஜெயன் சேர்தலா, மேஜர் ரவி போன்ற மூத்த கலைஞர்களோடு திலேஷ் போத்தன், தினேஷ் பிரபாகர், நிஷாந்த் சாகர் என்று அடுத்த தலைமுறை நடிகர்களும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
மஞ்சள், நீலம் என்று ஒன்றுக்கொன்று எதிரான வண்ணங்களை ஒவ்வொரு பிரேமிலும் நிரப்பி, செறிவான பிம்பங்களை நமக்குத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜய் டேவிட் கச்சப்பள்ளி.
இதர மலையாளப் படங்களில் இருந்து விலகி, ஒரு ‘ஸ்டைலிஷான’ மேக்கிங்கை நமக்கு உணர்த்துகிறது அவரது உழைப்பு.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை தொடக்கம் முதலே விறுவிறுப்பை அள்ளித் தருகிறது. பின்பாதியில் வரும் இசையில், ஷாருக்கான் ‘டான்’ இசை தாக்கம் தென்படுகிறது.
ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ருக்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கிறது.
வெறுமனே படத்தொகுப்பு நுட்பங்களில் மட்டுமல்லாமல், கதை நகர்வும் சீராக இருக்கிறதா என்பதில் கவனத்தைச் செலுத்தியிருப்பது நல்ல விஷயம்.
அனீஸ் நாடோடியின் கலை வடிவமைப்பு காட்சிகளின் செறிவுக்குத் துணை நின்றிருக்கிறது.
எம்.ஜினேஷ் எழுதிய மூலக்கதைக்குத் திரை வடிவம் தந்திருக்கிறார் மிதுன் மேனுவல் தாமஸ்.
இவரது எழுத்தாக்கத்தில் வெளியான ‘அஞ்சாம் பதிரா’வைப் போலவே, இப்படமும் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரை அனுபவத்தைத் தருகிறது.
இயக்குனர் அருண் வர்மாவுக்கு இது முதல் படம். அந்த எண்ணம் தோன்றாத வகையில் திரையில் கதாபாத்திரங்களையும் காட்சிப்போக்கையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.
யார் குற்றவாளி!
தொடக்கக் காட்சிகளிலேயே, ‘யார் குற்றவாளி’ என்பதனை நம் கண் முன்னே காட்டிவிடுகிறார் இயக்குனர்.
அதன்பிறகு, அந்த பிம்பத்தை பிஜுமேனன் உருவத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாகிறோம்.
கிளைமேக்ஸில் அந்த உருவகம் சரிதானா இல்லையா என்பது தெரிந்துவிடுகிறது.
அதற்கேற்றவாறு, இடைவேளைக்கு முன் வேகமெடுக்கும் திரைக்கதை அதன்பிறகு நிதானமாக நகர்கிறது. அந்த இடங்கள் ரசிகர்களுக்குச் சலிப்பைத் தரலாம்.
‘த்ரில்லர்’ படங்களிலேயே ஊறிப்போனவர்களுக்கு, இந்த படத்தின் கிளைமேக்ஸ் திருப்பங்கள் முன்கூட்டியே தெரியலாம்.
ஆனால், படம் பார்க்கையில் அதனால் எந்த இடையூறும் ஏற்படாது.
தொண்ணூறுகளில் மலையாளத் திரையுலகில் கோலோச்சிய சுரேஷ்கோபி, 2000ஆவது ஆண்டுக்குப் பின் அடக்கி வாசிக்கத் தொடங்கினார்.
ஆனாலும், அந்த பத்தாண்டு காலத்தில் அவர் தந்த வெற்றிப்படங்களை ரசிகர்களால் மறக்க முடியவில்லை.
உணர்ச்சிப் பெருக்குடன் அவர் வசனம் பேசும் பாணியும், அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான படத்தை முன்வைக்கும் திரைக்கதையும் படத்தொகுப்பு உத்திகளும் அதன் பின்னணியில் உண்டு.
அது போன்றதொரு அனுபவத்தை, இன்றைய 2கே கிட்ஸ்களுடன் அமர்ந்து பார்க்கையிலும் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ‘கருடன்’.
நுணுக்கமாகப் பார்த்து ‘லாஜிக்’ தவறுகளைத் தேடாமல், நல்லதொரு த்ரில்லர் பார்க்க வேண்டுமென்பவர்களுக்கு ஏற்றது இப்படம்.
– உதய் பாடகலிங்கம்