ஒரு படம் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பதைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரால் முழுமையாகக் கணிக்க முடியாது. ஆனால், நூறு சதவிகித அர்ப்பணிப்போடும் மகிழ்ச்சியோடும் பணியாற்றும்போது அதன் வெற்றி உறுதிபடுத்தப்படும்.
திரையில் ஓடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அப்படிப்பட்ட படைப்புகளை அடையாளம் கண்டுவிட முடியும்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன், விக்ராந்த், சூரி, பாரதிராஜா, சரத் லோகித்சவா, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்த ‘பாண்டியநாடு’ படம் முதல் பார்வையிலேயே அப்படியொரு கருத்தை நமக்குள் தோற்றுவிக்கும்.
ஆக்ஷன் அதகளம்!
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதையில் ஆக்ஷனை நுழைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அதேநேரத்தில், அப்பாத்திரங்களை வலுவாகப் படைத்து, அவற்றை உணர்ச்சிக் குவியலில் திளைக்க வைத்து, அதன்பிறகு ஆக்ஷன் காட்சிகளைத் திரையில் காட்டுகையில் ரசிகர்கள் கூக்குரலிடுவார்கள்; மெய் மறந்து ரசிப்பார்கள்; திரும்பத் திரும்பப் பார்த்து அப்படத்தைக் கொண்டாடுவார்கள்.
பாண்டியநாடு படத்திலும் பாரதிராஜா ஏற்ற கல்யாண சுந்தரம் மற்றும் விஷாலின் சிவகுமார் பாத்திரங்கள் வழியே அதனைச் சாதித்திருந்தார் சுசீந்திரன்.
நண்பர்கள், தன்னை ஈர்க்கும் பக்கத்து வீட்டுப் பெண் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண இளைஞன், தனது சகோதரரைக் கொன்ற பெரிய ரவுடிகளை எப்படிப் பழிக்குப் பழி தீர்க்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
ஒவ்வொரு பாத்திரத்தின் இயல்பையும் சரியாக வெளிப்படுத்தி, அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் காட்சிப்படுத்தி இருந்தார் சுசீந்திரன்.
அதனால், ஆக்ஷன் அதகளம் என்று சொல்லும்படியாகச் சண்டைக் காட்சிகள் அமைந்திருந்தன; தொடக்கத்தில் இருந்து இறுதி வரையிலான திரைக்கதையும் பரபரப்பூட்டுவதாக இருந்தது.
பாடல்களும் சண்டைக்காட்சிகளும்..!
‘பாட்ஷா’ படத்தில் ஆனந்தராஜ் உடன் ரஜினிகாந்த் மோதுவார் என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே உணர்ந்திருந்தனர். அதனாலேயே, எதிரிகளிடம் ரஜினி அடி வாங்குவதைக் கண்டு கண்ணீர் வடித்தனர்; அடுத்த சில நிமிடங்களில் அவர் தண்ணீர் பைப்பை பிடுங்கும்போது விசில் அடித்துக் கொண்டாடினர்.
ஒரு நாயகன் அடியாட்களை அடிப்பதைக் காட்டிலும், அதற்கு முன்பான ‘ஆக்ஷன் பில்டப்’ ரொம்பவே முக்கியமானது. ‘நான் மகான் அல்ல’ படத்திலேயே, அதில் தான் வல்லவன் என்பதை உணர்த்தியிருந்தார் இயக்குநர்.
அழகர்சாமியின் குதிரை, ஆதலினால் காதல் செய்வீர், ராஜபாட்டை படங்களைத் தொடர்ந்து, பாண்டியநாடு படத்தில் அந்த திறமையைத் திறம்படக் காட்டியிருந்தார்.
அதனாலேயே மதுரை பேருந்து நிலையத்தில் பாரதிராஜாவை வில்லன்களிடம் இருந்து விஷால் காப்பாற்றும் சண்டைக்காட்சி நம்மைக் கவர்ந்தது.
போலவே, இமான் இசையில் பாண்டியநாடு பாடல்களும் ரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்தின.
‘பை பை..’, ‘தையாரே..’, ’ஒத்தக்கடை மச்சான்’, ‘ஏலே, ஏலே மருது..’ போன்ற பாடல்கள் ‘ஒன்ஸ்மோர்’ கேட்கத் தூண்டின.
அதற்கேற்றவாறு, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாயகனோடு பிணைக்கும் வகையில் அவற்றின் பின்னணி வடிவமைக்கப்பட்டிருந்து. இந்த படத்தில் ‘பை பை’ பாடலைக் கார்கி எழுத, மற்றவற்றை அவரது தந்தை வைரமுத்து எழுதியிருந்தார்.
பின்னணி இசையிலும் ’த்ரில்’ ஊட்டி, மனதைக் கண்ணீரில் நனைக்கச் செய்து, காதலில் திளைக்க வைத்து நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்திருந்தார் இமான்.
ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படத்திற்குப் பாடல்களும் சண்டைக்காட்சிகளும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து, அவற்றை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமானதாகப் படைத்திருந்தார் இயக்குனர் சுசீந்திரன்.
கதாபாத்திரப் படைப்பில் மட்டுமல்லாமல், காட்சியமைப்பில் சினிமாத்தனத்தைக் காட்டிலும் யதார்த்தம் பொங்கி வழிந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் மதியும் கலை இயக்குனர் ராஜீவனும் பொறுப்பேற்றிருந்தனர்.
விஷாலின் சிறப்பு!
எந்தவித பில்டப்பும் இல்லாமல் மிகச்சாதாரணமாகத் திரையில் அறிமுகமாகும் பாத்திரம், அடுத்தடுத்த காட்சிகளில் அசாதாரணமானதாக மாறும்போது ரசிகர்களை உற்சாகம் தொற்றும்.
அதற்குப் பொருத்தமாக, அப்பாத்திரத்தில் நடிப்பவரின் தோற்றமும் இருக்க வேண்டும். அந்த வகையில், யதார்த்த பாணியில் அமைந்த ஆக்ஷன் திரைக்கதைகளுக்கு மிகப்பொருத்தமானவர் விஷால்.
அவரது உயரமும் முகவெட்டும் நடிக்கும் பாங்கும் அதற்குப் பெருமளவில் உதவும். அதுவே அவரது சிறப்பு.
ஆனால், அந்த வழியில் செல்லாமல் ‘திமிரு’ காட்டிய சினிமாத்தனமிக்க கதைகளில் உழலத் தொடங்கியதால், அவர் தோல்விகளைச் சந்தித்தார்.
நெடுநாட்களுக்குப் பிறகு, ‘பாண்டியநாடு’ படத்தில் அந்த தோற்றம் காணக் கிடைத்தது. இதற்குப் பிறகு மீண்டும் யதார்த்த பாணியில் இருந்து விலகிய திரைக்கதைகளில் இடம்பிடித்தார் விஷால்.
அவ்வாறு அவர் நடித்த படங்களில் துப்பறிவாளன், எனிமி, மார்க் ஆண்டனி ஆகியனவே பெரும் வெற்றியை ஈட்டின. இதிலிருந்தே, அவரது பாத்திரங்கள் எப்படிப்பட்டதாக இருந்தால் ரசிகர்கள் ஆராதிப்பார்கள் என்பது நன்கு விளங்கும்.
வெற்றிப் பாதையில்..!
2013ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதியன்று, தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வெளியானது ‘பாண்டிய நாடு’. அஜித், ஆர்யா, டாப்சி, நயன்தாரா நடித்த மல்டி ஸ்டார் படமான ’ஆரம்பம்’ மற்றும் ராஜேஷ், கார்த்தி, சந்தானம் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஊட்டிய காமெடி படமான ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய படங்களும் சேர்ந்தே வெளியாகின.
முன்னது பெரும் வரவேற்பைப் பெற, பின்னது சுமாரான வெற்றியை ஈட்ட, இவ்விரண்டுக்கும் நடுவே தாக்குப்பிடித்து வெற்றிப்பாதையில் நடை போட்டது ‘பாண்டிய நாடு’. சுமார் 50 கோடிக்கும் மேல் வசூலைப் பெற்றது.
படத்தில் விஷால் மட்டுமல்லாமல் விக்ராந்த், சூரி, சரத் லோகித்சவா, ஹரீஷ் உத்தமன், லட்சுமி மேனன், அத்வைதா ஏற்ற பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பதியும்படி திரையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
குணசித்திர பாத்திரங்கள் ஏற்ற பாரதிராஜா, முத்துராமன், குரு சோமசுந்தரத்தின் நடிப்பு, நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை நினைவூட்டின.
அது மட்டுமல்லாமல், வில்லத்தனத்தின் பின்னணியில் காட்டப்பட்ட நிகழ்வுகள் அப்போதைய சமூக அரசியல் நடப்பை நினைவூட்டுவதாக இருந்தன.
மீண்டும் ‘பாயும் புலி’யில் சுசீந்திரனும் விஷாலும் இணைந்தாலும், பாண்டியநாடு மாயாஜாலத்தைத் தொட முடியவில்லை.
கதை, கதாபாத்திரங்கள், திரைக்கதையோட்டம் என்று அனைத்திலும் ‘பாண்டியநாடு’ கனகச்சிதமாக இருந்தே அதற்குக் காரணம்.
இன்றோடு அப்படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது பார்த்தாலும் புத்துணர்வைத் தருவதுதான் இப்படத்தின் ஆகப்பெரும் சிறப்பு.
இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஷால் உட்படப் பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொருவரும், அது போன்றதொரு படைப்பைத் தரவே மெனக்கெடுவார்கள்.
அப்படியொரு எல்லையை வகுத்த காரணத்தாலேயே, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமாக நிற்கும் இந்த ‘பாண்டியநாடு’.
– உதய் பாடகலிங்கம்