ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

எங்கே போகும் இந்தப் பாதை?

திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா “என்னடா.. இது மதுரைக்கு வந்த சோதனை?’’ என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டுக்கு ஆளுநரை வைத்து இப்படியொரு சோதனை!

எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே சர்ச்சைக்குரியவராக இருந்திருக்கிறார்கள். சிலர் இருந்த இடம் தெரியாதபடி இருந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

தற்போதைய ஆளுநர் இதில் தனிரகம்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கென நியமிக்கப்படுவதற்கு முன்பே ‘சர்ச்சை’யில் அடிபட ஆரம்பித்துவிட்டார்.

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழைக் கற்றுக் கொள்ளப் போவதாக முதலில் சொன்னவர், தமிழைக் கற்றாரோ, இல்லையோ, தமிழக இடங்களில் தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு வலம் வருவது எப்படி என்கிற வித்தையைக் கனகச்சிதமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

அவர் போகும் இடங்களுக்குச் சர்ச்சையும் பின்தொடர்ந்து சென்றது. பேசினாலே ஊடகங்களுக்குத் தீனி தாராளமாக‍க் கிடைத்தது.

ஆளுநர் எதைப் பேசினால் பிரச்சினையாகும், எதைத் தாமதித்தால் பிரச்சினை ஆகும் என்று அவருக்குச் சிறப்பு ஆலோசனை வழங்குவதற்கென்றே தனியாகத் தேர்ச்சி பெற்ற ஒரு குழு செயல்படும் போலிருக்கிறது.

தமிழகத்தில் சனாதனம் பற்றிய சர்ச்சையை உதயநிதிக்கு முன்பே கிளப்பி ஊடகங்களில் அதைப் பேசுபொருளாக்கிய அவர், எழுவர் விடுதலை விஷயத்தில் காட்டிய காலதாமத‍த்தை நீதிமன்றம் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது.

தொடர்ந்து அவர் கால்டுவெல்லைப் பற்றிப் பேசினார். திராவிடம், ஆரியம் பற்றிப் பேசினார். சுதந்திரப் போராட்ட வீர‍ர்களைப் பற்றிப் பேசினார். ஜி.யு. போப் பற்றிப் பேசினார்.

அதே சமயம் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நீண்ட காலமாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமியக் கைதிகளின் விடுதலை விஷயத்திலும், மூத்த அரசியல்வாதியான சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் கொடுப்பதிலும்,

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் மீதான ஊழல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான அனுமதி விஷயத்திலும் நீட் மசோதா விஷயத்திலும், பாராமுகமாகவே இருக்கிறார்.

அதற்கான கோப்புகள் அவரின் கையெழுத்தைப் பெறாத நிலையில் ராஜ்பவனில் தூங்குகின்றன.

இப்படியெல்லாம் இருக்கும்போது, பெட்ரோல் குண்டு வீசிவதையே தொழிலைப் போலச் செய்துகொண்ட விசித்திரமான அடைமொழி கொண்ட முன்னாள் குற்றவாளி அவருடைய மாளிகைக்கு முன்பு பெட்ரோல் குண்டை சாலையில் வீசினால் சும்மா இருப்பாரா ஆளுநர்?

உடனே தகுந்த ஆலோசனை செய்து ஒரு திகல் க்ரைம் ஸ்கிரிப்டையே தயாரித்து வெளியிட்டு விட்டார்.

“ஆளுநர் மாளிகையே.. வாயை அடக்கு’’ என்று டி.ஆர் பாலு அறிக்கை விட, கூட்டணிக் கட்சிகள் ‘ஆளுநர் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் ஆகிவிட்டாரா’ என்று கொந்தளிக்க, ஆளுநரைத் தமிழகத்திலேயே தொடர்ந்து இருக்கச் சொல்லி அன்புடன் தமிழ்நாடு முதல்வர் கேட்டுக்கொள்ள – அடுத்தடுத்து எத்தனை காரசாரமான பரிமாறல்கள்?

நிறைவாகத் தற்போது உச்சநீதிமன்றத்திலேயே ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழக அரசு தரப்பில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.

ஆளுநர் ரவி விஷயத்திலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விஷயத்திலும் ஒன்றிய அரசும், பா.ஜ.க தலைமையும் பாகுபாடில்லாமல் ஒரே அணுகுமுறையைத் தான் இதுவரை கடைப்பிடிக்கின்றன.

அதாவது எந்த எதிர்வினையும் காட்டாமல் மௌனமாக இருப்பது தான் அந்த அணுகுமுறை.

“ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா’’ – கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் பொருத்தமாக நினைவுக்கு வருகின்றன.

You might also like