நிதி நெருக்கடியில் விஜய் பயிலகங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் களத்துக்கு வரும்போது, அவர்களை விமர்சிப்பதும், விரோதமாக பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமே நிகழும் விநோதப் போக்காக உள்ளது.

இந்த விசித்திர வழக்கம், இன்று நேற்றல்ல, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் போன்ற கலைஞர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்த 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உடல் தளர்ந்த விளையாட்டு வீரர்கள், அவ்வளவு ஏன்? சாராய தொழிற்சாலை உரிமையாளர்களும் கூட, அரசியலில் நுழைந்து தேர்தல்களில் நின்று வெல்லும் போது, ஜீரணித்துக் கொள்வோர், நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது மட்டும் அவர்களை வேற்றுக்கிரக வாசிகள் போல் பார்ப்பது புரியாத புதிராகவே உள்ளது.

இப்போது நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புதியதொரு அரசியல் கட்சி துவங்கி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின், பலப்பல நடிகர்களுக்கும் நாற்காலிக் கனவுகள் தோன்றின.

ஒரு டஜனுக்கும் அதிகமான நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள். யாருமே இலக்கை எட்டவில்லை. பலர் கட்சியை கலைத்து விட்டுப்போய் விட்டார்கள். சிலர், பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, ‘கடை’ நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் போன்ற நாற்காலிக் கனவு, சினிமாவில் இன்று உச்சம் தொட்டு நிற்கும் ‘இளைய தளபதி’ விஜய்க்கும் ஏற்பட்டிருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே, அரசியலில் நுழையும் திட்டத்துடன், அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறார் விஜய்.

தனது விஜய் ரசிகர் மன்றத்தை, விஜய் மக்கள் இயக்கம் எனும் புதிய ‘லேபிள்’ ஒட்டி மாற்றம் செய்து, அதன் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் என்ற புதுச்சேரி அரசியல்வாதியை விஜய் நியமித்த போதே, இளைய தளபதியின் அரசியல் ஆட்டம் ஆரம்பித்து விட்டது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை எலிக்குப் புகட்டி பரிசோதனை செய்து பார்ப்பது போன்று, உள்ளாட்சி தேர்தல்களில், தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரை போட்டியிட வைத்து, அந்த பரிசோதனை முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைத்ததும், அரசியலில் குதிப்பது என்ற உறுதியான முடிவுக்கு வந்து விட்டார் விஜய்.

சில மாதங்களுக்கு முன் சட்டசபை தொகுதி வாரியாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்துப் பாராட்டி உதவித்தொகை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உதவித்தொகை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசியலில் நுழைவதற்கான அடுத்தகட்ட நகர்வாக விஜய் அறிவித்த மிகப்பெரிய திட்டம், 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகங்கள்’ அமைப்பது.

பள்ளிகளில் படிக்கும், வசதியற்ற மாணவ- மாணவிகளுக்கு, இந்த பயிலகங்களில் ‘டியூசன்’ சொல்லி கொடுத்து, அவர்கள் கல்வியை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம்.

‘கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாளான ஜுலை மாதம் 15 ஆம் தேதி முதல் இந்தப் பயிலகங்கள் திறக்கப்பட வேண்டும்’ என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி 100 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் நூறு பயிலகங்கள் மட்டுமே இதுவரை திறக்கப்பட்டுள்ளன.

‘அந்த பயிலகங்களும் நிதி நெருக்கடியில் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன’ என்று சோக கீதம் இசைக்கும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி ஒருவர் மேலும் தொடர்ந்தார்.

“பயிலகங்கள் நடத்துவது சாதாரண விஷயமல்ல. பயிலகம் செயல்பட நல்ல இடம் வேண்டும். அதற்குள் கழிப்பறை, குடிநீர் வசதி இருக்க வேண்டும்.

டியூசன் சொல்லிக்கொடுக்க வாத்தியார் வேண்டும், அவருக்கு சம்பளம் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகிகள், பணத்துக்கு எங்கே போவார்கள்?” என்கிறார், அந்த நிர்வாகி.

நிதிச் சிக்கலில் பயிலகங்கள் தள்ளாடுவது மற்றும் பல இடங்களில் பயிலகங்கள் திறக்கப்படாமல் இருப்பது போன்ற தகவல்கள் அனைத்தும் விஜய் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

படத்துக்கு சுமார் நூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய், தனது பெயரில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள பயிலகங்கள் செயல்படவும், மேலும் பயிலகங்களை திறக்கவும் சில கோடிகள் செலவிட்டால் போதும்.

ஏற்கனவே செயல்படும் 100 பயிலகங்கள் புத்துயிர் பெறுவதும், கூடுதலாக 134 பயிலகங்கள் திறப்பதும் விஜய் கையில்தான் உள்ளது. விஜய் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

-பாப்பாங்குளம் பாரதி.

You might also like