ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.
விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம் – பாலசா பயணிகள் ரயில் வந்ததால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்து உயிருக்குப் போராடினார்கள்.
தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்ததாகவும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, வருத்தம் தெரிவித்து உள்ளார்.
விஜயநகர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அச்சம் நிலவுகிறது. இதனிடையே இந்த ரயில் விபத்திற்கு மனிதத் தவறே காரணம் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.