தேஜஸ் – கங்கனாவுக்கு ஒரு வெற்றிப்படம்!

பத்தாண்டுகளுக்கு முன்னர் தனு வெட்ஸ் மனு, குயின் போன்ற படங்களின் வழியாக, இந்தி திரையுலகில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை அடைந்தவர் கங்கனா ரனாவத். இன்னொரு விஜயசாந்தியாக தனி ஆவர்த்தனம் செய்துவரும் அவரது படங்கள், சமீபகாலமாகத் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன.

மணிகர்னிகா, தக்கட் போன்ற படங்கள் பெருந்தோல்வியுற்று, அவரது இடத்தையே கேள்விக்குறி ஆக்கின. இந்த நிலையிலேயே, தற்போது கங்கனா நடிப்பில் ‘தேஜஸ்’ வெளியாகியுள்ளது.

இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

வெற்றிகரமான விமானி!

 தேஜஸ் கில் (கங்கனா ரனாவத்) சிறு வயது முதலே இந்திய விமானப்படையில் சேர வேண்டுமென்ற லட்சியத்துடன் இருக்கிறார். நினைத்தாற்போலவே, இளம் வயதிலேயே அப்பணிக்குத் தேர்வாகிறார். பயிற்சியின்போது, அவருக்கு ஆஃபியா கான் (அன்சுல் சௌகான்) அறிமுகம் கிடைக்கிறது.

தேஜஸ் போர் விமானத்தைச் சிறப்பாக இயக்கும் திறமைமிக்கவராக மாறும் தேஜஸ் கில், ஒருகட்டத்தில் பாடகர் ஏக்விர் (வருண் மித்ரா) மீது காதல் கொள்கிறார். இவர்களது காதலுக்குப் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டுகின்றனர்.

2008 நவம்பரில் நடந்த மும்பை தாக்குதலில் ஏக்விர் மற்றும் தேஜஸின் பெற்றோர், சகோதரர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதில் தேஜஸ் மட்டும் உயிர் பிழைக்கிறார். அந்த துக்கத்தில் இருந்து அவரை மீட்டெடுக்க விமானப் பணியே உதவுகிறது.

பல ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு பயங்கரவாத இயக்கத்தால் இந்திய உளவாளி ஒருவர் கடத்தப்படுகிறார். அந்த நபர் தன்னோடு விமானப்படை பயிற்சியில் பங்குபெற்ற பிரசாந்த் (விஷாக் நாயர்) என்று அறிகிறார் தேஜஸ். அது தொடர்பான தகவலைத் தனது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துகிறார். கூடவே, அவரை மீட்கும் நடவடிக்கையில் தான் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் பகிர்கிறார்.

தேஜஸின் ஆசைக்கு அதிகாரிகள் சம்மதித்தார்களா? பயங்கரவாதிகளுடன் அவர் நேருக்கு நேர் மோதினாரா என்று சொல்கிறது மீதமுள்ள திரைப்படம்.

தேஜஸ் எனும் வெற்றிகரமான பெண் விமானியின் சாகசமொன்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். அதனால், நாயகி கங்கனா துதி பாடும் வகையறா ‘பில்டப்’ ஷாட்கள் இதில் அதிகம்.

இரண்டு மணி நேர அனுபவம்!

அதீத பில்டப்கள் இல்லாமல், வெறுமனே கதை நாயகியாக கங்கனா ரனாவத் நடித்துவிட மாட்டாரா என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் எண்ணிக்கை கணிசம். அவர்களது ஆசையை ஒருவாறாகப் புரிந்துகொண்டு, ‘தேஜஸ்’ எனும் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இதில் கங்கனாவை இளமைத் தோற்றத்தில் காண்பிக்க விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது, கேமிரா மீது விக்ஸ் தடவிய எபெக்டை உருவாக்குகிறது. அதேநேரத்தில், முதுமையை மீறி அவரது முகத்தில் வழியும் உணர்ச்சிப் பிரவாகத்திற்கு நாம் தலைவணங்கத்தான் வேண்டும்.

கங்கனாவின் தோழியாக வரும் அன்சுல் சௌகானுக்கு இதில் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, அவர் நன்றாக ‘எண்டர்டெயின்’ செய்கிறார்.

கங்கனா – வருண் மித்ரா இடையிலான காதல் காட்சிகள் புதிதல்ல என்றபோதும், அவை ரசிக்கும்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. போலவே, விஷாக் வரும் காட்சிகளும் நம்மை ஈர்க்கின்றன.

இந்தப் படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, காஷ்யப் ஷங்கரி, மோகன் அகாசே உட்படச் சிலர் நடித்துள்ளனர்.

‘இறைவன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஹரி.கே.வேதாந்தம், இப்படத்திலும் பணியாற்றியிருக்கிறார். நல்லவேளையாக, இந்த படத்தில் அவரது ‘பளிச்’ ஒளிப்பதிவு மனதோடு ஒட்டிக்கொள்கிறது.

ஆரிஃப் ஷெய்க் படத்தொகுப்பு கனகச்சிதமாக இருப்பதால், கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறிக் காட்டப்படுவது ரசிக்க வைக்கிறது. சுப்ரதா சக்ரவர்த்தி, அமித் ரேயின் தயாரிப்பு வடிவமைப்பில் தேஜஸ் விமானங்கள், விமானப்படை மற்றும் மத்திய அரசு உயர் அலுவலகப் பகுதிகள் அருமையாகத் திரையில் காட்டப்பட்டுள்ளன.

முன்பாதியில் கதை, கதாபாத்திரங்களோடு நாம் நெருக்கமாக பாடல்கள் உதவுகின்றன. பின்பாதியில் அதனைத் தனது பின்னணி இசையால் சாதித்திருக்கிறார் இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவ். அவரது இருப்பே, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வேறு எதைக் குறித்தும் சிந்திக்கவிடாமல் செய்கிறது. அந்த அனுபவம் திருப்தியாக இருப்பதுதான் முக்கியமான விஷயம்.

சர்வேஷ் மேவாரா இப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கியுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால், அதைத் தாண்டி வேறு பக்கம் அவர் தனது கவனத்தைத் திருப்பவில்லை.

இது பிரசாரப் படமா?

கங்கனா ரனாவத் குறித்த சமீபகாலச் செய்திகளே, அவரது சார்பு நிலை எத்தகையது என்பதைச் சொல்லிவிடும். தான் நடிக்கும் திரைப்படங்களிலும், அவர் அதனைப் பிரதிபலித்து வருகிறார்.

அந்த வகையில், ‘தேஜஸ்’ ஒரு பிரசாரப் படமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அவ்வாறு எதுவும் இப்படத்தில் இல்லை என்று முதலிலேயே ‘கார்டு’ போட்டுவிடுகின்றனர். அதையும் மீறி, தற்போதிருக்கும் மத்திய அரசுக்குத் தலைவணங்கும்விதமாக சில ஷாட்கள் உண்டு. மற்றபடி, முழுமையான பிரசாரமாக அமையவில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

லாஜிக் குறைபாடுகளைத் தாண்டி, ‘தேஜஸ்’ ஒரு நாயகியை முன்னிலைப்படுத்தும் ஒரு சாகசத் திரைப்படம். அதனை ஏற்றுக்கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு, ஒரு ஆக்‌ஷன் எபிசோடை தந்து அனுப்பி வைக்கிறார் இயக்குனர் சர்வேஷ் மேவாரா.

தேஜஸ் போர் விமானம் குறித்தோ, அதில் பணியாற்றுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தோ, இப்படம் விளக்கமாகப் பேசவில்லை. அதேநேரத்தில், ‘ஓகே’ ரகத்தில் ஒரு ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களை ‘தேஜஸ்’ திருப்திப்படுத்தும். ஆதலால், இது கங்கனாவின் வெற்றிப்பட வரிசையிலும் நிச்சயம் சேரும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like