கஸ்மாலம், பேமானி, கேப்மாரி… மெட்ராஸ் பாஷையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்படி ஒரு பின்னணி இருக்கா?
ஆங்கிலேயர்கள் பெண்களை மேடம் என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக மேம் என்று அழைக்கிறார்கள்.
அவர்கள் வீட்டில் வேலை செய்த சென்னை ஆட்கள் அந்த வார்த்தையை தங்கள் வீடுகளில் பயன் படுத்தி உரு மாறிய வார்த்தைதான் என்னாமே… வாமே… போமே…
மெட்ராஸ் பாஷை என சொல்லப்படும் சென்னை தமிழுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன என்ற புரிதல் பலருக்கும் இருப்பதில்லை.
சந்திரபாபு, சோ, தேங்காய் சீனிவாசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு இதில் பிஎச்டி பட்டமே தரலாம். குறிப்பாக சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன்.
வசூல் ராஜா படத்தில் வரும் பூட்டகேசு காமெடி என இப்படி சென்னைத் தமிழின் எந்த சொல் அல்லது தொடரை எடுத்துக்கொண்டாலும் சிக்கனம், உணர்ச்சியை கச்சிதமாக வெளிப்படுத்தும் பாங்கு, பிற மொழிகளை தகவமைத்துக் கொள்ளும் தன்மை என பல சிறப்பம்சங்கள் இருப்பதை உணர முடியும்.
தெலுங்கு, உருது, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி வார்த்தைகளில் இருந்து சென்னை தமிழ் வார்த்தைகள் உருவாகியிருக்கின்றன.
வசைபாடுவதற்கு பயன்படுத்தப்படும் கஸ்மாலம் என்ற சொல் வடமொழியில் உள்ள அழுக்கு என்று பொருள் தரும் கஸ்மலம் என்ற சொல்லில் இருந்து உருவானது.
எதையாவது தொலைத்துவிட்டால் தாராத்துட்டியா என்று சென்னை தமிழில் கேட்பார்கள். தன்னுடைய பொருளை தன்னுடையது அல்ல என முற்றாக துறந்து பிறருக்கு தருவதே தாரை வார்த்தல்.
இந்த சொல்லின் பொருள் ஆழமாக உள்வாங்கப்பட்டு தாராத்துட்டியா என தகவமைக்கப்பட்டிருக்கிறது.
தாய் மொழி என்பது தானாய் வருவது. உட்காரு என்ற சொல்லை விட இலக்கிய தரமும் அழகும் கொண்டது குந்து என்ற சொல்.
அதனால் தான் பாவேந்தர் பாரதிதாசன் காற்று குந்தி சென்றது என்று அழகாக தனது கவிதையில் அந்த சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.
பேமானி, சோமாரி, கம்முனு கெட போன்ற வார்த்தைகளுக்கு பின்னும் பல வரலாறுகள் இருக்கின்றன.
பேமானி என்பது பே இமான் என்ற உருது வார்த்தையிலிருந்து உருவானது. அதற்கு சொன்ன வாக்கை காப்பாற்றாதவன் என்று பொருள்.
ஆங்கிலேயர் காலத்தில் கோட்டையில் வேலை செய்த ஊழியர்களுக்கு வேலைக்கு ஏற்ப பல வண்ண வண்ண தொப்பிகள் வழங்கப்பட்டு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் சிலர் தங்களுக்குள் தொப்பிகளை மாற்றி ஏமாற்றி சலுகைகளை பெறுவர் என்றும் அப்படி செய்பவர்களை கேப்மாரி என்று சொன்னதாக சொல்லப்படுகிறது.
பல்வேறு மொழிகளால் வளமூட்டப்பட்ட சென்னை தமிழை மரியாதையுடன் ஆராய்வதற்கு பதிலாக இழிவுபடுத்தும் போக்கே பொதுவாக நிலவுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் எளிய மக்கள் பேசும் மொழி என்பதால் இதனை மேட்டிமைதனத்தோடு அணுகும் பழக்கமும் இருப்பதை பார்க்க முடிகிறது.
எது எப்படியோ, வார்த்தைகளுக்கு பின்னால் பல வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கும் சென்னை தமிழ் மெர்சலானது என்றால் அது மிகையல்ல….
பின் குறிப்பு:
இத்த மாறி நெரியா நம்புளுக்கும் தெரீன்சனா அவுத்து உடு நைனா …!
நன்றி: முகநூல் பதிவு