மழைக்காலம் துவங்கியதை அடுத்து அதையொட்டிப் பரவும் நோய்களும் அதிகரித்திருக்கின்றன.
எங்கும் கொசுக்களின் ஆதிக்கம். அதிலும் சென்னை போன்ற மாநகரத்தில் மழைநீர் வடிகால் பணி, மெட்ரோ ரயில் பணி என்று பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதால், பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் பரவுவதும் அதிகரித்திருக்கிறது.
டெங்கு ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் வரை டெங்குவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,
அதிகமான உடல்வலி, தொடர் காய்ச்சல், இருமல் என்று பல்வேறு அறிகுறிகளுடன் பலரை சென்னையிலேயே பார்க்க முடிகிறது.
டெங்கு பாதிப்புக்கு ஒரு சிலர் பலியானதாகவும் செய்திகள் வந்திருக்கிறபோது, பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என்பதை அரசே அறிவித்திருக்கிறது.
இது மட்டுமில்லாமல், பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலும் பல வீடுகளில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
சீனியர் அரசு அதிகாரிகளும் இதன் பாதிப்புக்கு ஆளானதையும் செய்திகளாகப் படித்தோம்.
நோயின் பாதிப்புகளுக்குப் பாரபட்சமில்லை, மழை மறுபடியும் தீவிரமாகும் நேரத்தில் நோய்த்தொற்றும் விரைவாகப் பரவ வாய்ப்பிருப்பதால் – முடிந்தவரை நம்மை பாதுகாத்துக் கொள்வோம். முகக் கவசங்களின் தேவையை உணர்ந்து அணிவோம்.