1972-ல் காமெடி நடிகருக்கு வைத்த பெரிய கட் அவுட்!

காமெடி படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. எந்தக் காலக்கட்டத்திலும் ஒர்க் அவுட் ஆவது காமெடி கதைகள்தாம்.

அதனால் சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எப்போதும். இதற்கு ஏராளமான படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படியொரு படம், ‘காசேதான் கடவுளடா’.

சித்ராலயா கோபு எழுதிய இந்த நாடகம், சுமார் 300 முறை மேடை ஏற்றப்பட்டது. சிறப்பான வரவேற்பு இந்த நாடகத்துக்கு கிடைத்ததை அடுத்து, அதை சினிமாவாக்க முன் வந்தது ஏவி.எம் நிறுவனம்.

இந்தப் படத்தின் மூலம் சித்ராலயா கோபு இயக்குநராக அறிமுகமானார்.
இந்த நாடகத்தில் நடித்த முத்துராமனும், தேங்காய் சீனிவாசனும் திரைப்படமானதும் அதே கேரக்டரில் நடித்தனர்.

லட்சுமி, மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த், ராம் பிரபா, எம்.ஆர்.ஆர்.வாசு, சுருளிராஜன் உட்பட பலர் நடித்தனர்.

இளைஞன் ஒருவன், தனது சித்தியிடம் இருந்து பணத்தைத் திருட திட்டமிடுகிறான். அதற்காக பல தகிடு தத்தங்களைச் செய்கிறான். அது நிறைவேறியதா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில், சென்னை வழக்கில் பேசிக்கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு போலிச் சாமியார் வேடம். அதைச் சிறப்பாகவே செய்திருப்பார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். அதில் இடம்பெற்ற, ‘ஜம்புலிங்கமே ஜடாதரா’ அப்போது சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்தப் பாடலில் சாமியாராக நடிக்கும் தேங்காய் சீனிவாசன் தப்புத் தப்பாக பாடலைப் பாட, முத்துராமனும் ஸ்ரீகாந்தும் அதை சமாளிக்கும் விதமாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் படம் 1972 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தேங்காய் சீனிவாசனின் போலிச் சாமியார் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

அந்த சமயத்தில் ஹீரோ முத்துராமனை விட்டுவிட்டு தேங்காய் சீனிவாசனுக்கு, சாமியார் கெட்டப்பில் மெகா கட் அவுட் வைத்தார்கள்.

இந்த கட் அவுட்டால் முத்துராமன் தவறாக நினைத்து விடுவாரோ என்று நினைத்தார் தேங்காய் சீனிவாசன்.

இதையடுத்து, அவரிடம் சென்று, சாமியார் கேரக்டர் பெரிதாக பேசப்படுவதால் கட் அவுட் வைத்திருக்கிறார்கள், நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள், தேங்காய் சீனிவாசனும் இயக்குநர் சித்ராலயா கோபுவும்.

இந்தப் படத்துக்கு பிறகு சித்ராலயாவுக்குக் கோபுவுக்கு எழுத்தாளராகவும் இயக்குநராகவும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன.

*அக்டோபர் – 21, நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்தநாள்*

– அலாவுதீன்

You might also like