தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது.
குறிப்பாக, இளையராஜா தனக்கான எல்லையைச் சுருக்கிக்கொண்ட காலத்தில் தனக்கான ராஜ்ஜியத்தை விரித்துக் கொண்டவர் தேவா. அவரது மெல்லிசை பலருக்கும் பிடிக்கும் என்றாலும்,
கிழக்கு கரை, ஆசை, கண்ணெதிரே தோன்றினாள், கண்ணோடு காண்பதெல்லாம், ஆனந்த மழை, நேருக்கு நேர், அப்பு, காதல் கோட்டை, அவ்வை சண்முகி உள்ளிட்ட சில ஆல்பங்களே ‘ஆல் டைம் ஹிட்’ என்று அந்த காலகட்டத்தில் தோன்றியிருக்கிறது.
அந்த எண்ணத்தில் ஒரு பிசிறும் இல்லை என்று இப்போதும் உணர்த்துகிறது ‘உன்னுடன்’ படப் பாடல்கள்.
தனித்துவமான சிந்தனை!
’காதல் கோட்டை’ தேசிய விருதுகளைக் குவித்த காலகட்டத்தில், தான் இயக்கி பாதியில் நின்றுபோன ‘உன் நினைவாக’ கதையின் தழுவலே அக்கதை என்று சொல்லியிருந்தார் இயக்குனர் ஆர்.பாலு.
தென்காசி அருகேயுள்ள கடையம் பகுதியைச் சேர்ந்த இவர், இளங்கலை படிப்பை முடித்துவிட்டுச் சென்னை கவின்கலைக் கல்லூரியில் பயில வந்தார்.
அந்த நேரத்தில், அங்கு பேராசிரியராக இருந்த ஓவியர் சந்ருவின் மாணவர் ஆனார்.
அதன் தொடர்ச்சியாக, யதார்த்தமாகவும் அழகியலோடும் திரைமொழியை அணுகும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார்.
’வேர் வலுவாக இருந்தால் எத்தனை முறை வெட்டினாலும் மேல் மரம் துளிர்க்கும்’ என்பது போல, தனது தனித்துவமான சிந்தனைகளுக்கு மாற்று உருவம் தரத் தயாராக இருந்தார் பாலு.
அதனாலேயே, காதல் கோட்டை வெளியாகிச் சில மாதங்களிலேயே அதே தயாரிப்பு நிறுவனத்திற்காக ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தை இயக்கினார்.
அதுவும் கூட, ‘பார்க்காமலே காதல்’ எனும் அம்சத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான். அதில் பாடல்கள், நகைச்சுவை எல்லாமே ரசிகர்களைப் பற்றிக்கொள்ள படம் சூப்பர்ஹிட் ஆனது.
அந்த படத்தில் நடித்த முரளி, கவுசல்யா ஜோடியைக் கொண்டு பாலு இயக்கிய இரண்டாவது திரைப்படம் ‘உன்னுடன்’.
இந்தப் படத்தை திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் பார்த்ததாக நினைவு. அந்தக் காட்சியின்போது, என்னுடன் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.
என் மனதில் அந்தப் படத்தின் பாடல்கள் பச்செக்கென்று ஒட்டிக்கொண்டன. இந்தப் படத்திலும், ‘இதயம்’ பாணியில் தன் மனதில் பூட்டி வைத்திருக்கும் காதலை கிளைமேக்ஸில் தான் நாயகி கவுசல்யாவிடம் சொல்வார் முரளி.
தங்கர்பச்சானின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும் தேவாவின் இசையும் இப்படத்தின் ஆகப்பெரிய சிறப்புகள்.
தேவாவின் முந்தைய ஆல்பங்கள் பலவற்றை நினைவூட்டினாலும் கூட, ‘உன்னுடன்’ பட பாடல்கள் அனைத்தும் அற்புதமெனும் எல்லையைத் தொட்டவை.
தேனிசைப் பாடல்கள்!
’உன்னுடன்’ படப் பாடல்களும் பின்னணி இசையும், ஒரு நேர்த்தியான கமர்ஷியல் படத்திற்கு உரித்தானதாக இருக்கும்.
‘புல்புல்தாரா’ பாடலின் தொடக்கமே வட இந்தியாவைச் சேர்ந்த நிலப்பகுதியின் கொண்டாட்டத்தை உணர்த்திவிடும்.
அனுராதா ஸ்ரீராமின் ‘கணீர்’ குரல் வாத்தியங்களை மீறி ஒலிக்க, அவரோடு போட்டியிடும் விதமாக மனோ இடையில் புகுவது ’ஆஹா’ என்று சொல்ல வைக்கும்.
’நேருக்கு நேர்’ படத்திற்கு பிறகு குறிப்பிட்ட வகையில் அமைந்த சில பாடல்களுக்கு ஹரிஹரனையும் உன்னிகிருஷ்ணனையும் பயன்படுத்தத் தொடங்கினார் தேவா.
இம்மி பிசகாமல் அதனைக் கண்டறியும் வகையில் ‘கொச்சின் மாடப்புறா..’ பாடலை இசைத்திருப்பார்.
இப்பாடலில் உன்னிகிருஷ்ணனின் குழைவான குரலோடு, மேலாகப் பொருந்தும் வகையில் ஸ்வர்ணலதாவின் குரல் ஒலிக்கும்.
‘கோபமா என்மேல் கோபமா’ பாடலும் சரி, ‘வானம் தரையில் வந்து நின்றதே’ பாடலும் சரி.. ஹரிஹரனை மனதில் வைத்தே பாடல் எழுதப்பட்டதோ என்று எண்ண வைக்கும்.
கோபமா பாடலின் தொடக்கத்தில் கம்பிக்கருவிகள் ஒலிப்போடு பாடகிகளின் கோரஸ் ஒன்றிணைந்திருப்பது ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கும்.
‘வானம் தரையில் வந்து நின்றதே’ பாடலின் தொடக்கத்தில் ‘பச்சை மாமலை போல் மேனி’ பாடலைப் பாடுபவரின் குரல் பி.சுசீலா போன்றே இருக்கும்.
அவரது பெயரை எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. குரலை வைத்து ஆளை கண்டுபிடிக்கும் அளவுக்கு திரையிசை ஞானமும் இல்லை.
’கண்டுபிடி அவனைக் கண்டுபிடி’ பாடல் எஸ்.பி.பி.க்கு ஜுஜுபி விஷயம் என்றாலும், அதன் தொடக்கத்தில் வரும் கோரஸும் ஹரிணியின் ஹம்மிங்கும் சிறப்பாக அமைந்திருக்கும்.
‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடலுக்கு சட்டை போன்று சபேஷின் குரலில் ஒலிக்கும் ‘பாலாறு இவ பதினாறு’ பாடல் கேட்கும்போது வழக்கமான டப்பாங்குத்து பாடல் போன்று இருக்காது.
உரிய பலன் கிடைத்ததா?
இயக்குனர் எதை விரும்புகிறாரோ அதைத் தரும் இசையமைப்பாளர்களில் ஒருவராகவே தேவா அறியப்படுகிறார்.
அந்த வகையில், ஆர்.பாலுவின் காட்சி நோக்கத்தை மிகக்கச்சிதமாக மொழிபெயர்த்தவாறு தேவாவின் இசை அமைந்திருக்கும்.
இதன் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளில் இருந்தே இந்த வித்தியாசத்தை அறிய முடியும். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து.
அப்பாடல்கள் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு உரிய பலன் கிடைத்ததா என்றால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால், தேவாவின் ‘தேவ’ கானங்களில் ஒன்றாக நான் கருதுகிற ‘உன்னுடன்’ படப் பாடல்களை மிக அரிதாகவே தொலைக்காட்சியிலும் பண்பலைகளிலும் எதிர்கொள்ள நேர்வது வருத்தமானதொரு விஷயம்..!
இன்றோடு (படம் வெளியானது அக்டோபர் – 18, 1998) அப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அக்கால இடைவெளியையும் மீறி, அன்று உணர்ந்த அதே மனக்கிறக்கத்தை இன்றும் மீட்டெடுக்க வைக்கிறது ‘உன்னுடன்’ படப் பாடல்கள்.
அதற்காக, இயக்குனர் பாலு முதற்கொண்டு அப்படத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தாக வேண்டும்!
– உதய் பாடகலிங்கம்