தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து, அறிமுகமான படம் தொடங்கி தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர்கள் இரண்டு பேர்.
ஒருவர் – பாரதிராஜா. அவர் அடுத்தடுத்து உருவாக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் வெள்ளிவிழா கண்டவை.
அடுத்தவர் – ஷங்கர்.
ஜென்டில்மேல், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என பிரமாண்ட படங்கள் தந்து அனைத்தையும் வெள்ளிவிழா வரிசையில் சேர்த்தார்.
இப்போது அந்த அணிவகுப்பில் இணைந்துள்ளார் அட்லீ.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என சூப்பர் டூப்பர் சினிமாக்களை அளித்தவர், இந்திக்குச் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் கடந்த மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 தியேட்டர்களில் வெளியானது.
தமிழ்த் திரை உலகில் இருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, அனிருத் உள்ளிட்டோரையும் அட்லீ, இந்திக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
32 நாட்களில் ‘ஜவான்’ திரைப்படம் 1,110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து ரெகார்ட் பிரேக் செய்துள்ளது.
இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு இந்திப் படம் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை.
ஜவானை அடுத்து அட்லி, அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில் அட்லி அளித்துள்ள பேட்டியில், ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“எனக்கு ஷாருக்கானும், விஜய்யும் கால்ஷீட் கொடுத்தால் 3000 கோடி ரூபாய் வசூல் செய்யும் படத்தை என்னால் கொடுக்க முடியும்’’ என்று அவர் கூறியுள்ளார்.
விஜய்க்கு மூன்று வெற்றிப் படங்களையும், ஷாருக்கானுக்கு பெரும் திருப்புமுனையையும் அட்லீ தந்துள்ளதால் அவருக்கு, இரு உச்ச நடிகர்களும் தேதி தருவார்கள் என நம்பலாம்.
– பாப்பாங்குளம் பாரதி.