தி ரோடு – பிகினிங் ‘ஓகே’; பினிஷிங் ‘ம்ஹூம்’!

நாயகிகளை முன்வைத்து தமிழில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளிவரும். நெடுங்காலமாகத் திரையுலகில் வலம் வரும் மிகச்சிலரே அவற்றில் இடம்பெறுவதும் வழக்கம்.

அந்த வகையில், சிலகாலமாகத் தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா.

‘ராங்கி’ படத்திற்குப் பிறகு, அவர் பிரதானமாக நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப, அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி ரோடு’ அமைந்துள்ளதா?

திட்டமிட்ட குற்றங்கள்!

பத்திரிகையாளரான மீரா (த்ரிஷா), தனது மகன் கவின் (மாஸ்டர் சாத்விக்), கானுயிர் புகைப்படக் கலைஞராக இருந்துவரும் கணவர் ஆனந்த் (சந்தோஷ் பிரதாப்) உடன் மகிழ்ச்சிகரமான வாழ்வை மேற்கொண்டு வருகிறார்.

இரண்டாம் முறையாகக் கர்ப்பமுறுகிறார். கவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கன்னியாகுமரி வரை ‘ட்ரிப்’ செல்ல மூவரும் முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால், இரண்டு மாத காலக் கர்ப்பத்துடன் பயணிக்கக் கூடாது என்பதால் அவர்களுடன் மீரா செல்லவில்லை. கனத்த மனதுடன் இருவரையும் அவர் வழியனுப்பி வைக்கிறார்.

நெடுஞ்சாலை 44இல் பயணிக்கும்போது, ஆனந்த்தும் சாத்விக் மீது சாலைத் தடுப்பை மீறி ஒரு கார் பாய்கிறது. அந்த விபத்தில் இருவரும் மரணமடைகின்றனர்.

அந்த நிகழ்வு மீராவின் வாழ்வையே புரட்டிப் போடுகிறது. அவரைத் தீராத துக்கத்தில் தள்ளுகிறது.

மதுரை திருமங்கலம் அருகே அந்த விபத்து நடக்கிறது. அந்த வட்டாரத்தில், அது போன்ற பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.

மீராவும் அவரது தோழி உமாவும் (மியா ஜார்ஜ்) அந்த இடத்திற்கு நேராகச் சென்று பார்க்கின்றனர். அப்போது, அவர்களது கார் ரிப்பேர் ஆகிறது.

அதன் தொடர்ச்சியாக, சாலையோரம் இருந்த ஒரு வீட்டில் தங்குகின்றனர். நள்ளிரவில் தூக்கம் வராமல் தவிக்கும் மீரா, தங்களது கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வருகிறார்.

அப்போது, அங்கு ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதனை ஓட்டி வந்த நபர் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். ‘தண்ணீர்’ கேட்டு கதறுகிறார். அவருக்காகத் தண்ணீர் எடுத்துவரச் செல்லும் மீரா, வெறும் கையுடன் திரும்பி வருகிறார்.

அந்த இடத்தில் விபத்துக்குள்ளான காரோ, அந்த நபரோ இல்லை. அது மட்டுமல்லாமல், விபத்து நடந்த சுவடே இல்லை.

எங்கே போனது அந்த கார்? அதில் இருந்த நபர் என்னவானார்? அதற்கு விடை கண்டறிய முயற்சிக்கிறார் மீரா. அப்போது, அந்த நெடுஞ்சாலையில் விபத்து போலக் கனகச்சிதமாகத் திட்டமிட்டு ஒரு கும்பல் குற்றங்களை நிகழ்த்துவதை அறிகிறார்.

அந்த கும்பலைக் கூண்டோடு அவர் பிடித்தாரா? தன் கணவர், மகன் இழப்புக்குப் பழி வாங்கினாரா என்று சொல்கிறது ‘தி ரோடு’ படத்தின் மீதி.

திரைக்கதையின் நடுப்பகுதி!

‘தி ரோடு’ படத்தில் ஸ்லிம்மான, பாந்தமான, ஈர்க்கிற த்ரிஷாவைப் பார்க்க முடிகிறது. அதேநேரத்தில், அவருக்கென்று தனியாக ‘பில்டப்’ ஷாட்கள் கிடையாது. இதுவே, இப்படத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் பார்க்க வழி வகுத்திருக்கிறது.

அதற்கேற்ற வகையில் த்ரிஷாவின் இருப்பும் படத்தில் அமைந்திருப்பது நல்ல விஷயம்.

மியா ஜார்ஜுக்கு இதில் நான்கைந்து காட்சிகளில் தோன்றும் வேடம். அதனைச் சரியான அளவில் செய்திருக்கிறார்.

சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோஸ் ஆக வந்த ஷபீர் கல்லாரக்கல், ‘கிங் ஆஃப் கோதா’வில் அருமையாக நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தைக் கவராமல் போயிருந்தார்.

இந்தப் படத்தில் அதனைச் சரி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். படத்தில் அவர்தான் வில்லன் என்பதைச் சிறு குழந்தைகளும் கூட அணுமானித்துவிடும்.

ஆனால், அவர் அத்தகைய மனமாற்றத்தை அடைந்தது எப்படி என்பது திரைக்கதையில் நுணுக்கமாக விவரிக்கப்படவில்லை.

த்ரிஷாவின் கணவராக சந்தோஷ் பிரதாப், மகனாக மாஸ்டர் சாத்விக் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.

இவர்கள் தவிர்த்து வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், கருப்பு நம்பியார், வினோத் சாகர், செம்மலர் அன்னம், லட்சுமி பிரியா, நேகா ஷாகின், வினோத் சாகர் என்று பலரும் இதில் நடித்துள்ளனர்.

‘மேயாத மான்’, ‘தண்டட்டி’ படங்களில் நம்மை ஈர்த்த விவேக் பிரசன்னாவும் இந்த படத்தில் தலைகாட்டியிருக்கிறார்; ஆனால், அவரது பாத்திரத்திற்குத் திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்படவில்லை.

சிவா யாதவின் கலை வடிவமைப்பு, கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.சிவராஜின் படத்தொகுப்பு, பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு ஆகியன ஒன்றுசேர்ந்து சிறப்பான காட்சியாக்கத்திற்கு வழி வகுத்திருக்கின்றன.

சீரிய முறையில் அவற்றை ஒருங்கிணைத்திருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

அந்தத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு தான், முதல் மற்றும் இறுதி 20 நிமிடங்கள் தவிர்த்த இடைப்பட்ட பகுதியைச் சுவாரஸ்யமானதாக ஆக்கியிருக்கிறது.

தொடக்கக் காட்சிகளில் இருக்கும் தொய்வைக் கூட, கதாபாத்திரங்களோடு ரசிகர்கள் ஒன்றுவதற்கு இயக்குனர் எடுத்துக்கொண்ட கால அவகாசமாகக் கருத முடியும்.

ஆனால், கடைசி நிமிட சொதப்பல்களைக் கொஞ்சம் கூட ஏற்க முடியாது. பட்ஜெட், பிராக்டிகல் பிரச்சனைகள் என்று பல காரணங்கள் இருந்தாலும், அதற்கு இயக்குனரே பொறுப்பேற்க வேண்டும்.

பிரச்சனை உணரப்படும் இடம், அதற்கான பின்னணி விவரிக்கப்படுதல், இறுதியாகத் தீர்வை நோக்கிச் செல்லுதல் என்று இத்திரைக்கதையை மூன்றாப் பிரித்தால், விபத்து போர்வையில் நிகழ்த்தப்படும் குற்றங்களை விவரித்த பகுதி அற்புதமாகக் காட்சியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனை ‘ப்ளஸ்’ என்று கொண்டால், முன்னதையும் பின்னதையும் ‘மைனஸ்’ என்று ஏற்கத்தான் வேண்டும்.

அபாரமான பின்னணி இசை!

டைட்டிலில் சாம் சி.எஸ். பெயருக்கு முன்னே ‘இசை அரக்கன்’ என்ற புகழாரம் இடம்பெற்றுள்ளது. அதற்குப் பொருத்தமாக இருக்க, படம் முழுக்க அதிரடி இசையை நிரப்பியிருக்கிறார் மனிதர்.

‘விக்ரம் வேதா’வுக்கு முன்னே தொடங்கி இப்போது வரை பல திரைக்கதைகளை உயிர்ப்பித்ததில் சாம் பங்கு மிக அதிகம்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘ஆர்டிஎக்ஸ்’ அதற்கொரு உதாரணம். அந்த வரிசையில், ‘தி ரோடு’ படத்தையும் தாராளமாகச் சேர்க்கலாம்.

இந்த படத்தில் நாயகி புதிரை விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், அது விடுபடும் இடமும் அபாரமான இசையால் நிரப்பப்பட்டுள்ளன.

பலனை எதிர்பார்க்காமல் அவர் கொட்டும் உழைப்பை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். ’தி ரோடு’ படத்தைப் பார்க்க வைக்க, அவரது இசை மட்டுமே போதுமானது.

அதேநேரத்தில், கதையோடு இணைந்த ஓ விதி, நகராத நொடியோடு பாடல்கள் நம் மனதை முழுமையாக ஆக்கிரமிக்காததையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

இயக்குனர் அருண் வசீகரன், தொடர் விபத்துகள் நிகழும் இடமொன்றை மனதில் வைத்து இந்த திரைக்கதை உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால், லாஜிக் மீறல்கள் பெரிதாகத் தென்படாமல், அதற்கான காரணங்களை விளக்கும் வகையிலான ஒரு முழுமையான திரைக்கதையைத் தரத் தவறியிருக்கிறார்.

முக்கியமாக, பல பேர் பயணிக்கும் ஒரு நெடுஞ்சாலையில் யாரும் பார்க்காதவண்ணம் குற்றங்களைத் தொடர்வதென்பது சாதாரண விஷயமில்லை.

என்னதான் காட்சிகளோடு ஒன்றினாலும், அது தொடர்பான சந்தேகங்கள் பூதாகரமாவதைத் தடுக்க முடியவில்லை.

இந்த படத்தில் த்ரிஷா, ஷபீர் கல்லாரக்கல் இருவரது பாத்திரங்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இடைவேளை பிளாக்கிலும் அது பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இவ்விருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி, இன்னும் வீரியத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை.

படத்தின் நீளம் கருதி அல்லது பட்ஜெட்டை மனதில் கொண்டு இறுதியில் வரும் சில காட்சிகள் முழுமையாக அமைக்கப்படவில்லை.

படம் முடிந்து வெளிவருகையில் திருப்தியான மனநிலையும் நமக்கு வாய்ப்பதில்லை. அதனால், ‘பிகினிங் ஓகே, பினிஷிங் ம்ஹும்’ என்று உதட்டைப் பிதுக்க வேண்டியிருக்கிறது..!

– உதய் பாடகலிங்கம்

You might also like