தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை பேதங்கள்?

ஜூம் லென்ஸ் :

எந்தப் படைப்பும் மக்களுக்காகத் தான். சினிமா, நாடகம் உள்ளிட்ட எந்தக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும்.

சினிமா என்கிற வலுவான மீடியா உருவாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டன. இதன் வரலாறு சரிவரத் தெரிந்தவர்களுக்கு சினிமாவுலகில் சோதனை முயற்சியாகச் செய்ய முயன்ற இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் தெரியும். வெற்றி பெற்றவர்களையும் தெரியும். சரிந்தவர்களையும் தெரியும்.

ஆனாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழக்கமான வணிக சினிமா பார்முலாவை மீறிய முயற்சிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன.

சிவாஜி என்னும் மகத்தான கலைஞன் அறிமுகமானது பி.ஏ.முதலியாரும், ஏ.வி.எம். நிறுவனமும் சேர்ந்து தயாரித்த ‘பராசக்தி’ மூலமாகத் தான்.

எம்.ஜி.ஆர் துவக்க காலத்தில் நடித்தது சிறு பட்ஜெட் படங்களில் தான்.

பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் பெரும் தயாரிப்பாளர்களை நம்பிக் களத்தில் இறங்கவில்லை.

பாலசந்தர் இயக்குநராக அறிமுகமான ‘நீர்க்குமிழி’ சிறிய பட்ஜெட் படம் தான்.

பெரும் நிறுவனங்கள் தான் திரைப்படங்களைத் தயாரிக்க முடியும், சிறிய முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் திரைப்படவுலகில் நுழைய முடியாது என்றிருந்தால், தமிழில் பல இயக்குநர்கள் அறிமுகம் ஆவதற்கே சிரமப்பட்டிருப்பார்கள்.

அந்தக் கால ‘சூப்பர் ஸ்டார்கள்’ நடித்த திரைப்படங்கள் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து ஓடிச் சாதனையும் படைத்திருக்கின்றன. அதே நடிகர் நடித்த திரைப்படங்கள் பிற்காலத்தில் பெரும் தோல்வியையும் சந்தித்திருக்கின்றன.

சினிமாவுலகில் தொடர்ந்து தங்கத் தட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறது காலம்.

ஒருவரை அங்கீகரித்து உயர்த்திய மக்கள் தான் இன்னொரு கட்டத்தில் அவரை புறக்கணிக்கவும் செய்கிறார்கள்.

எதனால் ஆதரித்தார்கள்? எதனால் தவிர்க்கிறார்கள்? – என்பதற்கான எளிய சூத்திரம் இன்று வரை திரைப்படம் தொடர்பானவர்களுக்கே பிடிபடாத அம்சம்.

வணிகத் தனமான மசாலா முயற்சிகளுக்கும், கலைத்தரமான யதார்த்தப்பட முயற்சிகளுக்குமான போட்டி எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

‘அவள் அப்படித்தான்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்கள் வெளிவந்து அங்கீகாரம் பெற்ற காலகட்டத்தில் தான் ‘சகல கலா வல்லவன்’, ‘முரட்டுக் காளை’ போன்ற வணிகமயமான திரைப்படங்கள் அதிரடியாக வெளிவந்து ரசிகர்களின் மனநிலை பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தின.

அதே மாதிரியான நிலை தான் இப்போதும். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதில் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்களுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது. அவற்றுக்கே மீடியாக்களின் ஆதரவு இருப்பதான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். மார்க்கெட்டிங் என்பது பெரும் வித்தையைப் போல நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

விக்ரம்-2, ஜெயிலர் போன்ற படங்களின் அதிரடியான வெற்றி மட்டுமே கொண்டாடப்படுகிறது. திரையரங்குகளில் அவற்றுக்கு மட்டும் சிறப்பு ஒதுக்கீடுகள் சாத்தியமாகின்றன.

இதற்கிடையில் அண்மையில் வெளியான ‘குட் நைட்’, ‘போர்த்தொழில்’ போன்ற யதார்த்தமான முயற்சிகளும், ‘மார்க் ஆன்டனி’ போன்ற மசாலாமயமான படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.

வெற்றிமாறனின் ‘விசாரணை’ வெற்றி பெற்றிருக்கிறது. எளிமையும், வலுவான மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்வைக்கக் கூடிய ‘ஜெய்பீம்’ போன்ற படங்களும் உரிய கவனம் பெற்றிருக்கின்றன.

அண்மையில் ஒரு நடிகர் பேசியிருப்பதைப் போல, சில கோடிகளை வைத்துக் கொண்டு திரைப்படம் எடுக்க வராதீர்கள் என்று யதேச்சதிகாரக் குரலில் யாரையும் நிராகரித்துவிட முடியாது.

பெரு நிறுவனமான கார்ப்பரெட்களின் நலன்களை மட்டுமே தூக்கிப் பிடித்து, சிறு பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களையும், திரைப்படங்களையும் புறந்தள்ளுவது சரியான அணுகுமுறை அல்ல. ஜனநாயக முறையும் அல்ல.

மக்களுக்கு முன் திரைப்படம் வழியாக எதைப் பரிமாறுவது என்பதை கார்ப்பரேட்கள் தீர்மானிக்கும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கக் கூடாது.

பணம் கொடுத்து திரைப்படங்களைப் பார்க்கும் மக்கள் – எதைப் பார்ப்பது, எதை அங்கீகரிப்பது என்பதைத் தீர்மானிக்கட்டும்.

 – சாமானியன்

You might also like