மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை!

நீட் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும், மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பரவலாக நடக்கின்றன. இதுபோன்ற மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே போட்டித் தேர்வு பயிற்சி நகரமான ராஜஸ்தானின் கோடாவில், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் சூழலில், சிலர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்கொலைகளைத் தடுப்பதற்காக ‘உம்மீட்’ UMMEED (Understand, Motivate, Manage, Empathise, Empower, Develop), எனும் வழிகாட்டு வரைவை மத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த வரைவில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு வழிகாட்டுதல்களின்படி,

* பள்ளி முதல்வர் தலைமையில் பள்ளி நலக்குழு உருவாக்கலாம். அதன் உறுப்பினர்கள் தற்கொலை உள்ளிட்ட நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

* மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் பெற்றோரோ அல்லது அதை அறியும் சமூகத்தினரோ நலக்குழுவினரிடம் தெரிவித்து தற்கொலையைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* பள்ளியில் சக மாணவர்களுடன் ஒப்பிடுதல், தோல்வியைக் கண்டு அஞ்சுதல், தோல்வியை நிரந்தரம் என எண்ணி அதிலிருந்து மீள முடியாமல் தவித்தல், படிப்பதற்கு பயப்படுதல், வெற்றி அளவீடு குறித்த பயங்கள் உள்ளிட்டவற்றை களைய முயற்சிக்க வேண்டும்.

* காலியான வகுப்பறைகளை பூட்டி வைத்தல், இருண்ட வளாகங்களை ஒளிரச் செய்தல், தோட்டப் பகுதிகளை சுத்தமாக பராமரித்தல் போன்றவையும் பின்பற்றப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like