சாதிவாரிக் கணக்கெடுப்பு எதை உறுதிப்படுத்துகிறது?

சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான்.

காரணம் – சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையே இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்திற்கும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இடையில் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பை பா.ஜ.க. அரசு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து, அதற்கான புள்ளிவிபரங்களையும் வெளியிட்டிருப்பது நாடு தழுவிய விவாத‍த்தை எழுப்பியிருக்கிறது.

மத ரீதியாக இந்துக்கள் 81 சதவிகிதம் பேர் இருப்பதையும், முஸ்லிம்கள் 17 சதவிகிதம் பேர் இருப்பதையும் தெரிவிக்கிற அந்தக் கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் சதவிகிதப் பட்டியலை வெளிப்படுத்தியிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 63 சதவிகிம். இதில் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் 27 சதவிகிதம். தலித் சமூகத்தினர் 19 சதவிகிதம் – என்றும் நீள்கிறது அந்தப் பட்டியல்.

இந்தக் கணக்கெடுப்பிற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் வலுவடையும் சூழலும் இருக்கிற நிலையில், அண்மையில் மணிப்பூரில் நடந்து வரும் தொடர் வன்முறையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பீகாரைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இனி வகுப்புவாரிக் கணக்கெடுப்பை நடத்தக் கோரிக்கைகள் வலுக்கலாம்.

அதற்கேற்ப இட ஒதுக்கீட்டு விகிதம் மாற்றியமைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

இதுவரை இட ஒதுக்கீட்டிற்கு ஆதாரமாக எப்போதோ எடுக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்துப் புள்ளிவிபரங்களைப் பல சாதியச் சங்கங்கள் முன்வைத்து மிகை வளர்ச்சியைக் காட்ட முயற்சிப்பதை இந்தச் சாதி வாரிக்கணக்கெடுப்பு தடுத்து, அசலான எண்ணிக்கைக்கேற்றபடி பங்கீட்டை நிர்ப்பந்தமாக்கலாம்.

தங்களுக்கு இட ஒதுக்கீட்டை தங்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றபடி பெறுவதை வற்பறுத்தும் சாதிச்சங்கங்கள் இதர சாதியனருக்கும் அவர்களுடைய எண்ணிக்கை விகித‍த்திற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கவும் அனுமதிக்க வேண்டும்.

அந்தப் பங்கீட்டை மறுப்பது சம நீதியையே மறுப்பதாகிவிடும்.

You might also like