பிற்பகல் நேரம். வீட்டில் என் தாய், தந்தை எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலிருந்து உழைத்துச் சோர்ந்தவர்கள் அல்லவா.
நானும் அவர்களுடன் படுத்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தூக்கம் வரவில்லை. மோட்டுவளையில் பார்வையை இங்குமங்குமாக ஒட்டியபடி எதையெல்லாமோ நினைத்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் வீட்டு வாயிற் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. எழுந்து போய் கதவைத் திறந்தேன்.
கையில் பிரித்துவைத்த ஒரு கடிதத்துடன், எங்கள் பக்கத்து வீட்டு அம்மாள் நின்று கொண்டிருந்தார்.
சாரதா கண்ணு! “உனக்கு நல்ல சமாசாரம் வந்திருக்கு. தம்பி உன்னை அழைச்சிட்டு வரச் சொல்லி எழுதியிருக்கிறான்” என்று கடிதத்தைக் காட்டினார்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அந்த அம்மையாரின் உறவினர் சென்னையில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
அவரது அடுத்த படத்திற்கு அப்போது சில புது முகங்களைத் தேடிக் கொண்டிருந்தார்.
சிறுவயதிலேயே எனக்கு நாடகங்களில் ஈடுபாடு அதிகம் உண்டு.
பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டுப் படுக்கை விரிப்பைத் திரையாகப் போட்டுவிட்டு, அக்கம்பக்கத்திலிருக்கும் சிறுவர், சிறுமிகளை அழைத்து ஏதாவது நாடகம் போட்டபடி இருப்பேன்.
நாளடைவில் இந்த ஆவல் வளர, எங்கள் ஊருக்கு அடுத்துள்ள சிறு கிராமங்களில் விடுமுறை தினங்களில் போய் நடித்துவிட்டு வருவேன். மற்ற தினங்களில் போனால் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிந்து விடுமே!
இம்மாதிரி நான் நாடகங்களை நடத்தி வந்ததையும், விடுமுறை தினங்களில் கிராமங்களில் நடக்கும் நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்ததையும் கவனித்து வந்த அந்த அம்மையார் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வந்தார்.
“என் உறவினர் பட்டணத்தில் சினிமாப் படம் எடுக்கிறார். அவரிடம் சொல்லி உனக்கு ஏதாவது வேஷம் வாங்கித் தரட்டுமா?” என்று கேட்டார்.
எனது தந்தையும் தாயும் சித்தப்பாவும் என் கண்முன் ஒருமுறை வட்ட மடித்தார்கள்.
என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. சினிமாவில் சேர வேண்டும் என்ற எனது தணிக்க முடியாத ஆவலை அடக்கிவிட்டு, அதற்கு எதிராக, என் மனச்சாட்சிக்கு விரோதமாக “வேண்டாம்” என்று நான் அவரிடம் எப்படிச் சொல்ல முடியும்.
இந்த தர்ம சங்கடத்தைப் புரிந்து கொண்ட அந்த அம்மையார், எனது பெற்றோர்களிடமே இதைக் கேட்டார்.
பெண் அழகாயிருக்கிறாள். நல்ல திறமையும் இருக்கிறது. சினிமாவில் சேர ஆசைப்படுகிறது. என் உறவினரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அந்த அம்மையார் எங்களுக்கு நீண்ட நாட்கள் பழக்கப்பட்டவர். தவிர பக்கத்து வீட்டுக்காரர். என் குடும்பத்தின் கஷ்ட சுகங்களைப் பற்றி தெரிந்தவர்.
ஆகவே அவர் நல்லது தவிர, வேறு எதையும் சொல்ல மாட்டார் என்று முடிவுக்கு வந்த எனது பெற்றோர்கள் அதற்குச் சம்மதம் தந்தார்கள் அந்த அம்மையாரும் தன் உறவினருக்கு கடிதம் எழுதினார்.
அவர் எழுதிய பதில் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு தான் எங்கள் வீட்டிற்கு அப்போது அவர் வந்திருந்தார். செய்தியைக் கேட்டதும் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. வெள்ளித் திரையில் முகம் வேகமாக உருண்டோடும் காட்சி தான் தெரிந்தது.
வீட்டில் என் சித்தப்பாவைத் தவிர வேறு யாரும் நான் சினிமாவில் சேருவதைத் தடுக்க விரும்பவில்லை. குடும்பத்தில் ஏற்பட்ட இந்தச் சிறு புயல் ஓரளவுக்கு அடங்கி, நான் சென்னை செல்வதற்குள் பல நாட்கள் ஓடிவிட்டன.
சென்னைக்குச் சென்று நான் அந்தப் படத்தயாரிப்பாளரைப் பார்த்தபோது, நாங்கள் உடனடியாக வராததால், வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்திருந்தார்.
எனக்கு ஒரே ஏமாற்றமாகி விட்டது!
சென்னையில் வேலையில்லாமல் உட்கார்ந்து கொண்டு வேறு என்ன செய்வது? ஊருக்குத் திரும்பி விட வேண்டியது தான் என்று நாங்கள் எண்ணிய போது, நடிகர் நாகபூஷணத்தின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தை அவர் தெலுங்கில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அதில் அவரது மனைவியாக நடிக்க என்னைத் தேர்ந்தெடுத்தார்.
இதற்கிடையில் டைரக்டர் பிரசாத் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டார். புது முகங்களை திரைப்படங்களில் அறிமுகம் செய்வதில் அப்போது மும்முரமாக இருந்தார் பிரசாத்.
இதற்காக ஒரு பயிற்சிக் கூடத்தையும் ஏற்படுத்தி, சில புது முகங்களுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்து வந்தார். என்னை மாதச் சம்பளத்தில் அமர்த்தி, தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டார் பிரசாத்.
இந்தப் பள்ளியில் படித்து வந்தபோது, சென்னை ‘ஆந்திரா கிளப்’ பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் நான் பங்கெடுத்துக் கொண்டேன். எனது நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சி நடந்த மூன்றாவது தினம் என்னை தேடிக் கொண்டு ஒரு தயாரிப்பாளர் வந்தார்.
‘தண்ட்ரலு கோடலு’ என்ற தனது படத்தில் ஒரு முக்கிய வேஷத்தில் நடிக்க எண்னை ஒப்பந்தம் செய்து கொண்டார். இதுதான் எனது முதல் படம்.
இதையடுத்து அன்னபூர்ணாவின் “இத்ரு மித்ராலு” (‘இரு நண்பர்கள்’ என்ற பெயரில் தமிழில் வந்தது) படத்தில், டைரக்டர் பிரசாத்தின் அனுமதியுடனும், சிபாரிசுடனும் நடித்தேன். எனக்கு அது நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
இந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகர் சங்கராவின் நாட்டியக் குழுவிலும், ஹாஸ்ய பாத்திரங்கனிலும் நடித்து வந்தேன்.
ஒரு சமயம் சென்னை ராமராவ் கலாமண்டபத்தில் ‘திருப்பதி’ என்ற நாடகம் நடைபெற்றது. நான் அதில் பங்கெடுத்துக் கொண்டு நடித்தேன். இந்த நாடகம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
அன்றைய தினம் நாடகத்தைப் பார்க்க வந்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என் திறமையை பாராட்டியத்துடன் தான் தயாரித்துவந்த ‘குங்குமம்’ படத்திலும் நடிக்கச் சந்தர்ப்பமளித்தார்.
‘திருப்பதி’ நாடகம் எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரக் காரணமாக இருந்தது.
‘குங்குமம்’ படத்தை டைரக்ட்செய்து வந்த கிருஷ்ணன் தங்கள் டைரக்சனில் உருவாகி வந்த ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ படத்திலும் என்னை ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
இவ்விரண்டு படங்களில் ஒப்பந்தமான கையோடு முருகன் பிரதர்சாரின் படமொன்றுக் ஒப்பந்தமானேன் நான். இடையே ‘துளசி மாடம்’ படத்திலும் நடித்தேன்.
நான் இப்பொது வீட்டில் ஹிந்தியைக் கற்று வருகிறேன் தமிழ் மொழியைச் சரிவரக் பேசக் கற்க வேண்டும் என்ற ஆவலினால் தமிழ்ப் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன்.
தவிர என் வீட்டின் அருகில் வசிக்கும் என் சிநேகிதிகளுடன் தமிழில் பேசி வருகிறேன். என் உயர்த் தோழிகளில் பின்னனிப் பாடகி ஜானகியும் ஒருவர்.
அவரும் என் ஊரைச் சேர்ந்த சீதா மற்றும் சிநேகிதிகளும் என் முன்னேற்றுத்தில் அக்கறை அதிகம் கொண்டு நான் எந்தத் தவறு செய்யினும் சுட்டிக் காட்டித் திருத்துவதில் தவற மாட்டார்கள்.
தமிழ்ப் படவுலகில் சிறந்த நடிகையாக வர வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறைய இருக்கிறது.
இந்த ஆவல் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகி வருகின்றன. எனவே விரைவில் நான் தமிழ்ப் படவுலகில் நிரந்தரமான இடத்தைப் பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
– நன்றி: பேசும் படம். மலர் 1964.