50, 60 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வடபழனியில் வீடுகளைக் காட்டிலும் சினிமா ஸ்டூடியோக்கள் தான் அதிகமாக இருந்தன.
ஒரே நேரத்தில் சுமார் 20 ஸ்டூடியோக்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன.
பக்கத்து பக்கத்து தளங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ஏவிஎம் ஸ்டூடியோ தவிர எந்த ஸ்டூடியோவும் இல்லை. அந்த ஸ்டூடியோவிலும் எப்போதாவதுதான் ஷுட்டிங் நடக்கிறது.
அதுபோல், சினிமா தயாரிப்பு நிறுவனங்களும் அப்போது நிறைய இருந்தன.
இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டிய ஜெமினி, 40 ஆண்டுகளுக்கு முன்பே தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
ஏவிஎம், விஜயா வாஹினி, சத்யா மூவீஸ், தேவர் பிலிம்ஸ், சிவாஜி பிலிம்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸ், கேப்டன் சினி கிரியேஷன்ஸ், பஞ்சுவின் பி.ஏ. ஆர்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டன.
விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், எழில், லிங்குசாமி, பாலசேகரன் உள்ளிட்ட 30 இயக்குநர்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமும் கொஞ்ச நாட்களாக படம் தயாரிக்கவில்லை.
சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் ஆகிய மூன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே இப்போது படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இவர்களில் லைகா முன்னணியில் நிற்கிறது. உச்ச நட்சத்திரங்கள் அனைவருமே இன்று லைகா நிறுவனம் உருவாக்கும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை 7 ஆண்டுகளுக்கு முன் லைகா ஆரம்பித்தது. ஒரு வழியாகப் படம் முடிந்து விட்டது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது.
ஜெய்பீம் படத்தைக் கொடுத்த தா.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
நாளை இந்தப் படத்தின் ஷுட்டிங், திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகிறது.
ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் எடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி, நாகர்கோவில் ஏரியாவில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஞானவேல்.
ரஜினிகாந்த் கவுரவ வேடத்தின் நடித்துள்ள லால் சலாம் படத்தைத் தயாரிப்பதும் லைகா தான். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘தல’ அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தைத் தயாரிப்பதும் லைகா நிறுவனமே.
அஜர் பைஜானில் நாளை (அக்டோபர் – 4) ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகிறது.
இப்போது லைகா நிறுவனம் தனது 10 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
தொடர்ச்சியாக தனது எல்லைகளை விரிவுபடுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மலையாளத்திலும் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூருடன் கை கோர்த்து, லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிக்கும் பிரமாண்டமான படம் ‘எம்புரான்’.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து ஹிட்டான படம் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
மோகன்லால் நாயகனாக நடிக்கும் இரண்டாம் பாகப்படத்தையும் பிருத்விராஜ் டைரக்டு செய்ய உள்ளார்.
முரளி கோபி திரைக்கதை எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் தேவ் இசை அமைக்கிறார். வரும் 5 ஆம் தேதி இதன் ஷுட்டிங் ஆரம்பமாகிறது.
இந்தப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
இது தவிர அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்திப்படம் ஒன்றையும் லைகா தயாரிக்க இருக்கிறது.
பி,வாசு இயக்கத்தில் அண்மையில் வெளியான சந்திரமுகி-2 படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்துள்ளது.
ரஜினி, கமல், அஜித், மோகன்லால் ஆகியோரை வைத்து ஒரே நேரத்தில் படம் எடுக்கும் ஒரே நிறுவனம் லைகாதான்.
விஜய், மம்முட்டி, சிரஞ்சீவி போன்றவர்களை எப்போ பிடிப்பீங்க?
– பாப்பாங்குளம் பாரதி.