20 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘காவாலா’!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் அதாவது 7 நாட்களில் ரூ.375.40 கோடிக்கு மேல் வசூலையும் 14 நாட்களில் 525 கோடிக்கு மேல் வசூலையும் எட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து ஜெயிலர் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ஓ.டி.டி.யிலும் வெளியானது.

இந்நிலையில் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியான காவாலா லிரிக்கல் வீடியோ 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஷில்பா ராவ் பாடிய இந்த காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

தமன்னாவின் நடனமும் சமுக வலைதளங்களில் வைரல் ஆனது. இதன் வீடியோ பாடலும் யூடியூபில் 5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இதற்கு முன்னதாக விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி, தற்போது வரை 14 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்

You might also like