மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது. கடந்த 1996 ஆம் ஆண்டு தேவகவுடா, பிரதமராக இருந்தபோது மக்களவையில் இந்த மசோதா முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், சில மாநிலக் கட்சிகள் எதிர்த்ததால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின் பல தடவை இந்த மசோதா தாக்கல் ஆனது.
ஒவ்வொரு முறையும் சில கட்சிகள் முட்டுக்கட்டை போட்டதால் மசோதாவை நிறைவேற்றவே முடியவில்லை.
கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடந்தன.
மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால் மக்களவையில் சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி. போன்ற கட்சிகளின் எதிர்ப்பால் தோல்வி கண்டது.
13 ஆண்டுகளாக குறட்டை விட்டு தூங்கிக்கிடந்த மசோதாவை பாஜக அரசு மீண்டும் கையில் எடுத்தது.
மக்களைவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை (19.09.2023) தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.
அனைத்துக்கட்சி எம்பிக்களும் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இதை தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதற்காக எம்.பி.க்களுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டது. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
மசோதாவுக்கு ஆதரவாக 454 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்த மசோதா நேற்று (21.09.2023) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
இரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதன் மூலம் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
இந்த மசோதா சட்டமாக மாற இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் மட்டும் தேவை. அவரது ஒப்புதலுக்கு விரைவில் மசோதா அனுப்பி வைக்கப்படும்.
அவர் கையெழுத்திட்டு, மசோதா சட்டமானாலும், உடனடியாக அமலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகளை மறுவரையறை செய்த பின்னரே மசோதா செயல்பாட்டுக்கு வரும்.
இந்த இரு வேலைகளும் முடிந்து, 2029 ஆம் ஆண்டு தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மசோதா அமலுக்கு வரும்போது மக்களவையில் 181 பெண்கள் இருப்பார்கள். தமிழகத்தில் இருந்து 13 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் 77 பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் காணலாம்.
பெண்கள் ராஜ்யத்துக்கு இன்னும் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
– பி.எம்.எம்.