உழைப்புக்குத் தக்க மரியாதை கிடைக்க வேண்டும்; திரையுலகத்தில் இந்த நியதி மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு பேருழைப்பு கொட்டப்பட்ட படைப்பு கொண்டாடப்படுவதும், அது கிடைக்காமல் போகும்போது வருத்தம் பெருகுவதும் இயல்பு.
அதேநேரத்தில், அவ்வாறு பெரும் உழைப்பை எடுத்துக்கொள்ளும் ஒரு திரைப்படம் சரியான கருத்துகளை மக்களிடம் விதைக்கிறதா? அதன் பின்னே வரும் திரைப்படங்களுக்கு ராஜபாட்டையை வழங்குகிறதா அல்லது திசைமாற்றியாகச் செயல்படுகிறதா என்ற கேள்விகளுக்கான பதில்கள் மிக முக்கியமானது.
கடந்த ஆண்டு வெளியான விக்ரம் மற்றும் தற்போது ஜெயிலர் பெற்றிருக்கிற பெருவெற்றிகள், அந்த வகையில் நமக்கு என்ன பதில்களைத் தருகின்றன?
கமர்ஷியல் படம் தேவையா?
மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற யதார்த்தமான படைப்புகளும், அதனைக் கொஞ்சமும் திரையில் சொல்லாத கமர்ஷியல் படங்களும் எல்லா காலகட்டத்திலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
கலை என்பது மக்களுக்கானது என்றும், அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் இரு வேறுவிதமாக விவாதங்களும் நடந்து வருகின்றன. அது, கமர்ஷியல் படம் தேவையா என்ற எண்ணத்தை விதைக்கிறது.
தினசரி வாழ்வின் கஷ்ட நஷ்டங்களில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள, ஒரு மனிதனுக்குக் கேளிக்கைகள் தேவை. அதனைத் தரும் கமர்ஷியல் படங்களும் நிச்சயமாக இந்தச் சமூகத்திற்குத் தேவை.
ஆனால், பொழுதுபோக்கு என்ற பெயரில் அதில் நச்சுக் கருத்துகள் ஏதும் கலந்திருக்கக் கூடாது. பிற்காலத்தில் வரும் படைப்புகளின் மீது தனது தாக்கத்தைப் புகுத்திவிடக் கூடாது.
இரு படங்களின் தாக்கம்!
அறுபதுகளில் வெளியான ‘பாதை தெரியுது பார்’, ‘யாருக்காக அழுதான்’ போன்ற படங்கள், அக்காலகட்டத்தில் மிகச்சிலரால் மட்டுமே சிலாகிக்கப்பட்டன.
அதேநேரத்தில், எண்பதுகளில் வெளியான ‘உதிரிப்பூக்கள்’, ‘அழியாத கோலங்கள்’, ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்கள் வழக்கத்திற்கு மாறான முறையில் கதை சொல்லும் படங்களும் வெற்றி பெறும் என்பதை நிரூபித்தன.
வேலைவாய்ப்பு, சமூகநீதி, வறுமை ஒழிப்புக்கு எதிரான சூழலைக் கொண்டு பொங்கும் திரைப்படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின. அப்படங்களின் காட்சியாக்கம் உண்மைக்கு அருகாமையில் இருந்தன; தீவிரமான கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டன.
இனிமேல் இது போன்ற படங்கள் தான் தமிழ் திரையுலகில் ஆறாகப் பாய்ந்தோடும் என்று விமர்சகர்கள் எண்ணிய காலமது. அப்போதுதான் ‘சகலகலா வல்லவன்’, ‘முரட்டுக்காளை’ என்ற இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
அப்படங்களின் காட்சியாக்கமும், அதில் இருந்த நாயக பாத்திரத்தின் குணாதிசயங்களும் பிற்போக்குத்தனங்களின் உச்சமாக இருந்தன.
அந்த படங்களின் உருவாக்கத்தில் ஈடுபட்ட எவரும், அதனைத் திட்டமிட்டுச் செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அவ்விரு படங்களையும் இயக்கிய எஸ்.பி.முத்துராமன், அதற்கு முன்னர் வெவ்வேறு வகைமைகளில் படங்கள் தந்தவர்.
ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் என்று வழக்கமான கமர்ஷியல் படைப்பில் யதார்த்தமான வாழ்வைப் புகுத்திக் காட்ட முடியும் என்று நிரூபித்தவர்.
ஆனால், இனி தானே விரும்பினாலும் அப்படிப்பட்ட படங்களைத் தர முடியாத சூழலை மேற்சொன்ன இரு படங்களும் உருவாக்கின.
அவருக்கே அந்த நிலை எனும்போது, அவரைவிட வயதிலும் திரை நுணுக்கங்களிலும் இளையவர்களாக இருந்தவர்களின் நிலைமையைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
அதே காலகட்டத்தில், எஸ்.ஏ.சந்திரசேகரனின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ வெளியானது; ‘பழிக்குப் பழி’ வகையறா திரைக்கதைகளுக்கு அது பாதை அமைத்துத் தந்தது.
கதை சொல்லலிலும் காட்சியாக்கத்திலும் வேறொரு எல்லையைத் தொட்ட பாரதிராஜா கூட, முழுக்க யதார்த்தமான, கலைப்பூர்வமான படைப்புகளைத் தரவில்லை என்பதே உண்மை.
பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உட்பட அவரது ஆரம்பகாலப் படங்களைப் பார்த்தால் அது புரியும். நிழல்கள், காதல் ஓவியம் படங்களில் சற்றே வேறு திசையில் கால் பதிக்க முயன்றபோது, அவர் சறுக்கலைச் சந்தித்தார்.
இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து, ‘ஒரு படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற எழுதாத விதிகளைத் திரைப்பட வணிகப் பண்டிதர்கள் இடத்தில் விதைத்து விட்டன. அதன்பிறகு, என்ன நிகழ்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
எல்லாமே கமர்ஷியல் தான்!
திரைப்படம் என்பது ஒரு வியாபாரம் என்ற வகையில், எவராலும் சமரசமற்ற ஒரு படைப்பைத் தந்துவிட முடியாது. அப்படிப் பார்த்தால் எல்லா படங்களுமே கமர்ஷியல் ஆனவை தான்.
ஆனால், ‘இதில் நமக்குக் கிடைக்கும் நீதி என்ன’ என்று கதை கேட்டு வளர்ந்தவர்களைக் கேடுகளுக்குள் தள்ளிவிடாதவாறு அவை இருந்தாக வேண்டியது கட்டாயம்.
பெரிதாக அறப்புரட்சிகளை ஏற்படுத்தாவிட்டாலும், சமூகத்தில் ஏற்கனவே இருந்து வருகிற நல்ல அம்சங்களைத் துடைத்தெறிவதாக அவை இருக்கக் கூடாது. அவர்களது சிந்தனையை வேண்டாத திசையில் தடம் புரட்டிவிடக் கூடாது.
முரட்டுக்காளையும் சகலாகலா வல்லவனும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் அதற்கு எதிரானவை. ‘முரட்டு வல்லவனாக’ அதில் காட்சி தந்த நாயகர்கள் வழியே, நாம் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற புதிய நீதியை ரசிகர்கள் கற்றுக்கொண்டார்கள்.
அதேநேரத்தில், ரசிகர்களை வசீகரிக்க எப்படிப்பட்ட உத்திகளையும் பயன்படுத்தலாம் என்ற நிலைமை திரையுலகிலும் பரவியது.
இவ்வாறு உருவாக்கப்படும் திரைப்படங்களைக் கேள்விக்கு உட்படுத்தும்விதமாகச் சில படங்கள் அவ்வப்போது வெளியாகும்.
ஒரு புதிய அலையை உருவாக்கும். ஆனாலும், வேறு சில கமர்ஷியல் படங்களின் வெற்றிகள் அதனை இல்லாமல் ஆக்கும். ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, அது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’, தற்போது பெருவெற்றியைப் பெற்றிருக்கிற ரஜினியின் ‘ஜெயிலர்’ இரண்டும் மீண்டும் அப்படியொரு நிலையை உருவாக்கியிருக்கின்றன.
உழைப்புக்கு மரியாதை!
விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களிலும் அபாரமான உழைப்பு கொட்டப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படங்களின் வெற்றியை அதற்கான மரியாதை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிறப்பான காட்சியாக்கம், கதாபாத்திர வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் அவற்றில் உண்டு.
ரசிகர்கள் திரும்பத் திரும்பப் பார்க்கும் வகையில் நுணுக்கமான விவரிப்புகளையும் அவை கொண்டிருக்கின்றன. அதனால் இரண்டாம், மூன்றாம் முறையாகப் பார்க்கும்போதும் ஆச்சர்யம் தரும் காட்சியனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
எல்லாமே சரிதான். ஆனால், அப்படங்களின் உள்ளடக்கத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் கருத்துகள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன.
இவ்விரு படங்களின் கதைகளும் போதை மருந்து மற்றும் பாரம்பரியச் சிறப்புமிக்க சிலைகள் கடத்தலைச் சுற்றி வருகின்றன.
ஆனால், அவற்றைப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு தவறு என்ற புரிதல் உண்டாவதற்கான நியாயங்கள் அத்திரைக்கதைகளில் கொஞ்சம் கூட இல்லை.
தலை துண்டிக்கப்பட்ட உடலைத் திரையில் காட்டும் ‘ஷாட்’ இரு படங்களிலும் உண்டு; அதோடு நில்லாமல், இப்படங்களின் நாயகர்கள் மற்றும் வில்லன்களின் நடவடிக்கைகளும் சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதமும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும் வன்முறை எண்ணங்களை வெளியே கொண்டு வருவதாக உள்ளன; அதையே திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டமாகவும் முன்வைக்கின்றன.
கமல், ரஜினியின் தனிப்பட்ட ரசிகர்களைத் தாண்டி சாதாரண மக்களும் பார்க்கவல்ல அப்படங்களில் நிறைந்திருக்கும் வன்முறை நிச்சயம் ஆட்சேபணைக்குரியது.
இவற்றுக்கு முன்னர் இப்படிப்பட்ட காட்சியாக்கமும் கருத்தாக்கமும் நிரம்பிய படங்கள் நிறைய உண்டென்றபோதும், இந்த இரு உச்ச நட்சத்திரங்களின் வயதுக்கும் அனுபவத்திற்கும் வாழ்வு குறித்த புரிதலுக்கும் இப்படம் தரும் வெற்றி ஏற்புடையதுதானா என்பது தான் நம் கேள்வி.
அந்த அளவுக்கு, ஒரு தவறான முன்னுதாரணமாக இப்படங்களின் வெற்றிகள் அமைந்திருக்கின்றன.
அவற்றின் முன்னே உள்ளடக்கத்திலும் காட்சியாக்கத்திலும் வர்த்தகத்திலும் புதிய எல்லைகளைத் தொட்ட டாடா, குட்நைட், போர்தொழில் படங்களின் வெற்றிகள் மதிப்பிழக்கின்றன.
ஒரு வணிக வெற்றியைப் பெற, இந்த ‘முரட்டு வல்லவன்’ பாத்திரங்களே போதும் தான். ஆனால், நாற்பத்தெட்டு ஆண்டுகளாகப் பெருவெற்றிகளைப் பார்த்தபிறகும் அதனைத் தொடர வேண்டுமா, திரைப்பயணத்தின் திசையை இன்னொரு முறை திருப்ப வேண்டுமா என்பதே நம் கேள்வி!
– உதய் பாடகலிங்கம்