உடைந்த பாஜக – அதிமுக உறவு: மீண்டும் ஒட்டுமா?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன.

“மூன்றாம் முறையாகவும் மோடியே பிரதமர் ஆவார்” என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் கள நிலவரம் அப்படி இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கடந்த தேர்தலில் பாஜகவுடன் இருந்த பிரதான கட்சிகள் பெரும்பாலும், அந்த முகாமில் இருந்து வெளியேறி விட்டன.

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, அகாலிதளம் போன்ற பெரிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டன.

நிதிஷும், தாக்கரேயும் எதிர்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ அணியில் ஐக்கியமாகி உள்ளன.

கடந்த தேர்தலில் பாஜக, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. இந்த முறையும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதிமுக – பாஜக கூட்டணியை இருவரும் உறுதி செய்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆனால், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள் கூட்டணிக்கு உலை வைத்து விட்டது.

அதிமுகவினர் தெய்வமாகப் போற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ’’எங்களை வாழ வைத்த தலைவர்கள் குறித்து பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் செல்வது நடைப்பயணம் அல்ல – வசூல் பயணம்.

தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள, ‘நானும் ரவுடிதான்’ என வடிவேலு சொல்வது போல் அண்ணாமலை பேசி வருகிறார்.

அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசினால், நாங்களும் ’ஒரு முடிவு’ எடுக்க நேரிடும்” என எச்சரித்தார்.

சண்முகத்துக்கு அண்ணாமலை அளித்த பதில் இப்போது கூட்டணியில் பிளவை உருவாக்கி விட்டது.

“இதற்கு முன்பு தமிழகத்தில் யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டுள்ளார்களோ, அவர்கள் அனைத்தையுமே வசூலாகப் பார்க்கிறார்கள். அவருக்கு வசூலித்து தான் பழக்கம்.

’’சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு  பின்பு வேறு மாதிரி பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்’ என அண்ணாமலை ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார்.

அண்ணாமலையின் இந்தக் கருத்து அதிமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

“பாஜகவுடனான  கூட்டணி தேவை இல்லை” என எடப்பாடி பழனிசாமியிடம், மூத்த தலைவர்கள் ஒரே குரலில் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக, பாஜக கூட்டணி முறிந்து விட்டதாக அறிவித்து விட்டார்.

சி.வி. சண்முகம் சொன்னது போல், ஒரு முடிவை அதிமுக எடுத்துவிட்டது.

’’இனிமேலும், பாஜகவை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவுக்கு காலே கிடையாது. அந்த கட்சியால் இங்கே கால் ஊன்றவும் முடியாது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை.

இது, எனது தனிப்பட்ட கருத்து அல்ல. கட்சி எடுத்த முடிவு.’’ என ஜெயகுமார் திட்டவட்டமாகச் சொல்லி, பாஜகவுக்கு கதவை சாத்தி விட்டார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், பாஜக கூட்டணி தேவை இல்லை என்பதை வலியுறுத்தி ‘நன்றி! மீண்டும் வாராதீர்கள்’ எனும் ’ஹேஸ்டேக்’கை உருவாக்கி, பாஜகவுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனாலும் பாஜக, அதிமுகவை விட்டுவிடத் தயாராக இல்லை. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தலை போல் பாஜகவுக்கு அதிக சீட்டுகள் கிடைக்காது.

பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில், அந்த கட்சிகளுடன் ஓர் இணைப்பை உருவாக்கி ஜெயிக்க வேண்டும் என பாஜக கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறது.

பீகார், மகாராஷ்டிரா, உ.பி. ஆகிய மாநிலங்களில் அப்படி ஓர் ஏற்பாட்டை செய்து முடித்துள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொஞ்சமாவது. கூடுதல் இடங்கள பிடித்தால் மட்டுமே, மத்தியில் ஆட்சி அமைப்பது சாத்தியம் என பாஜக உணராமல் இல்லை.

’பாஜக மேலிடம், எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு கூட்டணியை ஒட்ட வைக்க நடவடிக்கை எடுக்கும்’ என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ அணி வலுவாக இருப்பதால், எடப்பாடி பழனிசாமியும், பாஜகவை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

– பி.எம்.எம்.

You might also like