மெக்சிகோவில் ஏலியன்களைப் போன்ற தோற்றத்துடன் கூடிய பதப்படுத்தப்பட்ட சடலங்கள், காட்சிப்படுத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
இதுதொடர்பான விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.
விஞ்ஞானம் என்ன தான் வளர்ச்சி அடைந்தாலும், BIG BANG தியரியை தாண்டி மனித மூளை இன்னும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், சூடோ சயின்ஸ் என சொல்லப்படும் போலி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்த உலகில் பஞ்சமே இல்லை. அதில் ஒன்றுதான் வேற்றுகிரகவாசிகள்.
வேற்றுகிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் ஏதாவது ஒன்றை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன.
வேற்றுகிரகவாசிகள் ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களைப் போல், பூமிக்கு வந்து செல்வதாக கட்டுக் கதைகள் உலவிக் கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில், தற்போது, ஏலியன்களின் சடலங்கள் எனக் கூறி மெக்சிகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் இரு சடலங்களை பத்திரிக்கையாளர் ஒருவர் காட்சிப்படுத்தி உள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் ஜெய்ம் மௌசன் என்பவர் தான் ஏலியன்களின் பதப்படுத்தப்பட்ட சடலங்கள் எனக் கூறி இரு சடலங்களை காட்சிப்படுத்தியுள்ளார். பெரு நாட்டில் அந்த சடலங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த சடலங்கள் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஏலியன்களைப் போன்ற தோற்றத்தை ஒத்து இருக்கின்றன.
ரேடியோ கார்பன் முறையில் இந்த சடலங்களின் வயது குறித்து ஆராய்ச்சி செய்த போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சடலங்களுக்குள் முட்டைகள் இருப்பதாகவும், ஆஸ்மியம் எனப்படும் விலை உயர்ந்த உலோகப் பொருள் இருப்பதாகவும் ஜெய்ம் மௌசன் தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக இந்த சடலங்கள் மனிதர்களுடையது அல்ல என கூறியுள்ள அவர், சுரங்கத்தில் இருந்து இந்தச் சடலங்கள் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இவர் இதேபோன்று 2017ஆம் ஆண்டு, ஏலியன் மம்மிகள் என சில சடலங்களை காட்சிப்படுத்தினார்.
ஆனால் அவை மனிதர்களுடையது என பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது. மண்டை ஓடுகளை சிதைத்து, துணியாலோ அல்லது கயிற்றாலோ சுற்றி பதப்படுத்தும் வழக்கம் மக்களிடம் இருந்ததாகவும், இதன் காரணமாகவே, பெருவில் இருந்து கைப்பற்றப்படும் மம்மிகள் பொதுவாக, ஏலியன்களைப் போன்று காட்சி அளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுவும் போலியானதாகத் தான் இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று.
– தேஜேஷ்