‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர் பி.வாசுவின் திரைப்பயணம்.
புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரத்தின் மகன், இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், சந்தான பாரதி உடன் இணைந்து 5 படங்கள் இயக்கியவர் என்பதெல்லாம் அவருக்கான சில அடையாளங்கள்.
வாசு இயக்குனர் அவதாரம் எடுத்து 42 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது அவருக்கு 68 வயதாகிறது.
ஆனாலும், சந்திரமுகி 2 படப்பிடிப்புத்தளம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் காணும்போது, அவருக்கு வயது என்பது ஒரு எண் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஒரு தலைமுறையின் குரல்!
வித்தியாசமான கதை சொல்லல், கதாபாத்திரங்களின் செய்கைகளுக்கு இடம் அளித்தல், வழக்கத்திற்கு மாறான கேமிரா நகர்வுகள் என்று இயக்குனர் ஸ்ரீதர் திரைப்பட ஆக்கத்தின் சிறப்பம்சங்கள் நம் அனைவருக்கும் தெரியும்.
எண்பதுகளின் தொடக்கத்தில் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘சௌந்தர்யமே வருக வருக’ என்று இளமை பொங்கும் படங்களைத் தந்தார்.
பின்னாளில் இயக்குனர்களாக ஆன சந்தான பாரதி – பி.வாசு இணையின் பங்கும் அவற்றில் உண்டு.
அப்படிப்பட்ட இருவரும் இணைந்து, ‘பன்னீர் புஷ்பங்கள்’ தந்தார்கள். பள்ளிப் பருவத்தில் இருக்கும் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் காதலிப்பதாகக் காட்டியது இப்படம்.
இருவரும் அவரவர் பாதையில் செல்வதாக, அந்த படத்தின் முடிவு அமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் படம் வெளியான அதே 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இரண்டுமே இரு வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டன. அந்த வகையில், ஒரு தலைமுறையின் குரலாக அமைந்தது வாசு – பாரதியின் முதல் படம்.
அதன்பிறகு ‘மெல்லப் பேசுங்கள்’ உட்பட ஐந்து படங்களை இந்த இணை தந்தது. காலப்போக்கில் கதையாக்கத்தில் நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளால் பிரிவையும் சந்தித்தது.
கதாநாயகர்களுக்கான முக்கியத்துவம்!
கதாநாயக துதிக்கும் உணர்ச்சியைப் பொங்கவைக்கும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் தனது படங்களில் முக்கியத்துவம் தருவார் வாசு.
ஒரு கதையை ‘கிளாசிக்’ அந்தஸ்தோடு திரையில் சொல்ல வேண்டுமென்று மெனக்கெடுவார் சந்தானபாரதி. இருவரும் தனித்தனியாகப் படங்களை இயக்கத் தொடங்கியபிறகே, அவர்களது தனித்தன்மை ரசிகர்களுக்குத் தெரிய வந்தது.
அந்த வகையில், பி.வாசுவை இயக்குனராக முன்னிறுத்த அவரது குடும்பத்தினர் தயாரித்த படம் ‘கதாநாயகா’.
விஷ்ணுவர்தன், சுமலதா நடிப்பில் கன்னடத்தில் வெளியான இப்படமே, அவரது தனியாவர்த்தனத்தைத் தொடங்கி வைத்தது.
அந்த படத்தின் அபார வெற்றியானது, தொடர்ந்து குறி, ஜெயசிம்ஹா என்று அடுத்தடுத்து கன்னடப் படங்களை இயக்க வைத்தது.
இந்த நிலையில், ’என் தங்கச்சி படிச்சவ’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார் பி.வாசு. ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தாலும், இந்த படத்தின் காட்சிகள் எந்த மொழியிலும் இதனை ஆக்கலாம் என்ற உத்தரவாதத்தைத் தருவதாக இருந்தது.
’ஆஜ் கா அர்ஜுன்’ என்ற பெயரில், இப்படம் அமிதாப்பை நாயகனாகக் கொண்டு இந்தியில் தயாரிக்கப்பட்டது. இதேபோல வாசு இயக்கிய பல படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன.
அதற்குக் காரணம், அவற்றில் கதாநாயகர்களுக்கு இருந்த முக்கியத்துவம் தான்.
தொடர்ந்து பிள்ளைக்காக, பொன்மனச்செல்வன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை என்று வெற்றிப் படங்களைத் தந்தார் வாசு.
அதன் பலனாக, அப்போது முன்னணியில் இருந்த ரஜினியைக் கொண்டு ‘பணக்காரன்’ இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அதன்பிறகு வேலை கிடைச்சிடுச்சி, நடிகன், சின்னத்தம்பி, அதிகாரி, கிழக்குகரை போன்ற படங்களைத் தந்தார்.
இந்த படங்கள் அனைத்திலும் அந்தந்த நட்சத்திரங்களின் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனைத் திரையில் தந்திருந்தார் வாசு.
சரியான கலவையில் திரைக்கதை!
சினிமாவில் இந்த படம் தான் ஜெயிக்கும் என்ற உத்தரவாதத்தை எக்காலத்திலும் தர முடியாது. காரணம், அதனை ரசிகர்களால் கூட முன்னரே தீர்மானிக்க முடியாது.
ஆனால், ஒரு படத்தில் பங்களிக்கும் அனைவரும் முழுமையாகச் சிரத்தையைக் காண்பித்தால் அது தானாக வெற்றியைக் கொணரும் என்றொரு பாடம் திரையுலகில் எல்லா காலத்திலும் பின்பற்றப்படுகிறது.
அதனை முதன்மையாகக் கொண்டு, அப்போதைய ட்ரெண்டை உணர்ந்து திரைக்கதைகள் அமைக்கும் வல்லமை பெற்றவர் வாசு.
அதனாலேயே நடிகனில் சத்யராஜ் – கவுண்டமணியின் லொள்ளுக்கு முக்கியத்துவம் தந்தவர், சின்னத்தம்பியில் பிரபுவின் பாசத்திற்கும் வெகுளித்தனத்திற்கும் வெளிச்சம் கூட்டியிருப்பார்.
அந்த வரிசையில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, விசு, மனோரமா, பண்டரிபாய், சரத் சக்சேனா என்று வெவ்வேறுவிதமாகப் பரிமளிக்கும் நடிப்புக் கலைஞர்களைக் கொண்டு அவர் தந்த படம் ‘மன்னன்’.
வாசு இயக்கியவற்றில் எனது பேவரைட் படம் இது. காரணம், ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று ஒரு மசாலா படத்திற்கான அத்தனை அம்சங்களும் சரியான கலவையில் அமைந்த படம் இது.
அவர் இயக்கிய இதர படங்களில் ஏதேனும் ஒன்றைக் கூட்டியோ, குறைத்தோ திரைக்கதை அமைத்திருப்பார். இதில் அந்த பேச்சுக்கே இடமில்லை.
‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்திற்குப் பிறகு ‘தர்மதுரை’, ‘தர்மத்தின் தலைவன்’ உள்ளிட்ட சில படங்களில் நம்மைச் சிரிக்க வைத்திருப்பார் ரஜினி. சில படங்களில் அவரது நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் துருத்தலாகத் தலைநீட்டும்.
அதிலிருந்து விலகி, அவரது கதாபாத்திரத்திற்கும் கதையமைப்புக்கும் பொருந்தும் வகையிலான நகைச்சுவை நடிப்பு ‘மன்னனில்’ வெளிப்பட்டிருக்கும்.
சின்னத்தம்பி படம் பார்க்கச் சென்றுவிட்டு விஜயசாந்தியிடம் ரஜினியும் கவுண்டமணியும் பரிசு வாங்குவது அதற்கொரு உதாரணம்.
இப்படி ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து, படத்திற்குப் படம் தனது திரைக்கதை ட்ரீட்மெண்டை மாற்றியதே வாசுவின் வெற்றி.
அதனாலேயே ‘லவ்பேர்ட்ஸ்’ தோல்விக்குப் பிறகும் அவரால் ‘ஆப்தமித்ரா’வும் ‘சந்திரமுகி’யும் தர முடிந்தது.
இப்போதைய தலைமுறைக்கும் பிடிக்கும் வகையில் ‘சந்திரமுகி 2’ பயணத்தை மேற்கொள்ள வைத்திருக்கிறது.
தொடரும் பயணம்!
தொடர்ச்சியான வெற்றிகளும், தொடர் தோல்விகளும் திரையுலகில் மிகச்சாதாரணமான விஷயம்.
அதனை எதிர்கொண்டு சோர்ந்துவிடாமல், போதும் என்று நின்றுகொள்ளாமல், இடைவிடாமல் பயணத்தைத் தொடர்வது நிச்சயம் சாதாரணமானதல்ல.
அதற்குப் பொறுமையும் அர்ப்பணிப்பும் மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையோடு பொருந்தக்கூடிய இளமையான மனப்பாங்கும் வேண்டும். ‘சந்திரமுகி 2’ அதனைப் பிரதிபலிக்கும் என்று நம்பலாம்.
இதுநாள்வரையிலான திரையுலக அனுபவத்தின் துணையோடு, இனிவரும் நாட்களில் ‘பீல்குட்’ படங்களைத் தர பி.வாசு முன்வர வேண்டும்.
ஏனென்றால், ஒரு நல்ல கதைக்குத் திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியுமென்ற வித்தை அவருக்குத் தெரியும்.
அவரது படங்களில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களை விலக்கிவிட்டு, அவற்றுக்கு ‘கிளாசிக்’ முலாம் பூசினாலே போதும்; அத்தகைய சித்திரங்கள் நமக்கு காணக் கிடைக்கும். தொடரும் பி.வாசுவின் திரைப்பயணம் அதனைச் சாத்தியம் ஆக்கட்டும்!
– உதய் பாடகலிங்கம்