உலகத் தலைவர்கள் விரும்பி சாப்பிட்ட இட்லி, சாம்பார்!

டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ள ‘ஜி-20’ உச்சி மாநாட்டு முடிவுகளை ஊடகங்கள், திகட்ட திகட்ட ஒளிபரப்பி ஓய்ந்து விட்டன.

மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஊர்தியும், உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தும் அதிகமாக வெளிச்சத்துக்கு வராத விஷயங்கள்.

அது குறித்து ஓர் அலசல்.

அமெரிக்க அதிபர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் தாங்கள் பயன்படுத்தும் உடைகளை மட்டுமில்லாமல், சொந்த ஊர்தியையும் கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தனது ஊர்தியோடு தான் வந்திருந்தார்.

அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும்.

பைடன் பயன்படுத்தும் காரும் முன் கூட்டியே டெல்லி வந்து சேர்ந்து விட்டது. அந்த வாகனத்தில் தான் பைடன் இரண்டு நாட்களும் டெல்லியைச் சுற்றி வந்தார்.

சமான்ய மக்களை மட்டுமல்லாமல், மேட்டுக்குடி மக்களையும் வாய் பிளக்க வைத்தது அந்த சொகுசு கார்.

அப்படி என்ன இந்த காரில் ஸ்பெஷல்?

அதிபர் காரில் நிறைய சிறப்பு அம்சங்கள் உண்டு.

டெல்லியில் ஜோ பைடன் வலம் வந்த பீஸ்ட் காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடிவமைத்து அறிமுகம் செய்தது.

* இதன் எடை சுமார் 9 ஆயிரம் கிலோ. இதில் 7 பேர் பயணம் செய்யலாம். ஆனால் அதிபர் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.

*இந்த காரில் அவசர காலத்தில் பயன்படுத்த அதிபரின் குரூப் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

* ரசாயன தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் இருக்கும் அதிபருக்கு பாதிப்பு ஏற்படாது. டயர் பஞ்சர் ஆனாலும் கார் ஓடும்.

*இருள் சூழ்ந்த பகுதியை பார்க்கும் கருவிகள், எதிரிகளின் வாகனம் பின்தொடர்வதைத் தடுக்க எண்ணெய் பீய்ச்சி அடிக்கும் சாதனம் போன்றவை இந்த காரில் உண்டு.

* காருக்கு சம்மந்தம் இல்லாதவர்கள், கார் கதவை திறப்பதைத் தடுக்கும் வகையில் அதன் கைப்பிடியில் 120 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி ’ஷாக்’ கொடுக்கும் வசதிகளும் உள்ளன. தொட்டால் கை வெந்து போகும்.

*காருக்குள் ஜன்னல்களால் தனி அறையை ஒரு ஸ்விட்ச் மூலமாக உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த ஸ்விட்ச் கண்ட்ரோலை அதிபர் மட்டுமே வைத்திருப்பார்.

*அதிபரின் கார் அணிவகுப்பில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் செல்லும். அதிபர் செல்லும் கார் அவரது பாதுகாவலர்களுக்கு மட்டுமே தெரியும்.
*இதன் விலை 12 கோடி ரூபாய்.

உலகிலேயே தற்சமயம் மிகவும் பாதுகாப்பான வாகனமாக ஜோ பைடனின் ‘தி பீஸ்ட்’ விளங்குகிறது.

குடியரசுத் தலைவர் அளித்த விருந்து

மாநாட்டின் முதல் நாள் உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு இரவு விருந்து அளித்தார். பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் விருந்தோம்பல் நிகழ்வு நடைபெற்றது.

உலகத் தலைவர்களை பிரதமர் மோடி கைகளை கோர்த்துக்கொண்டு விருந்திற்கு அழைத்துச் சென்றார்.

உலகத் தலைவர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற சுவையான 83 உணவுகளை தேர்வு செய்து, உலக தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது.

பிரபல ஓட்டல் நிறுவனமான தாஜ் ஓட்டல் உணவு ஏற்பாடுகளை கச்சிதமாக செய்திருந்தது.

விருந்தில் பரிமாறப்பட்ட சில குறிப்பட்ட ரகங்கள்:

பருப்பு-பாதாம் புட்டு, மிஷ்ரி மாவா, கீர், கேரட் அல்வா, மோட்டிச்சூர் லட்டு, உலர்ந்த பழங்கள் – இனிப்புகள், வால்நட் – அத்தி புட்டிங், காஷ்மீர் காவா, வடிகட்டிய காபி, டார்ஜிலிங் தேநீர், பான் சுவை சாக்லேட் இலைகள், தினைப் பொருட்கள், சமோசா, பரதாஸ் போன்றவையோடு தென் மாநிலங்களை சேர்ந்த உணவு ரகங்களும் விருந்தில் இடம் பெற்றன.

இட்லி, சாம்பார்,  ஊத்தப்பம், மசாலா தோசை, மைசூர் தோசை உள்ளிட்டவை மெனுவில் இடம் பெற்றன.

இவற்றை உலகத் தலைவர்கள் ருசித்து சாப்பிட்டுள்ளனர்.

விருந்தில் சைவ உணவுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அசைவ உணவுகளும் மது வகைகளும் தவிர்க்கப்பட்டன.

மனதிலும், நாவிலும் தித்திப்புடன் விருந்தினர்கள், தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுப் போனார்கள்.

-பி.எம்.எம்.

You might also like