“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா?
வீட்டளவிலும் பல வேற்றுமொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும்.
தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று.
தமிழர் உயர்தல் வேண்டும்; உலக நாடுகளின் மன்றத்தில் தமிழர் இடம் பெற்றால் தமிழும் அங்கு இடம் பெறல் வேண்டும்.
ஆனால் தமிழர்களில் சிலர் தாம் உயர முயல்கின்றனர்; தமிழ் உயர விரும்பிலர். தம் உயர்வுக்குத் தடையெனக் கருதுகின்றனர்.
வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் எல்லாரும் எங்குச் சென்றாலும் தம் மொழியிலேயே பேசுகின்றனர்.
ஆனால், தமிழர்களோ தம் நாட்டிலேயே தமிழில் பேசுவதற்குக் கூச்சப்படுகின்றனர்.
தமிழில் பேசுதற்கு நாணுறும் தமிழன், தமிழனாகப் பிறந்ததற்கும் நாண வேண்டியவனே.
வையம் அளந்த தமிழ், வானம் அளந்த தமிழ் என்று கூறிக்கொண்டு தம் வயிற்றை அளந்து கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து மறுமலர்ச்சி பெற்றுவிடாது”
– தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்.