சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய நாயகன்!

 – நடிகர் முரளியின் நினைவுதினம் இன்று

சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் – ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள்.

ஆனால், எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருப்பவர்கள் மிகச்சிலரே. அந்த ஹீரோ நடிகர்கள், இந்த ஹீரோ நடிகர்கள் என ஹீரோ நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் முரளி.

கன்னடத் திரையுலகில், சித்தலிங்கையா மிகப்பெரிய தயாரிப்பாளர். எண்ணற்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் உருவான படம் என்றாலே  ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். பின்னாளில், தன்னுடைய மகன், தமிழில் இந்த அளவுக்கு மிகப்பெரிய நடிகராக வருவார் என்றோ, ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகனாக வலம் வருவார் என்றோ அன்றைக்கு அவரும் நினைக்கவில்லை. தன்னைப் பற்றி முரளியும் நினைக்கவில்லை.

84ம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார் முரளி.

அப்போது அவருக்கு வயது 20. அதே வருடத்தில், தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார்.

கே.பாலசந்தரின் கவிதாலயாவின் துணை பேனரில், கைலாஷ் கம்பைன்ஸ் பேனரில், பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் ஜானின் இயக்கத்தில் ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியானது.

முரட்டுத்தனமும் பிள்ளை குணமும் கொண்ட கல்லூரி இளைஞன் வேடம் முரளிக்கு அழகாகப் பொருந்தியது.

சொல்லப்போனால், முதல் படத்தில் மட்டுமல்ல… முக்கால்வாசி படங்களில், கல்லூரி இளைஞராக வலம் வந்தது, அநேகமாக முரளி எனும் ஒரேயொரு நடிகராகத்தான் இருக்கும்.

வீரம், ஆவேசம், துடிப்பு, காதல், காதலிக்குக் கட்டுப்படுதல், அவலத்தை எதிர்த்தல் என்று முதல் படத்திலேயே ஸ்கோர் அடித்து முன்னேறினார்.

கருகருவென நிறமும் வெள்ளைவெளேரென கண்களும் ரொம்பவே ரசிகர்களை ஈர்த்தன. 85ம் ஆண்டிலேயே ‘புதிர்’ படத்தில், இரட்டை வேடத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நிலையான இடம் கிடைத்தது முரளிக்கு.

முரளியா… சம்பளக் கெடுபிடி செய்யமாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். முரளியா… எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடித்துக் கொடுப்பார் என்று இயக்குநர்கள் சொன்னார்கள். முரளியின் படங்கள் முதலுக்கு மோசம் செய்யாது என்று விநியோகஸ்தர்கள் மகிழ்ந்து போனார்கள்.

எண்பதுகளில், சுமாரான படம் என்றாலே நாற்பது நாள், ஐம்பது நாள் ஓடிவிடும். கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், மோகன் என்று பல நடிகர்கள் தங்களுக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ வைத்திருந்தார்கள். அப்படியொரு மார்க்கெட் வேல்யூ கொண்ட நடிகராக முரளியும் உயர்ந்தார்.

முரளி இன்றைக்கு இருந்திருந்தால், கல்லூரி மாணவ ஹீரோவாக இன்றைக்கும் வலம் வந்துகொண்டிருப்பார் என்று மட்டும் நம்பத் தோன்றுகிறது.

You might also like