தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’ படத்தின் தோல்வின்போது. அவரே தயாரித்த பாபா படம். அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுத்தார்.
‘ரஜினியின் ஆட்டம் குளோஸ். இனி தேற மாட்டார்’ என அப்போது கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலவியது. இதனைத் தொடர்ந்து அவர் சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்க பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில் நடித்தார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான அந்தப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. சாந்தி தியேட்டரில் ஒரு ஆண்டு ஓடியது.
அதன் வெற்றி விழாவில் தான் தனது ஆதங்கத்தை கொட்டினார் ரஜினிகாந்த்.
“நான் யானை இல்லை. குதிரை. யானை இடறி விழுந்தால் எழுந்து நிற்க நேரமாகும். ஆனால் குதிரை இடறி விழுந்தால் சடார்னு எழுந்துடும், நானும் சந்திரமுகி வெற்றியால் சடக்கென எழுந்து குதிரை என்பதை நிரூபிச்சிட்டேன்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.
25 ஆண்டுகள் கழித்து இப்போதைய சூழலுக்கு வருவோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் குதிக்கப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த், திடீரென பின் வாங்கினார்.
அப்போது அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார். தேர்தலுக்கு பின்னர் வெளியான அண்ணாத்த படம் ஓடவில்லை.
இதனால் அந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்து ’ஜெயிலர்’ படத்தில் நடித்துக் கொடுத்தார். படம் பிரமாண்ட வெற்றி. இதுவரை ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
மகிழ்ச்சி அடைந்துள்ள தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ஹீரோ தொடங்கி இயக்குநர் வரை ஒவ்வொருவருக்கும் கார் பரிசளித்து வருகிறார்.
அண்மையில் ரஜினியை சந்தித்த கலாநிதி மாறன், காசோலை ஒன்றை வழங்கினார். படம் வெற்றி பெற்றதால் வழங்கப்பட்ட கூடுதல் சம்பளம் அது.
அதன் தொகை குறித்து இப்போது தெரிய வந்துள்ளது. 100 கோடி ரூபாய். ரஜினிக்கு ஜெயிலரில் நடிக்க ஏற்கனவே 110 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருந்தது.
இப்போது கொடுக்கப்பட்ட அதிக சம்பளத்தை சேர்த்தால் ரஜினி ஜெயிலரில் நடிப்பதற்காக வாங்கிய மொத்த ஊதியம் 220 கோடி ரூபாய் ஆகிறது.
இந்தியாவில் இவ்வளவு சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ-ரஜினிகாந்த் தான்.
ஆம். இந்தியாவில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நாயகனாக உயர்ந்துள்ளார், சூப்பர்ஸ்டார்.
அடுத்த படமும் ஜெயிலர் போலவே ஹிட் அடித்தால் ரஜினி சம்பளம் இன்னும் உயரும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கலாநிதி மாறன், ரஜினிக்கு வழங்கிய சொகுசு கார் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட கார் BMW X7 ரக கார் ஆகும். இதன் விலை 1.23 கோடி ரூபாய். இதில் 6 பேர் பயணிக்கலாம். பயணிகளுக்கு சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் வசதி உள்ளது.
அதிக பட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.
இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரையும் கலாநிதி மாறன் சந்தித்து காசோலை அளித்தார்.
இருவருக்கும் Porsche ரக சொகுசு கார்களை பரிசாக வழங்கினார். இந்த காரின் விலை. 1.43 கோடி ரூபாய். இந்த காரில் அதிகபட்சமாக மணிக்கு 259 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம்.
ஜெயிலரில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சில காட்சிகளில் வந்து போன தமன்னா மற்றும் வில்லனாக நடித்த விநாயகன் ஆகியோருக்கும் கார் பரிசாக வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கலாநிதி மாறன் கவனத்துக்கு இந்த தகவல்கள் சென்றதா? என தெரியவில்லை.
– பி.எம்.எம்.