பரம்பொருள் – மீண்டும் ஒரு ‘போர்த்தொழில்’?!

‘போர்த்தொழில்’ பட வெற்றிக்குப் பிறகு வெளியாகும் சரத்குமார் படம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது ‘பரம்பொருள்’. ‘வேலையில்லா பட்டதாரி’யில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான், இதில் அவரோடு இணைந்து நடித்திருக்கிறார். இவற்றைத் தாண்டி, சிலைக்கடத்தல் பின்னணியில் அமைந்திருப்பதைச் சொன்னது இப்படத்தின் ட்ரெய்லர். இவையனைத்தும் ஒன்று சேர்ந்து, ‘மீண்டும் ஒரு போர்த்தொழில்’ அனுபவம் கிடைக்குமென்ற நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

அதற்கேற்ப, பரம்பொருள் படம் நமக்கு நல்லதொரு காட்சியனுபவத்தை வழங்குகிறதா?

சில கதைகள்!

பழங்காலப் பொருட்களை விற்பனை செய்யும் சற்குண பாண்டியனிடம் பணியாற்றுகிறார் ஆதி (அமிதாஷ் பிரதான்). ஒரு விபத்தில் சற்குணம் மரணமடைய, அந்தக் கடை மூடப்படுகிறது. ஆதி வேலை இழக்கிறார்.

சென்னையில் ஒரு பெரிய வீட்டில் ஆதியின் தங்கை இருக்கிறார். குடல் நசிவு நோயால் அவர் அவதிப்படுகிறார். அதனைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சையைச் செய்ய 50 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆதி ஒரு வீட்டுக்குத் திருடச் செல்கிறார்.

இன்ஸ்பெக்டர் மைத்ரேயன் (சரத்குமார்) ஒரு நேர்மையற்ற போலீஸ் அதிகாரி. தனக்குப் பணம் கிடைக்கும் என்றால், எந்த வேலையையும் செய்யத் துணிபவர். அப்படிப்பட்டவரின் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சிக்கிறார் ஆதி. அப்போது, அவரிடம் பிடிபடுகிறார். ஆதியை விசாரிக்கையில், அவர் சற்குணத்திடம் வேலை செய்தது மைத்ரேயனுக்குத் தெரிய வருகிறது.

சற்குணம் கும்பலைச் சார்ந்தவர்களிடம் விலை மதிப்புமிக்க சிலைகள் இருப்பதாக ஒரு தகவல் மைத்ரேயனுக்குக் கிடைக்கிறது. அந்தக் காரணத்தால், ஆதியைக் கொண்டு அந்த சிலைகள் மூலமாகப் பெரிதாகப் பணம் பண்ணலாமா என்று நப்பாசை படுகிறார். ஆதியை அதற்குப் பயன்படுத்துகிறார்.

அப்போது, ஒரு கும்பலிடம் வெண்கலச் சிலையொன்று இருப்பது தெரிய வருகிறது. நேரில் சந்திக்கும்போது, மைத்ரேயனும் ஆதியும் அந்தக் கும்பலோடு மோத வேண்டிய சூழல் உருவாகிறது. அப்போது, அந்தச் சிலை அவர்கள் கைக்கு மாறுகிறது.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சிலையை விற்கும் வேலையில் ஆதி, மைத்ரேயன் இருவரும் இறங்குகின்றனர். அப்போது, வெளிநாட்டில் வசித்துவரும் ஒரு தொழிலதிபர் (ராமகிருஷ்ணன்), கலையார்வலர் (வின்சென்ட் அசோகன்) என்று இரண்டு பேரின் அறிமுகம் கிடைக்கிறது. சரியான விலை கிடைக்காத காரணத்தால், அந்தச் சந்திப்பு வீணாகிறது.

அதற்கடுத்த நாள், மைத்ரேயன் சொல்லும் விலையைக் கொடுக்க அவர்கள் தயாராகின்றனர். ஆனால், அதற்குள் சிலையைப் பறிகொடுத்த கும்பல் மீண்டும் மைத்ரேயனையும் ஆதியையும் புரட்டி எடுக்கிறது. அந்தக் களேபரத்துக்கு நடுவே, அந்த சிலை உடைபடுகிறது. அதனைச் சரி செய்வதற்குப் பதிலாக, அதேமாதிரியான ஒரு சிலையை உருவாக்கும் திட்டத்தில் இருவரும் இறங்குகின்றனர். அதற்கேற்ப, அந்த சிலைக்கடத்தல் நபர்களிடம் பத்து நாட்கள் அவகாசம் கேட்கிறார் மைத்ரேயன்.

அந்தக் கால அவகாசத்தில் புதிய சிலை தயாரானதா? அதனை அந்த கடத்தல் பேர்வழிகள் நம்பினார்களா? தனது ஆதாயத்திற்காக யாரை வேண்டுமானாலும் பலிகடா ஆக்கத் தயாராக இருக்கும் மைத்ரேயன் பிடியில் இருந்து ஆதி தப்பினாரா என்று சொல்கிறது ‘பரம்பொருள்’.

இந்த படத்தில் மைத்ரேயன் தனது மனைவியையும் மகளையும் விட்டுப் பிரிந்து வாழ்கிறார் என்றொரு கிளைக்கதை உண்டு. அதனால், அவரது மனைவியின் தங்கை (காஷ்மீரா) சிற்பக்கலை பயின்றவர் என்றொரு விஷயமும் திரைக்கதையில் முக்கியமான இடத்தை வகிக்கிறது.

போலவே, வீடு அபகரிப்பு தொடர்பான வழக்கொன்றில் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடிய நபர் (பாலாஜி சக்திவேல்) ஒருவரைப் பற்றியும் இக்கதை பேசும். சிலைக்கடத்தல் கும்பலிடம் அவர் பணியாற்றுவதாகத் திரைக்கதை விரியும்.

இப்படிச் சில கதைகள் இந்தப் படத்தில் உண்டு. அவற்றை ஒன்றிணைத்த வகையில், ஒரு முழுமையான காட்சியனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சி.அரவிந்த்ராஜ்.

அசத்தும் சரத்!

நாயகனாக நடித்துள்ள அமிதாஷ், ஏற்கனவே சில படங்களில் தோன்றி நமக்கு அறிமுகமானவர். அதோடு, பல நாடகங்களில் பங்கேற்றவர். அதனால், அவரது நடிப்பு உறுத்தலாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், கதையின் நாயகன் என்பதைத் தாண்டி ’கமர்ஷியல் ஹீரோ’ ஆக ‘ஸ்கோர்’ செய்வதற்கான இடங்கள் கிளைமேக்ஸ் காட்சியிலேயே அவருக்குக் கிடைக்கின்றன.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில் அசத்திய காஷ்மீரா, இதில் ரொம்பவே சதை போட்டிருக்கிறார். ஆனாலும், அழகாகத் திரையில் தெரிகிறார். அவருக்கான காட்சிகள் திரைக்கதையில் மிகக்குறைவு.

அமிதாஷின் தங்கையாக நடித்தவர், கண்களில் குழிகள் விழுந்த தோற்றத்தோடு வந்து போயிருக்கிறார். அதுவே, அவர் ஏற்ற பாத்திரத்தின் மீது அனுதாபத்தைக் கூட்டுகிறது.

முன்பாதியில் கடனே என்று வந்து போனாலும், பின்பாதியில் வரும் காட்சியொன்றில் கைத்தட்டல் பெறுகிறார் பாலாஜி சக்திவேல்.

ரவி வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத், டி.சிவா, பவா செல்லதுரை உட்பட சுமார் ஒரு டஜன் பேர் இதில் நடித்துள்ளனர்.

முக்கியமாக, போர்தொழில் போன்று இதிலும் காவல் துறை அதிகாரியாக வந்தாலும், அதனைக் கொஞ்சமும் நினைவூட்டாத அளவுக்குத் தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் சரத்குமார். நுணுக்கமான பாத்திரச் சித்தரிப்புக்கு ஏற்ப அமைந்துள்ள அவரது அசத்தல் நடிப்புதான் இப்படத்தின் பெரும்பலம்.

திரைக்கதையில் நிரம்பியிருக்கும் பரபரப்பைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் பங்காற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.பாண்டிக்குமார்.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் பணியானது, பெரிதாகக் குழப்பம் இன்றி கதை சொல்ல உதவுகிறது. ஆனாலும், அமிதாஷ் பாத்திரத்தின் பின்னணியைச் சொல்வதில் இன்னும் கொஞ்சம் அவர் கவனம் காட்டியிருக்கலாம்.

குமார் கங்கப்பனின் கலை வடிவமைப்பானது, ஒவ்வொரு பிரேமும் அழகுற இருக்க வேண்டுமென்பதில் கவனம் செலுத்தவில்லை; மாறாக, காட்சிகளின் தன்மைக்கேற்ற உழைப்பைத் தந்துள்ளது. ஆனால், காதல் காட்சிகளில் அந்த நியதியை மறந்திருக்கிறது.

‘அடியாத்தி’ பாடலுக்காக தியேட்டருக்குள் நுழைபவர்களை ‘ரிப்பர’ தந்து ‘கூல்’ ஆக்குகிறார் யுவன் சங்கர் ராஜா. ‘அசைவின்றி’ பாடல் நல்லதொரு மெலடி மெட்டு. ஆக்‌ஷன், த்ரில் காட்சிகளுக்கேற்ப பின்னணி இசை அமைத்து, ‘இன்றைய தலைமுறையினருக்கும் நானே பிஜிஎம் கிங்’ என்று நிரூபித்திருக்கிறார்.

சிலைக்கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு சுவாரஸ்யமான படமொன்றைத் தர முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சி.அரவிந்த்ராஜ். கிளைமேக்ஸ் திருப்பம் நமக்கு ஆச்சர்யம் தர வேண்டுமென்று அவர் மெனக்கெட்டிருப்பது அருமை. அதற்காக, முன்பாதி லாஜிக் மீறல்களை அப்படியே விட்டிருக்க வேண்டாம்.

நாயகன், நாயகி இடையிலான ரொமான்ஸ் காட்சி துருத்தலாகத் தெரியவில்லை என்றபோதும், நாயகியின் குடும்பப் பின்னணியை இன்னும் கொஞ்சம் விலாவாரியாகக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

போலவே, நாயகன் யார் என்பது பற்றி சரத்குமார் பாத்திரம் விசாரிக்கவே இல்லையா என்ற கேள்வியும் இக்கதையில் எழும். அதனைச் சரிசெய்ய மறந்திருக்கிறார் இயக்குனர்.

இது போன்று சில குறைகள் படத்தில் உண்டு.

போர்த்தொழிலாக மாறுமா?

‘பரம்பொருள்’ இன்னொரு போர்தொழில் ஆகுமா? இந்தக் கேள்வியே, இப்படம் வெளிவருவதற்கு முன்னர் திரையுலகில் நிலவியது. அந்த எதிர்பார்ப்பு பெருமளவுக்குப் பொய்க்கவில்லை; அதேநேரத்தில், அதேபோன்றதொரு திருப்தியை இப்படம் தராது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.

சரத்குமார் ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரம் நிச்சயமாக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும். அதற்கேற்ப, அப்பாத்திரத்தை நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ். அதனைச் சார்ந்தே, மொத்தக் கதையையும் அமைத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், இக்கதையை மிக எளிமையாகத் திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதனால், ’பரம்பொருள்’ படத்தைப் பார்த்து நிச்சயம் ‘த்ரில்’ அனுபவம் பெறலாம்; ஆனால், ‘போர்தொழில்’ குறித்த பிம்பங்களை மட்டும் மூளையில் இருந்து அகற்றிவிட வேண்டுமென்பது இப்படத்தைப் பார்ப்பதற்கான நிபந்தனைகளில் மிக முக்கியமானது!

– உதய் பாடகலிங்கம்

You might also like